பருவநிலை மாற்றம்: நாகையில் சத்தமின்றி நடக்கும் சமூக வானொலி புரட்சி

Posted on ஜூன் 4, 2021

0


துர்கா, களஞ்சிய சமூக வானொலி

“பொறியியல் பட்டப்படிப்பை முடித்து விட்டு இங்கு வேலைக்கு சேர்ந்தபோது கொஞ்ச நாள் இருந்து விட்டு வேறு வேலை தேடிக்கொள்ளலாம் என நினைத்து வந்தேன். ஆனால், நாளடைவில் இந்த வேலை, இங்குள்ள மக்களுடன் அன்றாடம் தொடர்பில் இருந்து அவர்களுக்காக வழங்கும் சேவை என்னை ஈர்த்து விட்டது,” என்கிறார் நாகப்பட்டினத்தின் விழுந்தமாவடி கிராமத்தில் உள்ள களஞ்சியம் சமூக வானொலியின் நிலைய மேலாளர் துர்கா.

இங்கு இவர் பணிக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகளாகின்றன.

“இப்போது புயல் வந்தால் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் எங்கு செல்ல வேண்டும்?,” “புவி வெப்பமயமாதலின் பாதிப்புகளை விவரிக்க முடியுமா?” – இப்படிப்பட்ட கேள்விகளுக்கு எளிமையாகவும், இயல்பாகவும் பதில் தரக்கூடியவர்களாக இருக்கிறார்கள் நாகையில் இந்த வானொலி நிலையத்தில் பணியாற்றி வரும் நிகழ்ச்சி வழங்குநர்கள்.

பருவநிலை மாற்றம், புயல் அபாயம், கன மழை என இயற்கையாக மனிதர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய தீர்வை தரக்கூடியவர்களாக நாகப்பட்டினத்தில் உள்ள சுமார் 20 கிராமவாசிகள் காணப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அவர்களை தயார்படுத்துவதில் சத்தமில்லாமல் ஒரு விழிப்புணர்வை இந்த வானொலி சேவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சமூக வானொலியின் நிலைய மேலாளர்களில் ஒருவரான துர்கா, “காலை 6 மணிக்கே எங்களுடைய வேலை தொடங்கி விடுகிறது. முதல் பகுதியை மற்றொரு நிலைய மேலாளரான அன்பரசன் கவனித்துக் கொள்கிறார். படிப்படியாக நாங்கள் நிலைய ஒலிபரப்புப் பணியை கவனித்துக் கொள்கிறோம். எங்களுடைய வேலை மாலை 6 மணி வரை இருக்கும்,” என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

களஞ்சிய சமூக வானொலி தன்னார்வலர்கள்

தமிழக தலைநகர் சென்னையில் இருந்து 320 கி.மீ தூரத்தில் உள்ளது விழுந்தமாவடி கிராமம். இங்குள்ள சுற்று வட்டாரத்தின் 7 முதல் 8 கிராமங்களில் குறிப்பாக பேரிடர் பாதிப்பு அதிகம் உள்ள நாகை பகுதிகளில் இவர்களுடைய சமூக வானொலி சேவை பிரபலம். இந்த சமூக வானொலியை சுமார் 20 கி.மீ தூரத்துக்கு கேட்கலாம். 90.8 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் சமூக வானொலி நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகின்றன.

நகரங்களில் தனியார் பண்பலை வானொலிகள் நகரவாசிகளை வெகுவாக ஈர்க்கும் வேளையில், உள்ளூர் செய்திகளுக்கு அகில இந்திய வானொலி மற்றும் பண்பலை நிகழ்ச்சிகளை பிற நகரங்கள் நம்பியிருக்கிறார்கள்.

“இந்த காலகட்டத்தில் கிராமங்களின் தொடர்புப்பாலமாக சமூக வானொலி வேகமாக மாறி வருகிறதென்றால் அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது, இங்குள்ள சமூக வானொலி,” என்கிறார் துர்கா.

“பல இன்னல்களுக்கு இடையில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் சமூக வானொலிகளில் இதுவும் ஒன்று. பல முறை இந்த வானொலியின் ஒலிபரப்பி விழுந்தது. இப்போது ஸ்திரமாக அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. அதற்கு காரணம் கிராமங்கள்தோறும் கிராம மக்களை ஒன்றிணைத்து அவர்களையும் நிகழ்ச்சியில் பங்களிக்கும் நபர்களாக மாற்றியது தான்,” என ஜெய்சக்திவேல் என்கிற ஒரு நேயர் தனது வலைபக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

களஞ்சிய சமூக வானொலி

புவி வெப்பநிலையை தீர்மானிப்பவை பசுங்குடில் வாயுக்கள் தான். சூரியனில் இருந்து வெளியாகும் வெப்பம் பூமிக்கு வந்து அங்கு பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள வெப்பம் அகச்சிவப்புக் கதிர்களாக எதிரொலிக்கும்.

அவற்றை வளி மண்டலத்தில் உள்ள பசுங்குடில் வாயுக்கள் உறிஞ்சி வைத்துக் கொள்ளும். வளிமண்டலத்தில் பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதிக வெப்பத்தை அவை உறிஞ்சிக் கொள்ளும்.

அதற்கேற்ற வகையில் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. பசுங்குடில் வாயுக்கள் மட்டும் இல்லாவிட்டால் புவி வெப்பநிலை மைனஸ் 18 டிகிரியாக இருக்கும். பசுங்குடில் வாயுக்களின் அடர்த்தி அதிகரிக்க, அதிகரிக்க புவி வெப்ப நிலையும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இது தான் புவி வெப்பமயமாதலின் அடிப்படை.

ஐரோப்பிய நாடுகளில் தொழிற்புரட்சி ஏற்பட்ட பிறகு தான் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியது. அதற்கு முன் உலகின் சராசரி வெப்பநிலை 14 டிகிரி செல்சியசாக இருந்தது. இப்போது அது சராசரியாக ஒரு டிகிரி கூடி 15 டிகிரி செல்சியசாக அதிகரித்துள்ளது. அடுத்த 30 முதல் 40 ஆண்டுகளில் வெப்பநிலை உயர்வு இன்னும் பல மடங்கு அதிகரிக்கும். அதை 2030-ம் ஆண்டுக்குள் 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் கட்டுப்படுத்துவதே உலகின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.

களஞ்சிய சமூக வானொலி நிலையம்

இந்த புரிந்துணர்வின் அடிப்படையை உணர்ந்தவர்களாக காணப்படுகிறார்கள், களஞ்சியம் வானொலி நிலைய நிகழ்ச்சி வழங்குநர்கள். இவர்கள் தங்களுடைய வானொலிக்கான நிகழ்ச்சிகளை, நிலையத்தில் இருந்து ஒரு வழிப் பாதை போல ஒலிபரப்பாமல், மக்களிடம் நேரடியாக சென்று அவர்களுடைய கருத்துகளை பதிவு செய்கிறார்கள்.

இதற்காக இவர்களின் நிலையத்தில் கிராமவாரியாக 12 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள், கிராமந்தோறும் சென்று உள்ளூர் மக்களின் பிரச்னைகளை அறிகிறார்கள். அவர்களின் குறைகளை கேள்விகளாக தொகுத்து, சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் எழுப்புகிறார்கள். அவர்களின் பதில்களைப் பதிவு செய்து தங்களுடைய நிகழ்ச்சியில் களஞ்சியம் குழுவினர் ஒலிபரப்புகிறார்கள்.

தங்களின் இந்த பாணியே, நாகையின் சில கிராமங்களைச் சேர்ந்தவர்களை, களஞ்சியம் சமூக வானொலியின் நிரந்தர நேயர்களாக மாற்ற உதவியிருக்கிறது என்று இதன் நிகழ்ச்சி வழங்குநர்கள் பெருமிதப்படுகிறார்கள்.

களஞ்சிய சமூக வானொலி பணியாளர்கள் & தன்னார்வலர்கள்

இந்த நிலையத்தின் பணிகளை மேற்பார்வையிடும் திட்ட தலைமை நிர்வாகி முத்துக்குமாரவாமி.

தன் ஃபவுண்டேஷன் (Dhan Foundation) என்ற அரசு சாரா அமைப்பில் ஆரம்பகாலம் தொட்டு இவர் இங்கு பணியாற்றி வருகிறார். மதுரையில் இருந்தபோதும் மாதமிருமுறை நாகை வானொலி நிலைய சேவையின் செயல்பாடு மற்றும் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்து வருவதாக இவர் கூறுகிறார்.

சுய உதவிக்குழு, நீர் மேலாண்மை, சமுதாய வானொலி மூலம் விழிப்புணர்வு, பெண்களையும் கிராமவாசிகளையும் ஈடுபடுத்தி செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது தங்களின் நோக்கம் என தங்களின் சேவையை பட்டியலிடுகிறார் முத்துக்குமாரசுவாமி.

பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை விவரிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தன்னார்வலர்கள், கால்நடை பராமரிப்பு, மழை, வெள்ள பாதிப்புகளை சமாளிப்பது போன்ற பணிகள் பற்றிய விழிப்புணர்வை இடைவிடாது வழங்கி வருவதாக களஞ்சியத்தின் பங்கேற்பாளர்கள் கூறுகிறார்கள்.

இவர்களின் இந்த முயற்சியை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. மாவட்ட பேரிடர் மேலாண்மை துறையினர் வழங்கும் புயல், வெள்ள பாதிப்பு போன்ற தகவல்களை, சமுதாய வானொலி மூலம் மக்களுக்கு இவர்களின் வானொலி உடனுக்குடன் தெரிவிக்கிறது.

களஞ்சிய சமூக வானொலி தன்னார்வலர்கள்

சில ஆண்டுகளுக்கு முன்பு கஜா புயல் தாக்கத்தின்போது, மக்கள் என்ன செய்ய வேண்டும், புயல் நிவாரண முகாம்கள் எங்கெங்கு உள்ளன போன்ற தகவல்களை கிராம மக்களுக்கு இவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் பணி, சமீபத்திய நிவர், புரெவி காலத்திலும் தொடர்ந்தது.

கொரோனா பெருந்தொற்று காலத்திலும் மக்களுக்கு தேவையான விழிப்புணர்வை களஞ்சியம் சமூக வானொலி ஏற்படுத்தி வருவதாக முத்துக்குமாரசுவாமி தெரிவித்தார்.

“கொரோனா காலத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வீடுகளிலேயே தங்கும் நிலையில் இருந்தவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நாங்கள் ஒலிபரப்பினோம். கைத்தொழில், அழகுக்குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை வழங்கி மக்கள் பொழுதுபோகவும் பயனுள்ள தகவல்களை அறிந்து கொள்ளவும் உதவினோம்,” என்று நிலைய மேலாளர் துர்கா கூறினார்.

“புயல், வெள்ள காலத்தில் கிராமத்தில் வாழும் மீனவ சமூகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினோம். பஞ்சாயத்து தலைவர்களின் உதவியுடன் கிராமங்கள் சந்திக்கும் பிரச்னைகளை கண்டறிந்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு அவற்றை கொண்டு செல்ல உதவினோம்,” என்கிறார் துர்கா.

களப்பணியில் களஞ்சி சமூக வானொலி

தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவை கடந்த 8 ஆண்டுகளில் தானே, வர்தா, ஓகி, கஜா, நிவர், புரெவி ஆகிய புயல்களை எதிர்கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோ ஒரு வடிவில் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் தான்..

இது குறித்த விழிப்புணர்வை தொடர்ச்சியாக இந்த வானொலி நிலையத்தை நிர்வகிக்கும் தன் ஃபவுண்டேஷன் அமைப்பு ஏற்படுத்தி வருகிறது. கிராம மக்களை ஒருங்கிணைக்கும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்குகள், விளக்க பொதுக்கூட்டங்கள், பயிற்சிப்பட்டறைகள் என பல வடிவங்களில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் நீள்கின்றன.

இந்த பயிற்சி பட்டறைகள் பலவும் தன்னார்வலர்கள் மற்றும் உள்ளூர் பெண்களின் பங்களிப்புடன் நடக்கின்றன. இதை நடத்துவோருக்கான பயிற்சியை மதுரையைச் சேர்ந்த அமைப்பு வழங்குகிறது. இந்த தன்னார்வலர்கள் பலரும் 15 முதல் 25 வயதுடையவர்கள். பல குழுக்களாக இவர்கள் பிரிந்து சென்று கிராமத்தின் பிரச்னைகளை கண்டறிகிறார்கள்.

களஞ்சிய சமூக வானொலி

அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் காரணமாக ஏற்படும் பாதிப்புகள், மண் வளத்தில் அதிகரிக்கும் உப்புத்தன்மை, பேரிடர் காலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்பு, மரம் நடுதலின் தேவை என பலதரப்பட்ட தகவல்களை திரட்டியும் அது தொடர்புடையவர்களிடம் பேசியும், இவர்களின் நிகழ்ச்சி திட்டங்களுக்கு ‘உரு’ கொடுக்கப்படுகிறது.

கஜா புயல் ஏற்பட்ட காலத்தில் விழுந்தமாவடி கடலோர பகுதியில் சுமார் 3 கி.மீ தூரத்துக்கு மரங்கள் விழுந்தன. இவர்களுடைய வானொலி நிலையம் அமைந்த கட்டடமும் சேதம் அடைந்தது. மணிக்கு 120 கி.மீ வேகத்தில் வீசிய காற்றின் தாக்கத்தை வானொலி ஒலிபரப்புக்கு பயன்பட்ட தொலைத்தொடர்பு கோபுரம் எதிர்கொண்டது.

சற்றே சாய்ந்த போதிலும், அந்த பேரிடரை அந்த கோபுரம் எதிர்கொண்டது. அந்த காலகட்டத்தில் பல வாரங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டபோதும், சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஒரே தொலைத்தொடர்பு இணைப்பாக விளங்கியது இவர்களின் வானொலி சேவை மட்டுமே.

பலரும் பேட்டரி பொருத்தப்பட்ட வானொலி பெட்டிகள் வழியாக இவர்களின் நிகழ்ச்சிகளை கேட்டு கள நிலவரத்தை அறிந்து தங்களை தற்தாத்துக் கொண்டார்கள்.

தமிழ்நாட்டில் களஞ்சியம் வானொலி போல எண்ணற்ற சமூக வானொலிகள் உள்ளன. ஒவ்வான்றும் ஒவ்வொரு நோக்கத்துக்காக நடத்தப்பட்டாலும் அவற்றின் நோக்கம் சமூகங்களை இணைப்பதாக உள்ளன. அந்த வகையில் தனியார் வானொலிகளுடன் ஒப்பிட முடியாதபோதும் தங்களுக்கு உட்பட்ட தொலைத்தொடர்பு வரம்பில் ஒப்பற்ற சேவையை இந்த சமுதாய வானொலிகள் வழங்கி வருகின்றன.

தமிழ்நாட்டின் முதல் சமுதாய வானொலி

தமிழ்நாட்டில் 2004ஆம் ஆண்டில் சுனாமி ஆழிப்பேரலை தாக்கத்துக்குப் பிறகு, ஒரு சமுதாய வானொலி தேவை என்ற நோக்கத்துடன் 2008ஆம் ஆண்டில் களஞ்சியம் வானொலி உருவாக்கப்பட்டது. அந்த வகையில், தமிழகத்தின் முதலாவது சமூக வானொலி சேவையாக களஞ்சியம் அறியப்படுகிறது.

பரணிதரன்பிபிசி தமிழ்

https://www.bbc.com/tamil/india-57348719