நேர்மையான ஒரு தமிழ்ப் பத்திரிகையாளரின் குரலை நசுக்கிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

Posted on திசெம்பர் 30, 2020

0


இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளில் எத்தனையோ பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் என நூற்றுக்கணக்கான தமிழ் சிங்கள ஆங்கில மொழிப் பத்திரிகையாளர்களின் குரல்கள் பல்வேறு பிரிவினர்களால் நசுக்கப்பட்டுள்ளன.

பலர் கொலைசெய்யப்பட்டுள்ளார்கள், பலர் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக மறைக்கப்பட்டுள்ளார்கள், அல்லது கொல்லப்பட்டுள்ளார்கள்.

தமிழ் பேசும் பத்திரிகையாளர்களான தராக்கி சிவராம், நடேசன், மயில்வாகனம் நிமலராஜன்,சுப்பிரமணியம் இராமச்சந்திரன் போன்ற எத்தனையோ தமிழ் பேசும் பத்திரிகையாளர்கள் கோத்தபாய தரப்பாலும் அரச சார்பு தமிழ் அமைப்புக்களாலும் கொலை செய்யப்பட்டார்கள்.

இதைப்போலவே, லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னலிகொட, ரிச்சார்ட் டி சொய்சா போன்ற சிங்கள மற்றும் ஆங்கில பத்திரிகையாளர்களும் அரச தரப்பு இராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளார்கள். குறிப்பாக இவர்களுள் பலர் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபாய இராஜபக்ச தனது சகோதரர் மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது, பாதுகாப்புச் செலயாளராகப் பதவி வகித்தபோதே கொலை செய்யப்பட்டவர்கள் என்பது உலக நாடுகளே அறிந்த விடயமாகும்.

இதற்குப் பின்னரான காலப் பகுதியில் தான் அதாவது 2009 ஆண்டில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளும் போர்க்குற்றச் செயல்களும் இடம்பெற்றன என்பதும் வயதில் குறைந்த எமது பிள்ளைகளுக்குக் கூடத் தெரியும். ஆனால் நாம் மேற்குறிப்பிட்ட விடயங்களுக்கும் இங்கே காணப்படும் புகைப்படங்களுக்கும் சம்பந்தம் உள்ளனவா என்றால் ‘இல்லை’ என்று ஒரே சொல்லில் பதில் சொல்லிவிடலாம்.

இடையில் விடயங்கள் தொடர்புடையவையாக உள்ளன என்பது மறுப்பதற்கில்லை.

இங்கே காணப்படும் படங்களில் தமிழத் தேசிய கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா (முன்னாள் எம்பி) எம். சுமந்திரன் (இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்) பத்திரிகையாளர் வீ.தேவராஜ் (முன்னாள் பிரதம ஆசிரியர்,கொழும்பு வீரகேசரி வார இதழ்) ஆர். என். லோகேந்திரலிங்கம் (கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்) இன்னும் சிலர் காணப்படுகின்றனர்.

இந்த புகைப்படங்கள் கூட 2009 இற்கு பின்னரே, அதாவது விடுதலைப் புலிகள் அமைப்பின் இருப்பானது இல்லாமற்போன பின்னரே எடுக்கப்பட்டவையாகும்.
புகைப்படங்களுக்கான சந்தர்ப்பங்கள் பின்வருமாறு:-

கனடா உதயன் பத்திரிகை வருடாவருடம் நடத்திவருகின்ற ‘சர்வதேச விருதுகள்’ விழாவில் மாவை சேனாதிராஜா அவர்களுக்கு, இலங்கையர்களுக்கான சிறப்பு விருது வழங்கப்பெற்றது. மேற்படி விருது பெறுநராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சார்பான விடயங்களாகக் கருதப்பட்டமை, அவர் தனது இளமைக் காலத்தில் தனது கல்வியைத் துறந்து தமிழ் மக்களது சுதந்திரத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் குரலெழுப்பிய காரணத்தாலும், தொடர்ச்சியாக இலங்கை அரசின் கொடிய சிறைகளுக்குள் துன்பங்களை அனுபவித்த காரணங்களுக்காகவும். பின்னர் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்து குரல் கொடுத்து வந்தமைக்காகவுமே.

2012ம் ஆண்டு விருது விழாவில் அவருக்கு விருதை வழங்குவதாக திட்டமிட்டிருந்தாலும் கனடிய தூதரகம் அவருக்குரிய விசாவை வழங்காக காரணத்தால் கனடாவில் வைத்து விருது வழங்கப்படவில்லை.

பின்னர் உதயன் பிரதம ஆசிரியர் அவர்கள் அதே ஆண்டு இறுதியில் கொழும்பிற்குச் செல்ல நேர்ந்த போது, பம்பலப்பிட்டியில் அமைந்திருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் இந்த விருதை வழங்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்த சிறிய வைபவத்திற்கு தலைவர் இரா சம்பந்தன், எம். சுமந்திரன் ஆகியோரும் வருகை தந்து சிறப்பித்தார்கள்.

மேற்படி வைபவத்திற்கு தனது காரிலேயே அப்போது வீரகேசரி வார பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த வீ. தேவராஜ் அவர்கள் எமது ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தை அழைத்துச் சென்றார்.

ஆனால் அந்த வைபவத்தில் கலந்து கொள்வதை திரு தேவராஜ் விரும்பவில்லை. லோகேந்திரலிங்கம் வற்புறுத்தியதன் காரணத்தால், பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.

வைபவம் முடிந்து, இருப்பிடம் நோக்கிச் சென்றபோது, திரு தேவராஜா உதயன் ஆசிரியர் லோகேந்திரலிங்கத்திடம் சில விடயங்களைக் கூறியுள்ளார்.

வன்னி மண்ணில் விடுதலைப் புலிகள் இராணுவ பலத்தோடும் உலகின் பார்வைக்குட்பட்டு செயற்பட்டு வந்த காலத்திலேயே வீரகேசரி ஆசிரியர் திரு தேவராஜ் வன்னி தலைமையோடு மிகவும் நெருக்கமாக உறவைக் கொண்டிருந்தார். ஒரு நேர்மையான பத்திரிகையாளன் என்ற வகையில் விடுதலைப் புலிகள் தொடர்பான நியாயமான கோரிக்கைகளை தனது பத்திரிகையில் தவறாமல் பிரசுரித்து வந்தார். சமாதான காலங்களில் வன்னிக்கு நேரடியாகச் சென்று தலைவர் பிரபாகரன் மற்றும் தமிழ்ச் செல்வன் ஆகியோரை சந்தித்து பேட்டிகள் எடுத்து வீரகேகரியில் எவ்வித தயக்குமும் இன்றி பிரசுரம் செய்தார்.

வீரகேசரி நிர்வாகத்திற்கு அரசின் பக்கம் இருந்து அழுத்தங்கள் வந்து, பின்னர் அவை திரு தேவராஜ் அவர்களை நோக்கி பிரயோகிக்கப்பட்டாலும், அவற்றை எதிர் கொண்டு தனது பணியை நிறுத்திவிடாமல் விடுதலைப் புலிகளின் நியாயமாக செய்திகளை பிரசுரம் செய்வதும், அவர்களோடு தொலைபேசி மூலமாக உரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டு செயற்பட்டார் திரு தேவராஜ்

இன்னொரு பக்கத்தில் நாம் திரு தேவராஜை நோக்கினால், அவர் வடக்கு அல்லது கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்தவர் அல்ல, இலங்கையின் மலைநாட்டில், பதுளைக்கு அருகில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிறந்த அவர் திறமையோடு கல்வி கற்று, யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று பின்னர் தமிழ்நாட்டின் தஞ்சாவூர்ப் பல்கலைக் கழகத்தில் முதுமானிப் பட்டம் பெற்று நாடுதிரும்பினார்.

ஆனால் சிறுவயதிலிருந்தே சமூக நோக்கத்திற்காக குரல் கொடுத்து வந்தவரும் மலை நாட்டுத் தொழிலாளர்களின் துயரங்களை நேரில் கண்டு அவர்களுக்காக அனுதாபப் பட்டவருமான திரு தேவராஜ், தமிழ் மக்களின் விடிவிற்காக போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பின் நியாயமான கோரிக்கைகளை எப்போதுமே ஏற்றுக்கொண்டு வந்த ஒருவராக விளங்கினார். யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பயின்றபோதே அங்கு மாணவர்களின் போராட்டங்களில் முக்கிய பங்கெடுத்தார்.

பின்னர் தனது விருப்பத்திற்கு ஏற்ப பத்திரிகைத் துறையில் இணைய எண்ணி வீரகேசரி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இணைந்து பின்னர் பிரதம ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். அப்போது கூட தனது கொள்கையிலிருந்து விலகி நடப்பவராக அவர் மாறவில்லை.

ஆனால் நாட்கள் எப்போது போல இருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வழி தவறிச் சென்றதையும் முக்கியமாக சுமந்திரனின் அரசியல் பிரவேசத்திற்குப் பின்னர் மிகவும் மோசமான தமிழர் விரோத நடவடிக்கைகளில் எவ்வித கூச்சமுமின்றி செயற்படுவதையும் கவனித்த தேவராஜ் அவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பை நேரடியாகவே விமர்சனம் செய்யத் தொடங்கினார்.

ஆனால், அவருக்கு சாதகமான சூழ்நிலை என்பதிலிருந்து பல மோசமான விடயங்களை சந்திக்க நேர்ந்தது. ஒரு பக்கம் அரசாங்கம், இன்னொரு பக்கம், தமிழ்த் தேசியக் கூட்டம்,மூன்றாவது அணியாக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகிய பக்கங்களிலிருந்து பயங்கரமான அச்சுறுத்தல்கள், எச்சரிக்கைகள், பயமுறுத்தல்கள் அனைத்தும் தினமும் ஏவிவிடப்பட்டன.
இறுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமைப் பீடம் மற்றும் இந்திய தூதரகம் ஆகியன இணைந்து வீரகேசரியின் நிர்வாகத்திற்கு கொடுத்த அழுத்தம் காரணமாக வீரகேசரி தேவராஜ் என்று மரியாதையோடு அழைக்கப்பட்டு வந்த துணிகரமான பத்திரிகை ஆசிரியர் ஒருவர் வீதிக் கொண்டுவரப்பட்டார். அவரது குரல் நசுக்கபட்ட ஒன்றாகியது.

பதவியிலிருந்து அகற்றப்பட்டாலும், திரு தேவராஜிற்கு துன்புறுத்தல்கள் , பயமுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்த வண்ணம் இருந்தன.

வேறு பத்திரிகை நிறுவனங்களோடு அல்லது ஊடக நிறுவனங்களோ திரு தேவராஜ் என்னும் துணிச்சலான பத்திரிகையாளருக்கு பதவி எதையும் வழங்கக் கூடாது என்று ‘உயர் பீடங்களில்’ இருந்து கட்டளைகள் அனுப்பப்பட்டன.

தேவராஜ் அவர்கள் வசித்து வரும் வீட்டிற்கு கூட எத்தனையோ தாக்குதல்கள் நடத்தப் பெற்றன.
ஆனால் அதிஸ்டவசமாக அவரது உயிருக்கு எவ்விதமான பாதிப்புக்கள் ஏற்படவில்லை. அதற்கு காரணங்கள் பல இருக்கலாம்.

ஆனால் துணிச்சலான பத்திரிகையாளர் திரு தேவராஜ் தற்போது குரலற்றவராக, தனது கருத்துக்களை எந்த ஒரு தளத்திலும் ஏற்ற முடியாதவராக, இன்னும் சொல்லப் போனால் எண்ணற்ற கருத்துக்களை கொண்டிருந்தாலும் அவற்றை தனக்கு அடக்கியபடி வெகுண்டெழ முடியாதவராக அந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அவர் பிரதம ஆசிரியர் என்ற உயர்ந்த பீடத்திலிருந்த போது பலன் பெற்ற பலர் இப்போது அவரோடு பேசுவதற்கே அஞ்சுகின்றார்கள். ஏனென்றால் தங்களுக்கு ‘ஏதும்’ நடந்து விடக் கூடாது என்று.. இது தான் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒரு சாபக்கேடான விடயம்.