பெண்களை தரம் தாழ்த்தும் சொற்கள் பயன்பாடுக்கு எதிராகத் தொடங்கிய வித்தியாச முயற்சி

Posted on திசெம்பர் 21, 2020

0


பெண்களை

ஒரு வாக்குவாதம் சண்டையாக மாறத் தொடங்கும் போதெல்லாம், தரம் தாழ்ந்த சொற்கள் சரளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த விவாதம் அல்லது சண்டை நடக்கும்போது கூட, பெண்களை அடிப்படையாகக் கொண்ட சொற்களே பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விஷயம்.

இதுபோன்ற கெட்ட வார்த்தைகளை மக்களின் அகராதியிலிருந்து அகற்றுவதற்காக, இரண்டு பெண்கள் ‘த காலி ப்ராஜக்ட்’ என்ற திட்டத்தைத் தொடங்கினர். இதன் மூலம் தரம் தாழ்ந்த சொற்களை விடுத்து வேறு வழியில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தச் செய்வதே இதன் நோக்கம்.

இந்த திட்டத்துடன் தொடர்புடைய மும்பையைச் சேர்ந்த நேஹா தாக்கூர் கூறுகையில், ஓவர் தி டாப் (OTT) ஊடகத்தில் கூட ஆன்லைனில் வரும் பெரும்பாலான தொடர்களில், மொழி ஆளுமை மோசமடைந்து வருவதை நாங்கள் காண்கிறோம். இளைஞர்களிடமோ மக்களிடமோ இது போன்ற சொற்களைப் பயன்படுத்துவது குறித்து நாங்கள் கருத்து கேட்டபோது, “அதில் என்ன தவறு? ஒரு வேடிக்கைக்குத் தானே என்பதாகவே அவர்களின் பதில் இருந்தது.” என்று வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

“இன்றைய சூழலில், அரசாங்கத்திடம் அதிருப்தி, போக்குவரத்தில் உள்ள சிக்கல், வேலைவாய்ப்பு, உறவுகள் போன்ற பல காரணங்களால் எழும் கோபம் – இது போன்ற கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தத் தூண்டுதல்களாக உள்ளன. மக்களிடையே இவ்வளவு எரிச்சலும் கோபமும் இருப்பதால் இயற்கையாகவே தரம் தாழ்ந்த சொற்கள் வெளிவருகின்றன.”

“மக்கள் கோபத்தில் வெளிப்படுத்தும் இதுபோன்ற சொற்களின் தாழ்ந்த தரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கான எங்களின் நோக்கம்.”

“இரண்டு ஆண்களுக்குள்ளாக, சண்டையின்போது பெண்கள், சாதி பாகுபாடு அல்லது சமூகம் சார்ந்த தாக்குதல் செய்வதற்குப் பதிலாக, எதிராளியின் மனம் புண்படாதவாறு, தங்கள் கோபத்தை வெளிப்படுத்தக்கூடிய சொற்களைப் பயன்படுத்தலாம் என்பதை மக்களுக்கு உணர்த்துவது எங்களின் திட்டம்.”

“பெண்களுக்கு விரோதமில்லாத , சாதி அல்லது சமூகப் பாகுபாடில்லாத, யாரையும் அவமானப்படுத்தாத ஒரு சொற்களஞ்சியத்தை உருவாக்குவதே எங்கள் முயற்சி.” என்று நேஹா தாக்கூர் கூறுகிறார்.

இந்த திட்டம் குறித்து மேலும் விளக்கிய, தகவல் தொடர்பு ஆலோசகர் தமன்னா மிஸ்ரா, “மக்கள் கோபமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், அவை இனிதான முறையில் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தக்கூடியவை ஆக இருக்க நாங்கள் ஒரு சொற் களஞ்சியத்தை உருவாக்க முயற்சிக்கிறோம்.” என்று கூறுகிறார்.

ஏச்சுச் சொற்திரட்டு

“இந்தத் திட்டத்தைத் தொடங்க, நாங்கள் முதலில் ஒரு கூகிள் படிவத்தை உருவாக்கி, எங்கள் நண்பர்கள், உறவினர்களை, பெண்களையோ எந்த ஒரு சமூகத்தினரையோ இழிவு படுத்தாத, சில ஏச்சு வார்த்தைகளைப் பதிவு செய்யச்சொன்னோம். இப்படி, எங்களுக்குச் சுமார் 800 வார்த்தைகள் கிடைத்தன. அதில் 40 சதவீதம் சாதி அல்லது பாலினப் பாகுபாட்டைக் குறிப்பது, பெண்களை இழிவுபடுத்துவது போல் தான் இருந்தன. ஆனால் சுமார் 500 வார்த்தைகள் கண்ணியமானவையாக இருந்தன.” என்று அவர் கூறினார்.

நேஹா தாக்கூர்

இந்தப் பட்டியலில் சேகரிக்கப்பட்ட சொற்களின் பொருளைப் புரிந்து கொள்ள, நேஹாவும் தமன்னாவும் முதலில் அந்தந்த மாநிலங்களில் வாழும் நண்பர்கள் மற்றும் நிபுணர்களுடன் பேசினர். சொற்களின் பொருளைச் சரிபார்த்து, ஆராய்ந்து புரிந்துகொண்ட பிறகு, அவர் இந்த வார்த்தைகளை சமூக ஊடகங்களில் வைக்கத் தொடங்கினர். இவை பெரும்பாலான மக்களின் வரவேற்பைப் பெற்றன. ஆனால், சிலர், இதுபோன்ற கண்ணியமான வார்த்தைகளின் மூலம், கோப உணர்ச்சியின் வெளிப்பாடு முழுமையாக இருக்காது என்றனர்.

“இதுபோன்ற சொற்களை இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக தளங்களில் வைக்கிறோம், அதனால் மக்கள் அவற்றைப் பார்க்கிறார்கள். திட்டும் போது பயன்படுத்தும் வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் மக்களின் சிந்தனையை மாற்ற முயற்சிக்கிறோம். இந்தச் செயல்முறை மிகவும் மெதுவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்றாலும், ஒவ்வொரு முறையும் மாற்றத்தைக் கடுமையான முறையிலேயே கொண்டு வர வேண்டியதில்லை. சில மாற்றங்கள் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் கூட நிகழலாம், இது எங்கள் முயற்சி. சில வேடிக்கையான சொற்களைக் கண்டால், அவற்றை சமூக ஊடகங்களில் வைக்கிறோம், இவற்றை மக்கள் ரசிக்கும்போது அவர்களின் பழக்கமும் மாற வாய்ப்புள்ளது” என்று தமன்னா மிஸ்ரா நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

தமன்னாவும் நேஹாவும் மக்களைத் தரம் தாழ்ந்த சொற்கள் பயன்பாட்டிலிருந்து மாற்றும் முயற்சியில் முதல் படியில் தான் இருக்கின்றனர். இந்தச் சொற்களின் தொகுப்பை எதிர்காலத்தில் ஒரு புத்தக வடிவில் உருவாக்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், இந்தத் தவறான கலாச்சாரத்தின் தோற்றம் மற்றும் அதில் பெண்களை இழிவுபடுத்தும் போக்கு தொடங்கியது எங்கே என்ற கேள்வியும் எழுகிறது.

ஒரு மொழி உருவான பின்னர் தான் இந்தப் போக்கு தொடங்கியிருக்க முடியும் என்று கருதப்படுகிறது.

இந்தி மற்றும் மைதிலி மொழி இலக்கிய எழுத்தாளர், பத்மஸ்ரீ உஷா கிரண் கான், இந்தப் பழக்கம் எப்போது தொடங்கியிருக்க வேண்டும் என்று சொல்வது கடினம் என்று கூறுகிறார், ஆனால் சமூகத்தின் வளர்ச்சிக்குப் பிறகு தான் நல்லது மற்றும் கெட்டது பற்றிய புரிதல் இருக்கும் என்றும், அதன் பிறகு தான் இந்தப் பழக்கமும் தொடங்கியிருக்க வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். கெட்ட வார்த்தைகளைப் பிரயோகிப்பதன் மூலம், கோபத்தை வெளிப்படுத்தும் ஒரு வழியாக இருப்பதால் அது நடந்திருக்க வேண்டும் என்கிறார் இவர்.

நாட்டுப் புறப் பாடல்களில் ஏச்சு

Dr. உஷா கிரண் கான்

நாட்டுப்புற பாடல்களிலும் ஏச்சுக்கள் காணப்படுகின்றன. என்றாலும், அவை திருமண நிகழ்ச்சிகள் போன்ற தருணங்களில் சொந்தங்களைக் கிண்டல் செய்து சூழலை இனிதாகவும் லேசாக்கவும் அவை பயன்படுத்தப்பட்டன. அவற்றில் எந்த இழிவான நோக்கமும் இல்லை. ஒரு வகையில், சமூக மற்றும் குடும்ப நல்லிணக்கத்தை அதிகரிக்க அவை பயன்படுத்தப்படுகின்றன

பத்மஸ்ரீ டாக்டர் சாந்தி ஜெயின் சமஸ்கிருத பேராசிரியராக இருந்தவர்.

எழுத்தாளர் உஷா கிரணின் கருத்தை முன்னெடுத்து டாக்டர் ஜெயின் கூறுகையில்,” திருமணத்திற்குப் பிறகு விருந்துப் பாடல் பாடப்படுகிறது, அதில் ஏச்சுக்கள் இடம்பெறும் பாரம்பரியம் உள்ளது.” என்று தெரிவித்தார்.

மேலும் விளக்கும் அவர், “துளசிதாசரின் மூல ராமாயணத்தில், ராமர் திருமணம் செய்து கொள்ளும்போது, ​​சீதையின் உறவினர்கள் அவளை விளையாட்டாகக் கேலி செய்கின்றனர். அங்கு, ஏச்சுப் பேச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. இதை நான் படித்துள்ளேன். இவற்றை நேரடியாகப் பொருள் கொள்வதற்கில்லை. அதே சமயம், நாட்டுப்புறக் கதைகள் மிகவும் பழமையானவை. மக்கள் சண்டையிட்டாலும் ஏசிக்கொள்வார்கள். ஆனால் கோபத்தில் ஏச்சு சொற்கள் பயன்படுத்தப்படும்போது, ​​அதன் விளைவுகள் விபரீதமாகின்றன. ” என்று கூறுகிறார்.

இத்தகைய சொற்களின் பயன்பாடு குறித்து எழுத்தாளர் உஷா கிரண் கான் கூறுகையில், “தொடக்கத்தில், இலக்கியத்தில் தரம் தாழ்ந்த சொற்கள் எதுவும் இல்லை. சமஸ்கிருதம், பாலி, பிரகிருதம் மற்றும் சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய தென் மொழிகள் அவை நாட்டுப்புற வாழ்க்கையின் மொழிகளாக இருந்தன. இது எழுத்துப்பூர்வமாக ஏச்சுச் சொற்களை வெளிக் காட்டாது. சமஸ்கிருதத்தில் எந்தவிதமான தரம் தாழ்ந்த சொற்களும் இல்லை, ஆனால் பொல்லாத மற்றும் மோசமான போன்ற சொற்கள் தோன்றுகின்றன, அவை அந்தக் கால கட்டத்தில் மிகவும் மோசமானவையாகக் கருதப்பட்டன. ஆனால் 1000 ஆண்டுகளில், மக்கள் வெளியில் இருந்து வந்து இங்கு வாழ ஆரம்பித்தபோது, ​​இவை உருவாகியிருக்க வேண்டும்.” என்கிறார்.

ஆனால் இந்தச் சொற்களில், பெண்களை இழிவு படுத்தும் போக்கு எப்போது, ஏன் உருவானது?

அதற்கு பதிலளிக்கும் விதமாக, “வேத காலத்தில் பெண்களும் ஆண்களும் சமமாக இருந்தார்கள். ஆனால் பின்னர் பெண்களின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது, ஆண்களின் மேலாதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது, பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்கள் மீது அதிகரிக்கத் தொடங்கியது. படிப்படியாகப் பெண்கள் இரண்டாந்தரப் பாலினமாகக் கருதப்பட்டனர். ஆண்களுக்கு அவர்கள் ஒரு கௌரவத்துக்கான பொருளாகக் கருதப்பட்டனர். மன்னர்கள் தங்கள் மகள்களை மரப்பலகையில் வைத்து, அவர்கள் விழுந்து இறக்கச் செய்வர். மகள் இல்லையென்றால், யார் முன்பும் கை நீட்ட வேண்டியதில்லை, யாரிடம் ஏச்சுக்களை ஏற்க வேண்டியதில்லை. அதே சமயம், போரில் யாராவது தோற்றால், அவர் தனது மகள்களை வெற்றி பெற்றவருக்குக் கொடுப்பார் என்றும், அத்தகைய கால கட்டத்தில், அது இத்தகைய சொல்லாடல்களுக்கு மூலமாக மாறியது என்றும் கூறப்படுகிறது.” என்று அவர் கூறுகிறார்.

பெண்

பெண் பாதுகாப்பு ஒரு பெரிய விஷயமாக மாறியது மற்றும் பெண்கள் ஆண்களின் சொத்தாக மாறினர். அந்த சொத்தை ஏசவும் தொடங்கினர். பெண்களை ஏசுவதன் மூலம், ஆண்கள் தங்கள் ஆதிக்க உணர்வை நிரூபித்தனர். மற்றவரை அவமானப்படுத்துகிறார்கள். காலம் செல்லச் செல்ல, நவீன சகாப்தத்தில் அந்தப் போக்கு அதிகரிக்கத் தொடங்கியது.

சமூகவியலாளரும் பேராசிரியருமான பத்ரி நாராயண், முந்தைய சமுதாயத்தில் அல்லது பழங்குடி சமுதாயத்தில் பெண்கள் மதிப்புமிக்கவர்களாக கருதப்பட்டனர், ஆனால் பின்னர் பெண்கள் மரியாதைக்குரிய அடையாளமாக பார்க்கப்பட்டனர் என்று நம்புகிறார். பெண்களின் கௌரவம் அவர்களின் உடலில் தான் என்ற நிலை ஏற்பட்டது. பெண்கள் சமுதாயத்தில் பலவீனமாகக் கருதப்படத் தொடங்கினர். ஒருவரை இழிவுபடுத்த விரும்பினால், அவர்களைத் துன்புறுத்த விரும்பினால், அவர்களின் வீட்டுப் பெண்களைத் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் ஏசினால் அது அந்த மனிதனுக்கான அவமானமாகக் கருதப்பட்டது. இதனால், தாய், சகோதரி அல்லது மகள் இலக்காகிறார்கள், ஏனெனில் தாயை, சகோதரியை, மகளைப் பாலியல் ரீதியாகத் தாக்கிப் பேசுவது அந்த ஆண்மகனுக்கு அது மிகப்பெரிய அவமானமாக இருக்கும் என்று எண்ணப்பட்டது.

இரண்டாந்தர குடிமக்களான பெண்கள்

பெண்

இது குறித்து மேலும் கூறும் டாக்டர் சாந்தி ஜெயின் “பெண் சக்தி குறித்து உயர்வாகப் பேசப்பட்டாலும், இன்னும் பெண்கள் இரண்டாம் நிலையில் தான் உள்ளனர் என்று கூறுகிறார். படித்த பெண்களும் துன்புறுத்தப்படுகிறார்கள். ஒருவரை அவமானப்படுத்த விரும்பினால், அவரது வீட்டின் பெண்ணைத் தாக்கிப் பேசுவது மரபாகிப் போனது. ஒரு ஆணைப் பழிவாங்க வேண்டியிருந்தால், அவர் வீட்டுப் பெண்ணைக் கவர்ந்து செல்வது பழக்கமானது. அந்தப் பெண் அவமானத்தின் சின்னமாக மாறுகிறார். இந்தப் போக்கு கிராமப்புறத்தில் பரவலாக இருந்தது. பொதுவாக இந்தப் போக்கு, சமுதாயத்தின் கீழ்மட்டங்களில் வாழும் மக்களிடையே மட்டுமே காணப்பட்டது. ஆனால் இப்போது படித்தவர்கள் கூட அவற்றைக் கையாள்வது மிகவும் சகஜமாகி விட்டது.

பேராசிரியர் பத்ரி நாராயண் இதை சமூகத் தணிக்கையுடன் தொடர்புபடுத்துகிறார். முந்தைய காலங்களில் மக்கள் குடும்பத்தை மதித்து, தாத்தா, அப்பா போன்ற மூத்தவர்கள் முன்னிலையில் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. தான் பேசுவதை அவர்கள் கேட்டு விடக் கூடாதே என்ற பயம் இருந்தது. ஆனால் இப்போது சமூகக் கட்டமைப்பு சிதைந்து வரும் நிலையில், சமூக ஊடகத் தளங்களில் கூட மக்கள் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்த சொற்பிரயோகம் செய்கிறார்கள். அங்கு அவை வரவேற்கவும் படுவது தான் மிகுந்த வேதனையான விஷயம். இது நம் சமுதாயத்தில் ஊடுருவி விட்டது. இதில் தவறேதும் இல்லை என்ற மன நிலை பெரும்பாலும் உருவாகத் தொடங்கி விட்டது.

பாலி மொழியில் ஒரு உதாரணம் ‘ புத்து ‘ என்ற சொல். இந்த வார்த்தையில், நகைச்சுவை மற்றும் ஏச்சு ஆகியவற்றுக்கு இடையில் இருப்பது ஒரு மெல்லிய கோடு தான். இங்கே, நீங்கள் உங்கள் கருத்தைத் தெரிவித்தீர்கள், கிண்டல் செய்தீர்கள், அவர்களை விமர்சித்தீர்கள். ஆனால் பின்னர் இந்தப் போக்கு தீவிரமடையத் தொடங்கியது.

டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்தி இலக்கிய உதவி பேராசிரியர் நீரா மற்றொரு கோணத்தில் பார்க்கிறார்.

உற்று நோக்கினால், இவற்றில் பெண்களைக் குறிப்பிடுவது போல, ஆண்கள் குறிப்பிடப்படுவதில்லை என்று அவர் கூறுகிறார். வரலாற்றில் கூட, அத்தகைய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. சமூகத்தில் செய்யப்பட்ட வகைப்பாட்டின் அடிப்பகுதியில் வரும் விஷயங்களுக்கு இத்தகைய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பெண்கள், குறிப்பிட்ட சாதி அல்லது வண்ணத்தின் அடிப்படையில் எதிர்மறையான கருத்துக்கள் வெளியிடப்பட்ட நாட்டுப்புறங்களில் பல முட்டாள்தனங்கள் உள்ளன. அதே நேரத்தில், விபச்சாரி, வேசி, சதி போன்ற சொற்கள் பெண்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அதன் ஒத்த சொற்கள் ஆண்களுக்கு கிடைக்கவில்லை. கிரந்தங்களின் மூலம் பெண்களை மதிப்பு மிக்கவர்களாகக் காட்டப்பட்ட நிலையில், பொது இலக்கியத்தை எடுத்துக் கொண்டால், இன்னும் மோசமான நிலையே காணப்படுகிறது.

“நம் சமூகத்தில் பரவலாக தணிக்கை செய்யப்பட்டு வந்த – பாரம்பரியம், மதிப்புகள் மற்றும் மனிதநேயம் ஆகியவை பலவீனமடைந்துள்ளன. பெண்களுக்கான பல இயக்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, விழிப்புணர்வும் அதிகரித்து வருகிறது, ஆனால் அந்தப் பாலினம் தொடர்ந்து கீழ் நிலையிலேயே பார்க்கப்படுகிறது. அவர்களால் சமூகக் கருத்துக்களை மாற்ற முடியவில்லை.” என்பது பேராசிரியர் பத்ரி நாராயண் அவர்களின் பார்வை.

“அவர்கள் வேலை செய்யும் இடத்தில் யாரும் நேரடியாக பெண்களை ஏச மாட்டார்கள் என்ற அளவுக்கு மாற்றம் வந்துள்ளது. இருவரும் தொடர்புகொள்வது, ஒன்றாக வேலை செய்வது, உணவை சாப்பிடுவது என்று முன்னர் இருந்த நிலை போலல்லாமல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், இது பரவலாக இல்லை என்பதும் உண்மை. பெரும்பான்மையினர் இன்னும் இந்த மாற்றத்துக்குத் தயாராகவில்லை. தரம் தாழ்ந்த சொற்கள் வெறும் சொற்கள் மட்டும் அல்ல. அவை அவர்களின் மன நிலையின் பிம்பம் என்பது உண்மை. வாயிலிருந்து வரும் வார்த்தைகளை உண்மையாக்க விழையும் நிலையில் தான் நிர்பயா போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன” என்று அவர் விவரிக்கிறார்.

  • சுஷீலா சிங்,
  • பிபிசி செய்தியாளர்

https://www.bbc.com/tamil/india-55376110