சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்தியை ஊடகங்கள் கையாண்ட விதம் சரியா?

Posted on ஜூன் 15, 2020

0


 

Sushant Singh Rajputபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை கொரோனா பிரச்சனைக்கு மத்தியிலும் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், அவரது மரணம் தொடர்பாகத் தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்ட விதம் மக்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

திரைத்துறை மற்றும் அரசியல் பிரபலங்களின் மரணம் குறித்த செய்திகள் எப்போதும் தொலைக்காட்சி, நாளிதழ் மற்றும் இணையளதளங்களில் முதலிடம் பிடிப்பது வழக்கமான ஒன்று. அதேபோல நேற்றும் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை தொடர்பான செய்திகள் பல இந்தி மற்றும் ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் முக்கியச் செய்திகளாக இடம் பெற்றன.

ஆனால், அந்த செய்திகளை மக்களுக்குக் கொண்டு செல்வதில் தொலைக்காட்சிகள் சமூகப் பொறுப்புடன் செயல்படுகிறார்களா என்பது கடும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

”சினிமாவின் தோனி எப்படி நிஜ வாழ்க்கையில் விக்கெட்டை இழந்தார் என்பதைக் காணுங்கள்,” என ஒரு பிரபல இந்தி தொலைக்காட்சி சுஷாந்த் மரணம் தொடர்பான செய்தி தொகுப்புக்குத் தலைப்பு வைத்துள்ளது.

அதே போல இன்னொரு இந்தி தொலைக்காட்சி,” சுஷாந்த் எப்படி ஹிட் விக்கெட் மூலம் அவுட் ஆனார்?” எனத் தலைப்பு வைத்துள்ளது. (கிரிக்கெட்டில் ஹிட் விக்கெட் என்பது பேட்ஸ்மேன் தானாக ஸ்டம்பை இடித்து அவுட் ஆவது)

இதற்கு மேலாக, ஒரு இந்தி தொலைக்காட்சி சுஷாந்தின் உடல் படுக்கையில் கிடக்கும் படத்தைத் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்தது.

பல தொலைக்காட்சிகள் அவர் எப்படி இறந்தார் என்பதை வெளிப்படையாகக் கூறியதுடன், மரணத்துக்கு என்ன காரணம் என்பதையும் ஆராயத் தொடங்கின.

media

தொலைக்காட்சிகளின் இந்த செயல்களுக்கு சமூக ஊடகங்களில் மக்கள் கடும் எதிர்வினையாற்றினர். தனியார் தொலைக்காட்சிகளுக்கு எதிரான ஹாஷ்டேக்குகளையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தற்கொலை செய்தியை எவ்வாறு வெளியிட வேண்டும்?

இந்தநிலையில் பிரபலமான நபர்களின் தற்கொலை தொடர்பான ஊடகங்கள் செய்தி வெளியிடும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

ஆனால், பல ஊடகங்கள் அதை பின்பற்றுவதில்லை என மனநல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

1) எப்படி தற்கொலை செய்துகொண்டார் என்ற விவரத்தை ஊடகங்களில் வெளியிடக் கூடாது.

2) இறந்துபோனவரின் தற்கொலை கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல்களை வெளியிடக்கூடாது.

3) தற்கொலைக்கு முயன்றவர் அல்லது இறந்துபோனவரின் குடும்பத்தினர் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வெளியிடக்கூடாது.

4) தற்கொலை முயற்சி அல்லது மரணத்தை ஒரு திகில் சம்பவம் போலக் காட்டக்கூடாது. அவரது வாழ்க்கை பற்றியும், சமூகத்திற்கு அவர் செய்த நல்லதைப் பற்றியும் கூறி செய்தியைத் துவங்கலாம்.

5) தற்கொலை என்பது தடுக்கக்கூடிய மனநலப் பிரச்சனை. தற்கொலை எண்ணங்களைத் தடுப்பதற்குப் பல ஆலோசனை சேவைகள் உள்ளன. அது குறித்த தொடர்புகள் செய்தியில் இடம் பெற வேண்டும்.

6) தற்கொலை நடந்த இடத்தை குறிப்பிட்டுக் கூறக்கூடாது.

7) தற்கொலை குறித்த செய்திகளை முகப்பு பக்கத்தில் வெளிடக்கூடாது .

அதே போல இந்திய பிரஸ் கவுன்சிலும் தற்கொலை மற்றும் மனரீதியான பிரச்சனை உள்ளவர்கள் பற்றி செய்தி வெளியிடும் போது ஊடகங்கள் பின்பற்றிய வழிமுறைகளை 2019-ம் ஆண்டு வெளியிட்டது.

தற்கொலை குறித்த செய்திகளை வெளியிடும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளை ஊடகங்கள் பின்பற்ற வேண்டும் எனக் கூறியுள்ள இந்திய பிரஸ் கவுன்சில், மனரீதியான சிகிச்சை பெறும் நபர்களின் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் படங்கள் மற்றும் தகவல்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என கூறியுள்ளது.

”இப்போது வழிகாட்டுதல்களை இந்திய பிரஸ் கவுன்சில் ஏற்றுக்கொண்டதால், அவை பத்திரிகை நடத்தையின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. இந்த வழிமுறைகளை மீறும் ஊடக நிறுவனங்கள் மீது புகார் அளிக்கலாம்,” என இந்திய பிரஸ் கவுன்சிலின் செயலாளர் அனுபமா பட்நகர் 2019-ம் ஆண்டு கூறியிருந்தார்.

இந்திய பிரஸ் கவுன்சில் இந்த வழிமுறைகளை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தி, சென்னையில் உள்ள சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் நிறுவனரும், மனநல மருத்துவருமான லட்சுமி விஜயகுமார் கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.

லட்சுமி விஜயகுமார்
Image captionலட்சுமி விஜயகுமார்

இந்நநிலையில் வழிமுறைகளை இப்போது ஊடகங்கள் சரியாக பின்பற்றுகிறதா என அவரிடம் கேட்டோம்.

”உலகளவில் தற்கொலை விகிதம் மிக அதிகமாக உள்ள இந்தியாவில், தற்கொலைகளைத் தடுப்பதில் ஊடகங்களில் பங்கு மிக முக்கியமானது. ஆனால், அந்த ஊடகங்களே பிரபலங்களின் தற்கொலை செய்திகளை மிகைப்படுத்திக் காட்டுகின்றன,” என்கிறார் லட்சுமி விஜயகுமார்.

”உலக சுகாதார நிறுவனமும், இந்திய பிரஸ் கவுன்சிலும் வெளியிட்ட வழிமுறைகளை ஊடகங்கள் பின்பற்றுவதில்லை. டிஆர்பி மற்றும் மற்ற ஊடகங்கள் இடையிலான போட்டி காரணமாகத் தொலைக்காட்சிகள் இப்படிப் பொறுப்பில்லாமல் செய்திகளை வெளியிடுகின்றன,” என்கிறார்.

மேலும் அவர், ”தற்கொலைச் சம்பவங்களை தமிழக செய்தித்தாள்களில் எப்படி செய்தி வெளியிடுகிறார்கள் என்பது குறித்து நாங்கள் நடத்திய ஆய்வு முடிவுகளை 2018-ல் வெளியிட்டோம். இதற்காக செய்தித்தாள்களில் வெளியான 1681 தற்கொலை செய்திகளை சேகரித்தோம். முடிவில், 43.3% செய்திகளில் மக்கள் எப்படியெல்லாம் தற்கொலை செய்துக்கொண்டனர் என்ற விவரங்களை வெளியிட்டுள்ளனர். வெறும் 2.5% செய்திகளில் மட்டுமே தற்கொலை தடுப்பு மையங்களின் எண்களை வெளியிட்டுள்ளனர்,” என்கிறார்.

வளர்ந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றி வருவதாகவும், இந்தியாவில் அலட்சியமாக இருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

‘சில தற்கொலைகள் கொலைகளாக மாறலாம்’

ஏ.ஆர்மெய்யம்மை

இது குறித்து மூத்த ஊடகவியலாளர் ஏ.ஆர்.மெய்யம்மை பிபிசி தமிழிடம் பேசினார். ”பிரபலங்களில் மரணம் தற்கொலை என வரும்போது ஊடகங்கள் அதை மிகைப்படுத்து செய்தி வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்தான். ஆனால், அதற்காக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய தகவல்களைக் குறைக்க முடியாது. மக்களுக்கு தேடும் தகவல்களை கொடுக்க வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. எனவே இதுபோன்ற விஷயங்களை சமநிலையுடன் ஊடகங்கள் அணுக வேண்டும்,” என்கிறார் அவர்.

”சில தற்கொலைகள், விசாரணையின்போது கொலைகளாக மாறலாம். எனவே ஒரு சம்பவத்தில் உள்ள முழு விவரங்களையும் அறிய வேண்டிய இடத்தில் ஊடகங்கள் உள்ளன. அதற்காக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளில் தலையிட முடியாது,” என்கிறார் அவர்.

இப்போது ஊடகங்களை அனைவரும் விமர்சிக்கின்றனர், ஆனால், ஊடகங்களில் வெளிவருவதற்கு முன்பே சில தவறான தகவல்களும், புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகிறது அதை யார் கட்டுப்படுத்துவது என கேள்வி எழுப்புகிறார் மெய்யம்மை.

https://www.bbc.com/tamil/india-53048883