தினமுரசு நாட்கள்…..

Posted on மே 26, 2021

0


தின முரசு 2002.06.16 - நூலகம்

களுவாஞ்சிக்குடி சந்தைக்கு போய்வரும் அனேகரின் பைகளில் வீரகேசரி பத்திரிகை இருக்கும்.பத்திரிகை எனில் அந்த நாட்களில் வீரகேசரி தமிழர்களிடமும் தினகரன் முஸ்லிம்களிடமும் பிரபலம்.இருதரப்புக்கும் பொதுவானது எனில் தினபதி மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான சிந்தாமணி.இணையத்தளங்களின் வாசமேயில்லை.

வானொலி , தொலைகாட்சிகளும் பெரிதாக பிரபல்யம் அடையாத நாட்களில் பத்திரிகைகட்கு நிறைய வாசகர்கள் இருந்தனர்.சிலருக்கு சிகரெட் பிடிக்காது டாய்லெட் போகாது.அதேபோல் பத்திரிகை படிக்காமல் பலருக்கு நாள் கழியாது.

எங்கள் பகுதிகளில் பிரபல்யமான பத்திரிகை என்றால் அது வீரகேசரி தான்.ஆனால் அதன் வீக் பொயிண்ட் யாதெனில் அதன் அமைப்பு கவர்ச்சியில்லாது இருந்தமையே. கல்யாண மொழியில் அவள் குணவதிதான் ஆனால் அழகு கொஞ்சம் சுமார்தான் (வீரகேசரி).கணணிமயமாக்கம் அற்ற நாட்களில் மிகச் சிறிய எழுத்துக்களில் அச்சுகோர்ப்பு செய்யப்பட்டு வெளியான இந்த பத்திரிகையினை வாசிக்க ஒன்று நல்ல கண்பார்வை வேண்டும் அல்லது உங்களுக்கு நல்ல கண்ணாடி வேண்டும்.வீரகேசரியினால் விடப்பட்ட இடைவெளிகளை; (அதாவது அமைப்பியல் மற்றும் விடயப்பரப்பு ) நிரப்ப வந்த இரு பத்திரிகைகளை பார்த்து விட்டு பிறகு தினமுரசை பேசுவோம்.

தின முரசு 1998.11.08 - நூலகம்

சிந்தாமணி…. இந்த பத்திரிகை ஏன் நின்று போனது என்பதற்கு காரணங்களை நானறியேன்.தெளிவானதும் பெரியதுமான எழுத்துக்கள் ;நல்ல கட்டுரைகள் ; இலக்கியம் என சக்கை போடு போட்ட இந்த பத்திரிகை விற்பனைரீதியிலும் இலாபமீட்டியதோடு கணிசமான வாசகர்களையும் கொண்டிருந்தது.இந்த பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்த “ஷர்மிலாவின் இதயராகம்” பின்னாட்களில் திரைப்படமாகவும் வந்திருந்தது.ஆனால் உபாலியின் விமானம் போல சிந்தாமணயும் திடீரென மறைந்து போனது.

வீரவேங்கை…..ஒரு போராட்ட அமைப்பின் பத்திரிகை என்பதை தாண்டி எம் மத்தியில் அமைப்பியல் ரீதியில் புதுமையை செய்த ஒரு பத்திரிகை.கணணிமயப்படுத்தப்பட்ட பத்திரிகை , B5 அளவு , வண்ண மயமான படங்கள் என நிறைய புதுமைகளுடன் தொண்ணூறுகளில் வெளிவந்தது.அந்த நாட்களில் விடுதலை அமைப்பால் சுதந்திரபறவைகள், கொண்டால் என பல பிரசார பத்திரிகைகள் வந்திருந்த போதும் இது தனித்துவமாகவே மிளிர்ந்தது.இதன் பதிப்பக வேலைகள் கூட தமிழகத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டன.

தினமுரசு பத்திரிகையும் கூட இதனை அடியொற்றி வந்த ஒன்றாகவே கருதலாம்.தினமுரசு என்ற வாராந்தரி.இந்தப் பத்திரிகை வெளிவரத் தொடங்கிய 1993 காலப்பகுதியில் நான் தரம் 10 பதில் பயின்று கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட பத்து இதழ்கள் வரை இது எங்களிடையே”அந்த மாதிரி” பத்திரிகை என்ற கணக்கிலேயே சிலாகிக்கப்பட்டது ஏனெனில் அதில் பிரசுரிக்கப்பட்ட விடயங்கள் அனேகமாக சினிமா சார்ந்ததாகவே இருந்தது அத்துடன் அதில் பல கவர்ச்சி படங்களும் வெளியாகின.

ஆரம்ப இதழ்களுக்கு பின்னால் அது அப்போது வெளியாகிய தேசிய தமிழ் பத்திரிகைகளுக்கு மாற்றாக தன்னை தினமுரசு வடிவமைத்துக் கொண்டது. அரசியல் கலை இலக்கியம் சினிமா தொடர் கட்டுரைகள் என பல பகுதிகளிலும் ; மக்களுக்கு எது தேவையோ அதை அறிந்து பிரசுரிக்க தொடங்கியது.விஷேடமாக கூறப்போனால் இதில் வெளியாகிய அரசியல் கட்டுரைகளும் அரசியல் தொடர்களும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை.

வாராவாரம் எக்ஸ்ரே ரிப்போர்ட் என்ற பெயரில் அந்த நாட்களில் நடந்துகொண்டிருந்த ஈழப் போரியல் சம்பந்தமான களநிலவரங்களை இந்த பத்திரிக்கை பிரசுரித்து கொண்டிருந்தது. எந்தப் பத்திரிகையிலும் இல்லாதபடி துல்லியமான கணிப்புகளும் களத்தின் அருகே நின்று பார்த்ததுபோல விவரிப்பு களும் இருந்தன. ஒவ்வொரு வாரமும் எக்ஸ்ரே ரிப்போர்ட் படித்தாலே போதும் வேறு எந்த கட்டுரைகளும் படிக்கத் தேவையில்லை என்ற நிலை உருவானபோது தினமுரசு பத்திரிகைக்கான மவுசு ஏறிக்கொண்டே போனது.

அந்த நாட்களில் இருந்த சோதனைச்சாவடிகள் காரணமாக எங்கள் பகுதிக்கு கிட்டத்தட்ட மத்தியானம் அளவில்தான் பத்திரிகைகள் வந்து சேரும். ஆனால் வரும் வழியில் ஏதேனும் இடர்பாடுகளை சந்திக்க நேர்ந்தால் சிலவேளைகளில் பத்திரிகைகள் வந்துசேர பிற்பகல் 4 மணி கூட ஆகி விடும். தினமுரசு பொறுத்தவரை ஒரு குறித்த அளவான பிரதிகளே அச்சிடப்பட்டன. அந்தப் பத்திரிகைக்கு இருந்த கடுமையான டிமாண்ட் காரணமாக கடைக்கு வந்து சில மணிகளிலேயே விற்று தீர்ந்து விடும்.

கடையில் சொல்லி வைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் நமக்கு அந்த வாரம் பிரதி கிடையாது. தினமுரசு பத்திரிகையை எதிர்பார்த்து கடை வாசலிலேயே இளையோர் முதல் முதியோர் வரை வாசகர் கூட்டம் நிற்கும். தினமுரசு வந்து சேர்ந்தது உடன் ஏற்படும் அமளியில் சிலவேளைகளில் ஓடர் பண்ணி வைத்தால் கூட பத்திரிகை கிடைக்காது.கொஞ்சம் தாமதித்தால் நமக்கான பிரதியை யாரோ கொண்டு போயிருப்பார்கள்.

இது எப்படி இருக்குமென்றால் பார்த்துப்பார்த்து காதலித்த பெண்ணை யாரோ ஒருவர் ஒரே நாளில் நம்மிடமிருந்து தட்டிச் செல்வது போல இருக்கும். இவ்வாறு கடைக்காரர் உடன் வாய்த்தர்க்கம் செய்து பிரதி கிடைக்காமல் திரும்பிய நாட்களும் உண்டு. இந்தப் பத்திரிகை அனேகமாக வெள்ளிக்கிழமைகளில் வந்து சேரும். இதனால் நான் உயர்தரம் படித்த நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் அனேகமாக பாடசாலைக்குப் போக மாட்டேன். ஏனெனில் தினமுரசு வாங்கி எல்லோருக்கும் முதல் படித்துவிட வேண்டும் என்ற அவாதான்.

விசேடமாக ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கை நடைபெற்ற நாட்களில் தினமுரசு மீதான பைத்தியம் அதி உச்சத்திலிருந்து. நானறிய முதல் நாள் பத்திரிகை அடுத்த நாள் கிடையாத ஒரே ஒரு பத்திரிகையாக தினமுரசே இருந்தது.எக்ஸ்ரே ரிப்போர்ட் தவிர இதில் வெளியாகிய அரசியல் மற்றும் அரசியல் சாரா தொடர்கட்டுரைகளும் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவை. குறிப்பாக அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை என்ற தொடர் அந்த நாட்களில் நடைபெற்ற அரசியல் கொலைகளையும் அதன் பின்ணணிகளையும் அலசி சென்றது.இதனை விட பூலான்தேவி , கார்லோஸ் தொடர்களும் வாசகர்களினால் நிரம்பவே வாசிக்கப்பட்டவை.

பழம் தின்று கொட்டை போட்ட பத்திரிகைகளே கமுக்கமாக அமுக்கி வாசிக்கையில் திடீரென முளைத்த இந்த பத்திரிகை தீவிர தமிழ் தேசியம் பேசியது ஆச்சரியமான ஒன்றே.சிலவேளைகளில் இந்த பத்திரிகை வாசிக்கும் போது இது போராட்ட அமைப்பின் பத்திரிகை என்று கூட யோசிக்க தோன்றும்.பின்னாட்களில் இந்த பத்திரிகையின் அரசியல் பின்புலம் தெரிந்தாலும் கூட தினமுரசின் மீதான மோகம் குறையவில்லை.

சபிக்கப்பட்ட ஒரு நாளில் புரியாத காரணம் ஒன்றிற்காக இந்த பத்திரிகை யின் ஆசிரியர் நடராசா அற்புதன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.என்னைபொறுத்தவரை மற்றோர் புத்திஜீவியை தமிழ் சமூகம் இழந்து போனது.இதன் பின்னாட்களில் தினமுரசு தினமுரசாக இல்லை.அது சடாரென முந்தைய அரசியல் நிலைப்பாடுகளை மாற்றி கொண்டது.கடைகளில் அடிபிடிபட்டு வாங்கிய பத்திரிகை யாரும் சீண்டாமல் கிடந்தது.வீதிகளிலும் பேருந்துகளிலும் அந்த பத்திரிகையை வெளியிட்ட கட்சியின் உறுப்பினர்களால் விற்கப்பட்டது.

சில நாட்களில் வாசிக்க ஒன்றுமில்லாத போது வாங்கியிருக்கிறேன்.பலநாட்களில் முன்னாள் காதலியை தவிர்க்கும் ஒரு காதலனாய் தவிர்த்தே சென்றிருக்கிறேன்.மனதில் வலிதான் ஆனால் அவதான் இப்ப நம்மாள் இல்லையே.பிறகேன் மினக்கெடுவான்.அனேகமாக தினமுரசின் உட்குரல் என்பது விவேக்கின் காமெடி போல இருந்திருக்கும்.”எப்படி இருந்த நான் இப்படியானேன்”.ஒரு கட்டத்தில் அந்த பத்திரிகை நின்று போனது.

அண்ணன் செத்தபின் திண்ணையை பிடிக்க பலர் முயன்றும் அந்த முயற்சிகள் “கானமயிலும் வான்கோழியுமாயே” போயின.தீவிர வாசிப்பினையும் தொடர்வாசிப்பினையும் ஊக்குவித்த தினமுரசு ஒரு “நெஞ்சம் மறப்பதில்லை”.நடராசா அற்புதன் போல நல்ல பத்திரிகை ஆசான் இனி வருவாரோ?.

நன்றி…!

ThirugananasampanthanLaithakopan

1965ம் ஆண்டிற்கு முன்பு எல்லார் கையிலேயும் தினகரன் பத்திரிகைதான் இருந்தது. 1960 தில்இருந்து 1965 ம் ஆண்டுவரை பிரதமராக இருந்த சிறிமாஅம்மையாரின் தனிப்பட்ட குரோதம் காரணமாக தினகரன் பத்திரிகையை வெளியிட்டுவந்ந லேக் ஹவுஸ் நிறுவனம் அரசுடமையாக்கப்பட்டதுஅதன்பின்பு தினகரனின்விற்பனை சரிந்துவிட்டது.அந்த இடத்துக்கு வீரகேசரி வந்து விட்டது இதுதான் யதார்த்தம்.

Moothathamby Jeyarajah