கோயம்புத்தூர் முதியோர் நடத்தும் ஆன்லைன் ரேடியோ – கொரோனா காலத்தில் ஒரு தன்னம்பிக்கை கதை

Posted on ஜூன் 27, 2021

0


கோயம்புத்தூர் முதியோர் நடத்தும் ஆன்லைன் ரேடியோ - கொரோனா காலத்தில் புதிய முயற்சி

”நான் சில மாதங்களுக்கு முன்பு மன அழுத்தத்தில் இருந்தேன். யாரிடமும் பேசிப் பழக மாட்டேன். அதிக நேரம் தனிமையில் இருப்பதையே விரும்பினேன். ஆனால், இப்போது அனைவரிடமும் சிரித்து பேசுகிறேன். புதிய மனிதர்களிடம் பேசுவதற்கும் பழகுவதற்கும் ஆர்வமாக இருக்கிறேன்” என கூறிய முதியவர் ஒருவர், தனது வயலின் இசைக்கருவியோடு நம்மையும் ‘தபோவாணி’ ஆன்லைன் ரேடியோ குழுவினரை சந்திக்க அழைத்துச் சென்றார்.

கோவை மாதம்பட்டி பகுதியில் அமைந்துள்ள ‘தபோவனம் – மூத்தோர் குடியிருப்பு’ வளாகத்தில் வசிக்கும் முதியோர்கள் ஒன்றிணைந்து, ‘தபோவாணி’ என்ற பெயரில் ஆன்லைன் ரோடியோ ஒலிபரப்பு சேவையை துவங்கியுள்ளனர். i-radiolive.com எனும் இணையதளப்பக்கத்தில் இவர்களின் நிகழ்ச்சிகள் பதிவேற்றப்பட்டு பகிரப்படுகிறது.

இக்குடியிருப்பின் ஒரு வீட்டிற்குள் நாம் சென்றபோது, மிருதங்க இசையும், வயலின் இசையும் நம்மை வரவேற்றன. தபோவாணி ஒலிபரப்பிற்கான பாடல் பதிவு துவங்கி நடைபெற்று வந்தது.

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது, பாடல் பாடுவது, இசைக்கருவிகளை வாசிப்பது, அதை பதிவு செய்வது, கம்ப்யூட்டரில் ஒலித்தொகுப்பு செய்து இணையத்தில் பதிவேற்றுவது என தபோவாணியின் அனைத்து பணிகளையும் மேற்கொள்வது அறுபது வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் குழு.

கீ.சுப்பிரமணியன்
படக்குறிப்பு,கீ.சுப்பிரமணியன்

கொரோனா பரவல் சூழலில் ஏற்பட்ட தனிமையிலிருந்து விடுபட ‘தபோவாணி’ நிகழ்ச்சிப் பணிகள் பெருமளவு உதவுவதாக தெரிவிக்கிறார் ஓய்வுபெற்ற பட்டய கணக்காளர் கீ.சுப்பிரமணியன்.

‘கடந்த 45 வருடங்களில் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்துள்ளேன். குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்கி நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட்டேன். இப்போது தபோவனம் முதியோர் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருகிறேன். இத்தனை ஆண்டுகள் தொடர்ச்சியாக வேலை செய்துவிட்டு, இப்போது எந்த வேலையும் செய்யாமல் இருப்பதே ஒரு மன இறுக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, கொரோனா ஊரடங்கு நாட்களில் தனிமையும் சேர்ந்துகொண்டு பெரும் வேதனையை தந்தது.

அந்த சூழலில்தான் ஆன்லைன் ரேடியோ ஒன்றை துவங்க இருப்பதாக ஸ்ரீதர் கூறினார். ஆன்லைன் ரேடியோ சேவை குறித்த அவரது திட்டங்களை பகிர்ந்து கொண்டார். என்னைப் போன்று பலரும் அதை உருவாக்கும் பணியில் எங்களை இணைத்துக் கொண்டோம்.’

ஸ்ரீதர் ராமமூர்த்தி
படக்குறிப்பு,ஸ்ரீதர் ராமமூர்த்தி

‘ஸ்ரீதர் எனக்கு எடிட்டிங் கற்றுக்கொடுத்தார். இந்த வயதிலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியுமா என கேள்விகள் இருந்தபோதும், ஆர்வத்தோடு கற்கத் துவங்கினேன். இப்போது, தபோவாணியில் உள்ள நிகழ்ச்சிகளில் பெரும்பாலானவற்றை நான்தான் ஒலித்தொகுப்பு செய்துள்ளேன். அதுமட்டுமின்றி, உரையாடல்கள், பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சித்தொகுப்பு என பல்வேறு பணிகளில் தொடர்ந்து என்னை ஈடுபடுத்தி வருகிறேன்.

கொரோனா பரவல் சூழலில் வீட்டில் இருந்தவாறு இப்பணிகளை மேற்கொண்டோம். தற்போது, கொரோனா குறைந்துள்ளதையடுத்து நேரில் சந்தித்தும் நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகிறோம்.

இருக்கும் நேரத்தை எப்படி எல்லாம் கழிக்கலாம் என யோசித்த காலம் மறைந்து, நிகழ்ச்சி தயாரிப்பு பணிகளுக்கு நேரம் கிடைக்காத நிலை இப்போது உருவாகியுள்ளது. இதை விட மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை’ என பூரிப்புடன் சிரிக்கிறார் சுப்பிரமணியன்.

தங்களுக்குள் இருக்கும் திறமைகளை வெளிகாட்ட, ஒரு மேடையாக ‘தபோவாணி ஆன்லைன் ரேடியோ’ விளங்குவதாக தெரிவிக்கிறார் சுஜாதா வரதராஜன்.

சுஜாதா வரதராஜன்.
படக்குறிப்பு,சுஜாதா வரதராஜன்.

‘வாழ்க்கையின் எல்லா சூழல்களையும் சந்தித்துவிட்டு, ஓய்வு எடுப்பதற்காக இங்கு வந்துள்ளோம். எங்களது பிள்ளைகள் வெளியூர்களிலும், வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனர். அவர்களோடு அதிக நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் அமைவதில்லை. இதனால், இயல்பாகவே ஒரு மன அழுத்தம் முதுமையில் ஏற்படும். அந்த மன அழுத்தத்தை, இங்கு துவங்கப்பட்டுள்ள தபோவாணி வெகுவாக குறைத்துள்ளது.

மேலும், எங்களுக்கே தெரியாமல் எங்களுக்குள் இருக்கும் திறமையை வாழ்வின் இரண்டாம் பகுதியிலாவது வெளிக்கொண்டுவர இது ஒரு மேடையாக உள்ளது. குறிப்பாக, எங்களது திறமைகளை எங்களது பிள்ளைகள் தெரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. நாங்கள் உருவாக்கும் நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்கும் எங்களது பிள்ளைகள் மற்றவர்களுக்கும் பெருமையுடன் பகிர்ந்து கொள்கின்றனர்’ என்கிறார் தபோவாணியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுஜாதா.

முதுமையை இனிமையாக்கும் இந்த ஆன்லைன் ரேடியோ சேவையை துவங்கியவர், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் நீண்ட அனுபவமிக்க, 74 வயதாகும் ஸ்ரீதர் ராமமூர்த்தி.

‘நாடு முழுவதும் முதியோர்களின் குரல்கள் ஒலிக்க ஊடகங்கள் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும்’ என இவர் வலியுறுத்துகிறார்.

‘சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றியுள்ளேன். இப்போதும் அதை தொடர வேண்டும் என்ற ஆசையும் நம்பிக்கையும் எனக்கு உள்ளது.

இந்நிலையில், நான் வசிக்கும் தபோவனம் முதியோர் குடியிருப்பு வளாகத்தில் விழா நாட்களின் போது நிகழ்ச்சிகள் நடத்தப்படும். கடந்த மார்ச் மாதம், மகளிர் தின நிகழ்ச்சியில் இங்குள்ள முதியவர்கள் பலர் பங்கேற்று அவர்களது திறமையை வெளிக்காட்டினர்.

இவர்களை வைத்தே ஏன் ஒரு ஆன்லைன் வானொலி சேவையை தொடங்க கூடாது? என அப்போது தான் யோசித்தேன். எனது திட்டத்தை அவர்களிடம் எடுத்துரைத்தேன். வீட்டிலிருந்தபடியே பலரும் தங்களது திறமைகளை ஒலிப்பதிவு செய்து என்னிடம் கொடுத்தனர். இசைக் கருவிகளை வாசிப்பது, கர்நாடக இசை பாடல்கள் பாடுவது, கலந்துரையாடல்கள், நாடகங்கள் என பல நிகழ்ச்சிகள் அப்போது கிடைத்தன. அவற்றை ஒருங்கிணைத்து ‘தபோவாணி’ என்ற பெயரில் முதியோர்களால், முதியோர்களுக்காக நடத்தும் ஆன்லைன் ஒலிபரப்பு சேவையை துவங்கினேன்.’

online radio

‘இங்குள்ள 100 குடியிருப்புகளில், சுமார் 160 பேர் வசித்து வருகின்றனர். அதில் 80 பேர் வரை தற்போது தபோவாணி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர். மேலும், பலர் புதிய நிகழ்ச்சிகளை தயாரிக்க ஆர்வத்தோடு திட்டங்களை தயாரித்து வருகின்றனர்’ என தபோவாணி உருவான கதையை விளக்கினார் ஸ்ரீதர்.

‘இங்கு வசிப்பவர்கள் அனைவருமே சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உயரிய பதவிகளை வகித்து, நீண்ட அனுபவங்களை பெற்றவர்கள். எனவே புதிய தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுக் கொள்வதற்கும், அதை செயல்படுத்துவதற்கும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

மேலும், எங்களது குடியிருப்பில் உள்ள முதியோர்களை கவனித்து பராமரிப்பதற்காக முன்களப்பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கும் ஒரு மேடையை உருவாக்கும் விதமாக, எங்களது நிகழ்ச்சிகளில் அவர்களையும் இணைத்து திறமைகளை வெளிக்கொண்டுவர முயற்சித்து வருகிறோம்.

இணையதளத்தில் எங்களது நிகழ்ச்சிகள் இருப்பதால் உலகின் எந்த மூலையில் இருந்தும், எந்த நேரத்திலும் இலவசமாக எங்களின் நிகழ்ச்சிகளை கேட்டு ரசிக்க முடியும். அந்த வகையில் ஊடகங்களில் பெரிதும் இடம் கிடைக்காத முதியோர்களின் பிரத்தியேக குரலாக, ‘தபோவாணி’ உலகெங்கும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

மூத்த குடிமக்களுக்கென இதுபோன்ற பிரத்யேக இணையதள ஊடக நிறுவனங்களை துவங்க அரசு உதவிட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். விரைவில், தபோவாணியைப் போன்ற மேலும் பல மூத்தோருக்கான ஊடகதளங்கள் இந்தியா முழுவதும் உருவாக்கப்படும், அதன் தொடக்கப்புள்ளியாக தபோவாணி என்றென்றும் திகழும்’ என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் நிறுவனர் ஸ்ரீதர் ராமமூர்த்தி.

  • மு. ஹரிஹரன்
  • பிபிசி தமிழுக்காக

https://www.bbc.com/tamil/arts-and-culture-57621522