‘BBC’யின் கீர்த்தியும் கௌரவமும்

Posted on மே 24, 2021

0


செய்தியின் பின்னணியில்….

இளவரசி டயானாவுடனான பிபிசி தொலைக்காட்சி நேர்காணல்,

செய்தி உலகில் வரலாற்று பதிவாகின்ற ஒன்று. உலகெங்கும் சுமார் இரண்டரைக் கோடி மக்கள் இந் நேர்காணலை அப்போது தொலைக்காட்சிகளில் பார்த்தார்கள். 1995 நவம்பர் 20ஆம் திகதி இது ஒளிபரப்பானது. பிரிட்டிஷ் அரச குடும்பத்தை ஓர் உலுக்கு உலுக்கி, உலகையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்ட இந்த நேர்காணலை மாட்டின் பஷிர் என்பவர் நிகழ்த்தினார்.மூன்று ஆண்டுகளுக்கு முன்னராகவே பிரிந்திருந்த இளவரசர் சார்ள்ஸும் டயானாவும், இந்த நேர்காணலின் பின்னரான சில மாதங்களில், மகாராணியின் அறிவுறுத்தலில் விவாகரத்து செய்துகொண்டார்கள். அடுத்த ஆண்டில், 1997 ஓகஸ்ட் 31ஆம் திகதி, டயானா பாரிஸில் கார் விபத்தில் மரணமானார். தங்கள் மணவாழ்வின் சில அந்தரங்கங்களை இளவரசி டயானா இந்த நேர்காணலில் மாட்டின் பஷிரிடம் மனந்திறந்தவராகவே வெளிப்படுத்தினார். இளவரசர் சார்ள்ஸுக்கும் கமிலா பார்க்கர் போள்வ்ஸுக்கும் (தற்போதைய மனைவி) இடையிலான உறவைக் குறிப்பிட்டு, ‘மணவாழ்வில் நாங்கள் மூவர்’ என்று சொன்னார்.

அதேவேளை, ஒருவர்மீது தான்கொண்டுள்ள விருப்பையும் அவர் தெரிவித்தார். பிபிசியில் அதிகம் பிரபலமற்ற மாட்டின் பஷிரிடம், இளவரசி டயானா இத்துணை அந்தரங்கங்களைப் பகிரங்கப்படுத்த ஏன், எப்படி தீர்மானித்தார்? சில மாதங்களில், பிரிட்டனின் ‘மெயில் ஒன் சன்டே’ பத்திரிகை இதுதொடர்பில் சில தகவல்களை வெளியிட்டது. இளவரசியை இரகசியமான விதத்தில் கண்காணிக்கும் ஒற்று நடவடிக்கைகளுக்காக புலனாய்வு நிறுவனங்களும் செய்தி நிறுவனங்களும் சிலருக்கு கொடுப்பனவுகளை மேற்கொள்வதான போலி வங்கி பற்று வரவு பத்திரங்களை பஷிர் இந்த நேர்காணலைச் சாதகமாக்குவதில் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. பிபிசியிலேயே பணியாற்றும் ஒருவர்மூலம், தானே தயார்செய்வித்த இப் போலி ஆவணங்களை டயானாவின் சகோதரரான ஏர்ள் ஸ்பென்ஸரிடம் காண்பித்து, அவரின் அபரிமிதமான நம்பிக்கையைப் பெற்ற மாட்டின் பஷிர், பின்னர் அவர் மூலமாக இளவரசி டயானாவுடனான அறிமுகத்தைப் பெற்று இந்த நேர்காணலை மேற்கொண்டதாக, இப்போது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகியுள்ள விசாரணை அறிக்கையின்மூலம், பிபிசி அதன் உலக கீர்த்தியையும் கௌரவத்தையும் போட்டுடைத்திருக்கிறது.

‘பிபிசி அதன் பாரம்பரிய உயர் நியமமான நேர்மையிலும் வெளிப்படைத் தன்மையிலும் வெகுவாக கீழிறங்கிய நிலையில், மாட்டின் பஷிர் ஒரு மோசடியான விதத்தில் இந்த நேர்காணலை மேற்கொண்டுள்ளார்’ என்று, இந் நேர்காணல் தொடர்பிலான சுதந்திர விசாரணை ஒன்றை மெற்கொண்ட முன்னாள் நீதியரசர் டைசன் பிரபு தெரிவித்திருக்கிறார். கடந்த 20ஆம் திகதி வியாழக் கிழமை இந்த விசாரணை அறிக்கை வெளியானது. ‘மெயில் ஒன் சன்டே’ செய்தி வெளியான வேளையிலேயே பிபிசி நடாத்திய உள் விசாரணைகளில், பிபிசி இதனை மூடிமறைக்க முனைந்திருப்தையும் டைசன் பிரபு சுட்டிக்காட்டியிருக்கிறார். மாட்டின் பஷிர், டயானாவிடம் இந்த போலி ஆவணங்களைக் காண்பிக்கவில்லை என்றும், அதனால் அவற்றைப் பார்த்ததில்தான் நேர்காணலுக்கு அவர் சம்மதித்தார் என்பதல்ல என்றும், பிபிசி முன்னர் இதனை நியாயப்படுத்த முயன்றிருந்தது.

ஆனால், ஏர்ள் ஸ்பென்ஸருக்கு அவை காண்பிக்கப்பட்டு, அதில் அவர் அடைந்த தாக்கத்தில், பஷிர் மீதான ஒரு நம்பிக்கையை தனது சகோதரி டயானாவிடம் ஏர்ள் ஸ்பென்ஸ்ர் ஏற்படுத்தியிருக்கலாம் என்றும், ஏர்ள் ஸ்பென்ஸரை அப்போது விசாரணைக்கு அழைக்க பிபிசி தவறியிருக்கிறது என்றும் டைசன் பிரபு இப்போது சுட்டிக்காட்டியிருக்கிறார்.முன்னைய விசாரணையில் பிபிசியின் இத் தவறைச் சுட்டிக்காட்டி, பிரிட்டனின் அடுத்த மன்னராகவல்ல இளவரசர் வில்லியம், இந்த விசாரணை அறிக்கையின் பின்னர் இப்போது தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வெகு கனமானவை.‘என்னுடைய பெற்றோர்களுக்கிடையேயான உறவில் இந்த நேர்காணல் மேலும் விரிசலைத் தூண்டியது. மரணத்துக்கும்கூட என் தாய் தள்ளப்படாமலும் இருந்திருக்கலாம்.

நேர்மையற்ற இந்த நிருபரால், அவர் ஏமாற்றப்பட்டதை அவர் எப்போது உணர்வார்?- இப்படி சொல்லும் இளவரசர் வில்லியம், பிபிசி அதிகாரிகள்மீதும் தனது சுட்டு விரலை நீட்டுகிறார். ‘சுயநல கலாசாரமும் நெறிமுறையற்ற நடத்தையும், ஈற்றில் எனது தாயின் உயிரை எடுத்துக்கொண்டன’ என்று, தன்னுடைய வாழ்வின் பாதிப்புகளைச் சொல்கிறார் இளவரசர் ஹரி. மதுவுக்கு, போதை வஸ்துக்கு தான் தள்ளப்பட்டதை சொல்கிறார்.

இளவரசி டயானாவின் உடலைக் குதிரை வண்டி தாங்கிச் சென்றபோது, ‘ஏகாந்தமாய் எழுந்த, குதிரைகளின் அக் குளம்போசை என்னில் எப்போதும் கேட்டுக்கொண்டிருக்கிறது’ என்று இளவரசர் ஹரி சொல்வது, ஒரு தாயின் பரிமாணம்.ஏர்ள் ஸ்பென்சர் இந்த விசாரணையைக் கோரியிருந்தார்.பிபிசி நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரியிருக்கிறது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள, லண்டன் பெருநகர் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர்.

பிரிட்டிஷ் அரச சாசனத்தின்கீழ் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பிபிசி), இளவரசி டயானா தொடர்பிலான இந்த விவகாரத்தையடுத்து, பலமான சில நிர்ப்பந்தங்களை எதிர்கொள்கிறது.

– மாலி