காஷ்மீர் : தினக்கூலியாக மாறிய ஊடகவியலாளர்கள், பத்திரிகையாளர்கள் செங்கல் உடைக்கும் அவலம்

Posted on பிப்ரவரி 8, 2020

0


  • 7 பிப்ரவரி 2020
முடக்கப்பட்ட காஷ்மீர்: தினக்கூலியாக மாறிய ஊடகவியலாளர்கள் #GroundReportபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

கடும் பனிப்பொழிவுக்கு இடையில், இந்திய நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் நகரில் மார்க்கெட் சதுக்கத்தில், 29 வயதான முனீப் உல் இஸாமை நான் சந்தித்தேன். உள்ளூர் மக்கள் பாரம்பரியமான காஷ்மீரி அங்கி உடை அணிந்திருந்த நிலையில், முனீப் நேவி ப்ளூ நிறத்தில் முரட்டுத்துணியில் தைத்த பேண்ட், மலையேற்றத்துக்கு உகந்த ஷூக்கள் அணிந்திருந்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 7 ஆண்டுகளாக புகைப்பட செய்தியாளராக பணிபுரிந்த அறிகுறிகள் அவரை விட்டு இன்னும் நீங்கவில்லை. இருந்தாலும், அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டதில் இருந்து, தெற்கு காஷ்மீரை சேர்ந்த அவருடைய, புகைப்பட நிருபர் தொழில் கைவிட்டுப் போய்விட்டது. 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி, பள்ளத்தாக்குப் பகுதியில் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட்டன. தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்தி நிறுவனங்களுக்கு பகுதிநேர அடிப்படையில் பணியாற்றி வந்த முனீப்பை போன்ற செய்தியாளர்கள் தங்கள் செய்திகள் மற்றும் புகைப்படங்களை அனுப்புவதற்கு இன்டர்நெட் வசதியை மட்டுமே நம்பியிருந்தனர். இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதால் அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர்.

முடக்கப்பட்ட காஷ்மீர்: தினக்கூலியாக மாறிய ஊடகவியலாளர்கள் #GroundReportபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

அந்த சிறிய நகரில் பனி மூடிய குறுகலான தெருக்களின் வழியே நடந்து நம்மை அழைத்துச் சென்ற முனீப், அனந்த்நாக்கில் சிறிய கடை போல இருந்த பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்றார். உருது பத்திரிகை ஒன்றிற்கு பணியாற்றும் அவருடைய சக பத்திரிகையாளர், அந்தக் கடைக்குள் அமர்ந்து, லேப்டாப் மூலம் செய்தி பதிவு செய்து கொண்டிருந்தார். எங்களை வரவேற்ற அவர், “செய்தியை எழுதி என்ன பயன்? எப்படியும் என்னால் செய்தியை அனுப்ப முடியாது. இன்டர்நெட் வசதி இல்லாத நிலையில், இந்த லேப்டாப்கள் பழுதான இயந்திரங்களைப் போல தான் உள்ளன” என்று கூறினார்.

அந்த அறையில் ஒரு சோகம் இழையோடியதை என்னால் உணர முடிந்தது. பள்ளத்தாக்குப் பகுதியில் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதால், உள்ளூர் செய்தியாளர்களின் பணி நீண்ட காலமாக நின்று போய்விட்டது. இதனால் வேலையை இழந்துவிட்ட நிலையில், வாழ்வாதாரத்துக்காக வேறு வேலைகளை நாடியுள்ள ஒரு டஜனுக்கும் மேற்பட்ட உள்ளூர் காஷ்மீரி செய்தியாளர்களில் முனீப்பும் ஒருவர். `வேலை இல்லாத காலத்துக்கு சம்பளம் இல்லை’ என்ற நிலையில் பல மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தன் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு, கட்டுமான வேலை நடைபெறும் இடத்தில் செங்கல் சுமப்பதைத் தவிர முனீப்புக்கு வேறு வழி தெரியவில்லை.

புகைப்பட நிருபர் தொழிலில் இருந்து, தினக்கூலி தொழிலாளியாக மாறியது பற்றிக் குறிப்பிட்ட போது முனீப் மிகுந்த சோகமானார். “இதழியல் துறை பிடித்திருந்ததால் இந்தத் தொழிலைத் தேர்வு செய்தேன். என் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். 2012ல் பகுதிநேர பணியாக இதைத் தொடங்கினேன்.

2013ல் டெய்லி ராவுஸ்னி மற்றும் காஷ்மீர் இமேஜஸ் பத்திரிகைகளுக்கு நான் பணியாற்றத் தொடங்கினேன். இரண்டுமே காஷ்மீர் மாநில பத்திரிகைகள். 2015ல் மீண்டும் பகுதிநேர பணியைத் தொடங்கி தி குவின்ட், டெலிகிராப், தாம்ஸன் ராய்ட்டர்ஸ், காஷ்மீர் ரீடர் ஆகியவற்றுக்கும், வாஷிங்டன் போஸ்ட்டுக்கும் கூட புகைப்படங்கள் அனுப்பினேன். சண்டைகள் நடந்து கொண்டிருந்த தெற்கு காஷ்மீரில் மிகுந்த ஈடுபாட்டுடன் நான் செய்தி சேகரித்து அனுப்பிக் கொண்டிருந்தேன். 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு என் தொழில் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.” என்று அவர் கூறினார்.

முடக்கப்பட்ட காஷ்மீர்: தினக்கூலியாக மாறிய ஊடகவியலாளர்கள் #GroundReportபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டு முதல் நான்கு மாத காலம் முயற்சி செய்தும் எந்தச் செய்தி, படங்களையும் அனுப்ப முடியாமல் போன நிலையில், பொருளாதார சிக்கல் அவரை கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியது. நம்பிக்கை குலைந்து, பண வசதியும் இல்லாத நிலையில், காமிராவை தள்ளி வைத்துவிட்டு, கிடைக்கிற வேலைகளைச் செய்து பணம் சம்பாதிப்பது என்று வேலைகள் செய்யத் தொடங்கிவிட்டார்.

இந்த முறை கட்டட வேலை நடைபெறும் இடத்தில் தினக்கூலி தொழிலாளியாக அவருக்கு வேலை கிடைத்துள்ளது. இப்படி ஒரு வேலைக்கு வருவோம் என்று கனவிலும் முனீப் நினைத்துப் பார்த்தது கிடையாது.

“கடந்த ஆண்டு தான் எனக்குத் திருமணம் ஆனது. சமீப காலமாக என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை. வீட்டுச் செலவுகளை என் தம்பி கவனித்துக் கொள்கிறார். ஆனால், என் மனைவியின் சிகிச்சை செலவுகளையாவது நான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். அதனால், பக்கத்தில் கட்டட வேலை நடைபெறும் இடத்தில் தொழிலாளியாக வேலை பார்க்கிறேன். நாள் முழுக்க வேலை செய்தால் எனக்கு 500 ரூபாய் தருவார்கள். என் மனைவிக்கு மருந்துகள் வாங்க வேண்டும் என்பது பற்றி மட்டுமே அந்த வேலையின் போது நான் நினைத்துக் கொள்வேன். இந்த நாள்களில் எனது காமிரா வீட்டில் பயன்படாமல் கிடக்கிறது” என்று அவர் கூறினார்.

அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது இந்திய ஊடகத்திற்கு மட்டுமின்றி, சர்வதேச பத்திரிகைகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வாக அமைந்துவிட்டது. நெருக்கடியான, செய்தியாளர் என்ற வகையில் முக்கியமான அந்த காலக்கட்டத்தில் புகைப்படங்களை அனுப்ப முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் முனீப்பின் முகத்தில் தெரிகிறது. பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் வீட்டுத் தொலைபேசிகள் செயல்படத் தொடங்கியதும், செய்திகளை அனுப்ப அவர் முயற்சி செய்தார். ஆனால், கிடைக்கிற வருவாயைவிட அதற்கு அதிகம் செலவானது.

முடக்கப்பட்ட காஷ்மீர்: தினக்கூலியாக மாறிய ஊடகவியலாளர்கள் #GroundReportபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

“370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரில் வால்நட் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் பற்றி டெல்லியைச் சேர்ந்த ஓர் இணையதளத்திற்கு நான் ஒரு செய்தி அனுப்பினேன். அந்த கண்ணோட்டம் அவர்களுக்குப் பிடித்துப் போய், அதை வெளியிட்டார்கள். இங்கே எங்களுக்கு இன்டர்நெட் வசதி இல்லை. ஸ்ரீநகருக்கு செல்வதைத் தவிர எனக்கு வேறு வழி கிடையாது. அந்தச் செய்தியை அனுப்ப நான் ஸ்ரீநகருக்கு இரண்டு முறை செல்ல வேண்டியிருந்தது, அதற்கு 6 ஆயிரம் ரூபாய் செலவானது. செய்திகள் மூலம் எனக்குக் கிடைக்கும் வருமானத்தைவிட அதிகமாக நான் செலவு செய்வதை உணர்ந்ததும், செய்தி அனுப்புவதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துவிட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.

ருபயத் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற காஷ்மீர் செய்தியாளரும் தன் வேலையை விட்டுவிட்டார். மாநிலத்தில் இன்டர்நெட் முடக்கப்பட்டிருப்பதால் வெறுப்பாகியுள்ள அவர், “காஷ்மீரில் இருந்து இந்த வேலை பார்ப்பது உங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாகிவிட்டது. கடந்த 4 ஆண்டுகளாக அனந்த்நாக் மற்றும் குல்கம் மாவட்டங்களில் இருந்து நான் செய்திகள் அனுப்பி வந்தேன். பல பேர் என் கண் எதிரே சாவதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அந்த நிலையிலும், இங்குள்ள மக்கள் பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை. எங்களுக்கு மிகவும் குறைந்த ஊதியம் தான் தருகிறார்கள். இந்தப் பிரச்சினைகள் போதாது என்று, இன்டர்நெட் முடக்கம் எங்களுக்குப் புதிய சவால்களைக் கொண்டு வந்துவிட்டது. எனவே செய்திகள் அனுப்புவது எனக்குப் பிடிக்கும் என்றாலும், அதை நிறுத்திவிட்டேன். இப்போது பால் பண்ணை தொடங்கலாம் என திட்டமிட்டிருக்கிறேன். அதற்காக தொழில்முனைவோர் மேம்பாட்டு நிலையத்தில் நான் இப்போது பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன்” என்று கூறினார்.

தேசிய தகவல் மையம், அனந்த்நாக்:

2019 டிசம்பரில் அனந்த்நாக்கில் உள்ள தேசிய தகவல் மையத்தில், கட்டுப்படுத்தப்பட்ட அளவில் அரசு இன்டர்நெட் சேவைகளை அளிக்கத் தொடங்கியது. மத்திய அரசின் பொதுத் தகவல் துறையின் மாவட்ட அலுவலகம் இது. ஆனால் முனீப் மற்றும் ருபயத் போன்ற செய்தியாளர்களின் நிலைமையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

முடக்கப்பட்ட காஷ்மீர்: தினக்கூலியாக மாறிய ஊடகவியலாளர்கள் #GroundReportபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்த மையத்தில் உள்ள பிரச்சினைகள் பற்றி கூறிய முனீப், “ஸ்ரீநகரில் உள்ள பத்திரிகை மையம் போல அனந்த்நாக் மையம் இல்லை. இது செய்தியாளர்களுக்கு மட்டுமானதாக கிடையாது. இங்கே நான்கு கணினிகள் மட்டுமே உள்ளன. மாவட்டத்தின் அனைத்து வேலைகளும் அவற்றின் மூலம் தான் நடக்கின்றன. அரசு அதிகாரிகள் ஆவணங்கள் தயாரித்தல், மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தல், இளைஞர்கள் வேலைகளுக்கு விண்ணப்பித்தல் போன்றவை இவை மூலம் நடக்கின்றன. இங்குள்ள தகவல் மையம் எப்போதும் அதிகமான கூட்டமாகவே இருக்கிறது. எங்களுக்கு சில நிமிட நேரம் தான் கிடைக்கும். இங்கு இன்டர்நெட் வேகம் குறைவு. என்னுடைய இமெயிலை பார்ப்பது கூட சிரமமாக இருக்கும். பிரசுரமான அல்லது வெளியான எனது செய்திகளைக் கூட என்னால் பார்க்க முடியாது” என்று அவர் தெரிவித்தார்.

பெரும் கூட்டம், வேகம் குறைந்த இன்டர்நெட் ஆகியவற்றைக் கடந்தும், தங்களுடைய எழுத்து சுதந்திரம் காப்பாற்றப்படுமா என செய்தியாளர்கள் அஞ்சுகின்றனர். “இங்கே தகவல் மையத்தில் இன்டர்நெட் வசதியை அளிக்கும் அலுவலர்கள், நாங்கள் என்ன படங்களை அனுப்புகிறோம் என்பதைக் காட்டுமாறு கேட்கிறார்கள். இது எங்களுக்கு அசௌகரியமாக உள்ளது. ஆனால் எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் முனீப்.

ஜம்மு காஷ்மீர் அரசுக்கான மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளராக உள்ள முதன்மைச் செயலாளர் (திட்டமிடல் மற்றும் தகவல் தொடர்பு) ரோஹித் கன்சாலை தொடர்பு கொள்ள பிபிசி பல முறை தொலைபேசி மூலமும், மெசேஜ் அனுப்பியும் முயற்சி செய்தது. காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்களின் புகார்கள் மற்றும் அவர்களுடைய நிலைமைகள் பற்றி அவர் மூலம் அறிய பிபிசி முயற்சி மேற்கொண்டது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை. செய்தியாளர்களுக்கு இன்டர்நெட் கட்டுப்பாடுகளை அரசு எப்போது நீக்கிக் கொள்ளும் என்று தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கான கேள்விகளும் பிபிசியின் பட்டியலில் இருந்தன. தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், இதுவரை எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

குலகம்: கதை சொல்லிகளே கதைகளாகிப் போன கதை

குவாசிம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குலகமில் கடந்த 5 ஆண்டுகளாக செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார். 2019 ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு வரையில், தன் குடும்பத்தின் தேவைகளை ஓரளவுக்கு அவரால் சமாளிக்க முடிந்தது. ஆனால் இப்போது, தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் வாங்குவதற்குக் கூட அவரிடம் பணம் இல்லை.

முடக்கப்பட்ட காஷ்மீர்: தினக்கூலியாக மாறிய ஊடகவியலாளர்கள் #GroundReportபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகோப்புப் படம்

பிபிசியிடம் பேசிய அவர், “கடந்த செப்டம்பர் மாதம் வீட்டுத் தொலைபேசிகள் செயல்படத் தொடங்கிய போது, டிக்டேட் செய்து சில செய்திகளைக் கொடுக்க நான் முயற்சி செய்தேன். ஆனால் இப்போதுள்ள நெரிசலான சூழ்நிலையில், தொலைபேசி மூலம் டிக்டேசனாக தரப்படும் செய்திகளை எழுதுவதற்கு செய்தி அறையில் யாருக்கு நேரம் இருக்கும்? கடந்த 6 மாதங்களாக நான் செய்திகள் அனுப்ப முடியவில்லை என்பதால் என்னிடம் பணம் இல்லை. என் பெற்றோரும், மனைவியும் என்னை நச்சரிக்கின்றனர். வேறு வேலை தேடுமாறு கூறுகின்றனர். ஆனால், நான் வேறு என்ன வேலை செய்ய முடியும்? ஒரு முறை செய்தியாளனாகிவிட்டால், காலம் முழுக்க செய்தியாளர் தான். பத்திரிகை தொழிலைத் தவிர எனக்கு வேறு எந்தத் தொழிலும் தெரியாது” என்று கூறினார்.

ஆறு மாத காலம் இன்டர்நெட் துண்டிக்கப்பட்டதால், வேலை நிமித்தமான தொடர்புகளை இழந்துவிட்டதாக, குவாசிமுடன் பணியாற்றும் ரபீக் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். `சமூகத்தில் தொடர்புகளை இழந்துவிட்டால் எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும்’ என்பது பற்றி பேசியபோது அவர் முகத்தில் கவலை தெரிந்தது. “இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டதால், நிதி நெருக்கடியும், வேலை இல்லாமல் போனதும் தான் எங்களுக்கு ஏற்பட்ட உடனடி பாதிப்புகள். ஆனால் கடந்த 6 மாதங்களாக நாங்கள் வேலை பார்க்காத காரணத்தால், செய்திகள் குறித்த தொடர்பாளர்களுடன் தொடர்பு குறைந்து வருகிறது. நீண்டகால நோக்கில் இது எங்களுக்குப் பெரிய இழப்பாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.

`நியூயார்க்கில் என்ன நடக்கிறது என நான் அறிவேன். ஆனால் சோபோர் பற்றி எதுவும் தெரியாது’

குலகமில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் தலைநகர் ஸ்ரீநகரில் காஷ்மீர் இமேஜஸ் பத்திரிகையின் ஆசிரியர் பஷீர் மன்ஜரை நான் சந்தித்தேன். கடந்த 6 மாதங்களாக `வெறும் பெயரளவில்’ பத்திரிகையை வெளியிட்டு வருவதாக அவர் கூறினார்.

“உரிமத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு, ஓர் ஆண்டில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்களுக்குப் பத்திரிகையை பிரசுரித்திருக்க வேண்டும் என்பதால், நான் பிரசுரித்து வருகிறேன். மற்றபடி இன்டர்நெட் தடையால் என் கைகள் கட்டப்பட்டுள்ளன. எனது நிருபர்களால் செய்திகளை அனுப்ப முடியவில்லை. கருத்தாளர்களால் கட்டுரைகளை அனுப்ப முடியவில்லை. இணையதளத்தில் செய்திகளை புதிதாக சேர்க்க முடியாததால், மக்கள் பார்ப்பதில்லை, அதனால் ஆன்லைன் வருமானம் குறைந்துவிட்டது. நியூயார்க்கில் என்ன நடக்கிறது என்பதை டி.வி. மூலம் நான் அறிந்து கொள்ள முடியும். ஆனால் எனக்கு அருகில் உள்ள சோபோர் நகரில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியாது” என்றார் அவர்.

இன்டர்நெட் தடையால் பள்ளத்தாக்கில் ஜனநாயகத்தின் அடிப்படையே பாதிக்கப்படும் என்று மன்ஜர் கருதுகிறார். அனைத்து தகவல்களையும் ஸ்ரீநகரில் இருந்து பெற வேண்டும் என்ற நிலை வந்தால், காஷ்மீரில் ஊரகப் பகுதியில் என்ன நடக்கிறது என்பதை மக்களால் அறிந்து கொள்ள முடியாது. அதன் விளைவாக, நாட்டில் ஜனநாயகத்தின் அடிப்படையே பாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

அத்துடன், ஸ்ரீநகரில் தகவல் மையத்தில் காஷ்மீரி பத்திரிகையாளர்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி மன்ஜர் பேசும்போது, நம்பிக்கையின்மை தென்படுகிறது. இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரின் தலைநகரில் அரசின் பொது தகவல் மையத்தில், செய்தியாளர்களுக்காக தனியாக இன்டர்நெட் வசதி அளிக்கப்படுகிறது.

ஸ்ரீநகர் பத்திரிகைத் தகவல் மையத்தில் இருந்து தகவல்களை சேகரிப்பது, அவற்றை அனுப்புவது தினமும் சவாலான வேலையாகவே இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

“ஸ்ரீநகர் பத்திரிகை தகவல் மையம் மற்றொரு சவாலான இடம். காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் பணியில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்களுக்கு இரண்டு டஜனுக்கும் குறைவான கணினிகள் மூலம் அங்கு சேவை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து அரசிடம் கணக்கில்லாத அளவுக்கு நாங்கள் கோரிக்கைகள் வைத்துவிட்டோம். அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கு மட்டுமாவது அரசு பிராட்பேண்ட் இணைப்புகளை அளிக்கலாம். நாங்கள் எங்கும் ஓடிவிட மாட்டோம்; அவர்கள் எங்கள் பிராட்பேண்ட் இணைப்பின் செயல்பாடுகளை கண்காணிக்க முடியும். குறைந்தபட்சம் எங்களுக்கு இன்டர்நெட் வசதியாவது கொடுங்கள்! ஆனால் எல்லா கோரிக்கைகளுக்குமே செவிட்டுக் காதில் சங்கு ஊதியதைப் போல தான் இருக்கின்றன” என்று மன்ஜர் கூறினார்.

செய்தியாளர்கள் வை-பை (Wifi) பாஸ்வேர்ட்கள் கேட்டும், ஹாட்ஸ்பாட்கள் கேட்டும் ஸ்ரீநகர் பத்திரிகை தகவல் மையத்தில் பிச்சைக்காரர்களைப் போல கெஞ்சிக் கொண்டு அலைவதை என்னால் பார்க்க முடிகிறது. 6 மாத காலமாக இன்டர்நெட் வசதி இல்லாததால் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் வெறுப்பை செய்தியாளர்களின் கண்களில் காண முடிகிறது. பிரச்சினைக்குரிய பகுதிகளில் பணியாற்றும் செய்தியாளர்களின் ஆர்வத்துக்கு தடை போடுவதாக இன்டர்நெட் தடை அமைந்துவிட்டது. அது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இப்போதைய பனிப்பொழிவு சாலைகளை மட்டும் முடக்குவதாக இல்லை, செய்தியாளர்களின் கணினி கீ போர்டுகளையும் முடக்கிவிட்டது என்பது போல உள்ளது.

https://www.bbc.com/tamil/india-51405630