குடிசைக் கைத்தொழில் ஊடகவியலாளர்கள்?

Posted on திசெம்பர் 20, 2020

0


FB_IMG_1586414776015

தங்களைத் தாங்களே ஊடகவியலாளர்கள் என அடையளப்படுத்திக்கொண்டு, சமூக வலைத்தளங்களில் நேரலை செய்பவர்கள் மற்றும் எழுதிவருபவர்கள் தொடர்பில் நீண்டகாலமாகவே அச்ச உணர்வு இருந்துவந்தது. (சிலர் இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி வருவதையும் மறுக்கமுடியாது.) இந்த அச்ச உணர்வின் பிரதிபலிப்பை நேற்று எல்லோரும் தெளிவாக கண்டுகொண்டோம்.

ஆர்வக்கோளாறு பிடித்தவர்களும், முறையாக ஊடகக் கல்வியை கற்காதவர்களும், ஊடக ஒழுக்க நெறிக்கோவை தொடர்பில் கிஞ்சித்தும் அறிவில்லாதவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடு இன்று சமூகத்தை நாற்சந்தியில் நிறுத்தியிருக்கிறது.
இலங்கையில் 185 கொரோனா நோயாளர்கள் தொடர்பில் பொதுவாக எந்த தகவலும் ஊடகங்களில் வெளிப்படையாக பகிரப்படவில்லை. ஆனால், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் அதுவும் முஸ்லிம் ஒருவருக்கு கொரோனா வந்துவிட்டது என்பதற்காக களத்தில் நின்றுகொண்டு அதை நேரலை செய்து, இனவாத ஊடகங்களுக்கு தீனி போட்ட ஈனச்செயலை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

நமது வீட்டில் நிகழாதவரை அனைத்தையும் செய்திகளாக காட்டுபவர்களுக்கு கிடைப்பது வெறும்  Likes மட்டுமே. Likes எடுப்பதற்காக சமூகத்தை காட்டிக்கொடுக்கும் இவர்கள் முதலில் இறைவனுக்கு பயந்துகொள்ள வேண்டும். இந்து சகோதரர்கள் மத்தியில் இப்படியொரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டிருந்தால், விடயம் இந்தளவுக்கு பூதாகரமாக காண்பிக்கப்பட்டிருக்காது என்பது வெள்ளிடைமலை.

சமூக ஊடகங்களில் நேரலை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி TV (தொலைக்காட்சி) என்ற பெயரில் குடிசைக் கைத்தொழில் செய்பவர்கள், முதலில் கண்டது நிண்டது என எல்லாவற்றையும் நேரலை செய்வதை முதலில் நிறுத்துங்கள். பேஸ்புக் வேறு தேவைகளுக்காக வழங்கிய தொழில்நுட்பத்தை TV என்ற பெயரில் முறைகேடாக பயன்படுத்த வேண்டாம்.
கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் ஒருவரை பெரும்பான்மை ஊடகங்கள் காண்பித்தால் ‘இனவாதிகள்’ என்று சாயம்பூசிய நாம், இவர்களுக்கு எதிராக என்ன செய்யப்போகிறோம்? கம்பெடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரனாக ஆகிவிட முடியுமா? இவர்களின் தான்தோன்றித்தனமான செயற்பாடு உண்மையான ஊடகவியலாளர்களுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

பரிந்துரைகள்:
• சமூக ஊடகங்களில் நேரலை செய்பவர்கள், எழுதுபவர்களுக்கு ‘ஊடகவியலாளர்’ என்ற போர்வையில் ஊடக அமைப்புகளில் அங்கத்துவம் வழங்கப்படக்கூடாது.

• சமூக ஊடகங்களை நன்மைபயக்கும் விதத்தில் பயன்படுத்துவர்கள் அச்சு, இலத்திரனியல் அல்லது செய்தி இணையத்தளம் போன்றவற்றில் செய்தியாளராக இருப்பின் மாத்திரமே அவர்களுக்கு ஊடக அமைப்புகளில் அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும்.

• சமூக ஊடகங்களை இதுபோன்று தவறான வழியில் பயன்படுத்துபவர்கள் யாராவது ஊடகவியலாளர் என்ற போர்வையில் ஊடக அமைப்புகளில் அங்கத்துவம் பெற்றிருந்தால், அவர்களின் உறுப்புரிமை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

• பேஸ்புக் பக்கங்களை (Facebook page) மாத்திரம் வைத்திருப்பவர்கள், அதனை ஒரு ஊடக நிறுவனமாக காண்பித்து ‘ஊடக அடையாள அட்டை’ விநியோகித்து வருகின்றனர். அவற்றை தகவல் திணைக்களம், பாதுகாப்பு துறையினருக்கு அடையாளம் காட்டி தடைசெய்ய வேண்டும்.

• Facebook TV என்ற பெயரில் அவற்றை தவறாக பயன்படுத்துபவர்களுக்கு விளம்பரம் மற்றும் நன்கொடைகள் வழங்குவதை நிறுத்தவேண்டும். ஆனால், நல்ல முறையில் பயன்படுத்துபவர்கள் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
#பிறவ்ஸ்

FB_IMG_1586414778419

https://www.thenation.lk/2020/04/blog-post_57.html