‘நான் வேலைக்காரி அல்ல, செய்தியாளர்’ – பெண் பத்திரிகையாளர்

Posted on ஓகஸ்ட் 26, 2021

0


டொராதி பட்லர் கில்லியம்
படக்குறிப்பு,டொராதி பட்லர் கில்லியம்

இனவாதப் பிரச்னைகளால் சமூகம் பெரிதும் பிரிந்து கிடந்த காலகட்டத்தில் டொரோதி பட்லர் கில்லியம், ஒரு முன்னணி அமெரிக்க செய்தித்தாளில், கருப்பின பெண் பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்,

வெள்ளை இனவாத ஆண்கள் ஆதிக்கம் நிறைந்த உலகில், ஒரு கருப்பின பெண்ணாக இருந்தது, எப்படி அவர் வாழ்க்கையை வடிவமைத்தது என்று அவரிடம் கேட்டார் பிபிசியின் ஃபர்ஹானா ஹைதர் .

வாஷிங்டனில் உள்ள ஒரு பணக்கார பெண்ணின் 100 வது பிறந்தநாள் விழாவிற்கு டொரோதி பட்லர் கில்லியம் சென்றபோது, ​​அவ்வீட்டு வாசலின் முக்கியக் கதவு வழியாக உள்ளே நுழைய முடியாது என்று வாயிற்காவலர் கூறினார். “பணிப்பெண்களுக்கான நுழைவாயில் பின்புறத்தில் இருக்கிறது” என கூறினார் அவர்.

“நான் ஒரு வேலைக்காரி அல்ல, நான் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் செய்தியாளர்” என்று பதில் அளித்துள்ளார்

இவர் தி வாஷிட்ங்டன் போஸ்ட் என்கிற பிரபல அமெரிக்க பத்திரிகையின் முதல் ஆப்ரிக்க அமெரிக்க பெண் செய்தியாளர். டொரோதி 1961 இல் வாஷிங்டன் போஸ்டில் தன் பணியைத் தொடங்கினார்.

அடுத்த மூன்று தசாப்தங்களில் அமெரிக்க சமூகம் மற்றும் ஊடகங்களிலும் பல மாற்றங்களைக் கண்ட ஒரு ஆசிரியராகவும், கட்டுரையாளராகவும் மாறினார்.

டொரோதி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது தற்செயலாக பத்திரிகை துறையில் நுழைந்தார். அவர் அப்போது லூயிஸ்-வில்லே டிஃபெண்டர் என்கிற வாராந்திர கருப்பின செய்தித்தாளில் செயலாளராக பணிபுரிந்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் அப்பத்திரிகை ஆசிரியருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவரிடத்தை நிரப்ப கேட்டுக் கொள்ளப்பட்டார். திடீரென்று, எந்த அனுபவமும் இல்லாமல், கருப்பின நடுத்தர வர்க்கத்தைக் குறித்து செய்தி சேகரிக்க அனுப்பப்பட்டார்.

டொராதி பட்லர் கில்லியம்
படக்குறிப்பு,டொராதி பட்லர் கில்லியம்

“அது ஒரு முக்கிய அனுபவமாக இருந்தது, பத்திரிகை ஒரு தொழிலாக இருப்பதை நான் பார்த்தேன். நான் அதை சரியாக செய்யக் கற்றுக் கொண்டால், அது எனக்கு புதிய உலகை திறந்து விடும், என் பார்வையை விசாலமாக்கும் என்று உணர்ந்தேன்” என்கிறார்.

கல்லூரிக்குப் பிறகு ஜெட் மற்றும் எபோனி போன்ற முன்னணி நாளேடுகளில் வேலை செய்தார் டொரோதி. ஆனால் அவரது லட்சியம் தினசரி பத்திரிகையில் பணியாற்றுவதாகும்.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத் திட்டத்தில் அவருக்கு இடம் கிடைத்தது – அத்திட்டத்தில் இடம்பிடித்திருந்த ஒரே ஆப்ரிக்க அமெரிக்க மாணவி டொரோதி மட்டுமே. 24 வயதில் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் அவருக்கு வேலை கிடைத்தது..

வாஷிங்டன் போஸ்டின் முதல் ஆப்பிரிக்க அமெரிக்க பெண் செய்தியாளர் என்பதால், டொரோதிக்கு அப்பயணம் மிகவும் சவால் நிறைந்ததாக இருந்தது. அவர் தோலின் நிறத்தால் அவருக்காக டாக்ஸிகள் கூட நிற்கவில்லை.

“நான் பத்திரிகை அலுவலகம் வெளியே நிற்பேன், அவர்கள் மெதுவாக வருவார்கள், என் அடர் பழுப்பு நிற முகத்தைப் பார்த்துவிட்டு, ஆக்சிலரேட்டரை அழுத்தி வேகமாகச் செல்வார்கள்.” என்கிறார் டொரோதி.

அந்த பணக்கார பெண்ணின் வீட்டு வாயிற்காவலரைப் போல, அவர் ஒரு செய்தியாளர் என மக்கள் பெரும்பாலும் நம்பமாட்டார்கள். அவ்வளவு ஏன் செய்தி அறையிலேயே சில இனவாத அணுகுமுறைகளையும் அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

“நான் வாஷிங்டன் போஸ்டில் பணியாற்றிய போது, சில பழமைவாத பாணி கொண்ட ஆசிரியர்கள் இருந்தனர். ‘கருப்பின மக்களின் மரணங்கள் மலிவானவை என்பதால் அது தொடர்பாக செய்தி சேகரிப்பதில்லை’ என ஒரு ஆசிரியர் கூறியதாக டொரோதி நினைவுகூர்கிறார். அலறி அடித்துக் கொண்டு ஓட விரும்பினார் டொரோதி. தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருந்தால் அது போன்ற அணுகுமுறை மற்றும் மனப்பான்மை மாறும் என்று அவர் தனக்குத்தானே கூறிக் கொண்டார்.

வேலைக்குச் செல்லும் வழியில் அவர் உணர்வு ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டாலும், ஜெட் பத்திரிகையின் முன்னாள் சகாக்களுடன் அவர் ஆதரவுக்காக பேசினார். குறிப்பாக, அவருடைய வெள்ளை சகாக்களால் மிகவும் தனிமைப்படுத்தப்பட்டபோது, அவருடைய கிறிஸ்தவ நம்பிக்கையும் அவருக்கு உதவியதாக கூறுகிறார்.

டொராதி பட்லர் கில்லியம்
படக்குறிப்பு,டொராதி பட்லர் கில்லியம்

“செய்தி அறைக்குள் சிலர் வணக்கம் சொல்வார்கள் அல்லது தலையசைப்பார்கள் அல்லது என்னுடன் பேசுவார்கள், ஆனால் அவர்கள் என்னை கட்டடத்துக்கு வெளியே பார்த்தால் என்னை அறியாதவர் போல பாசாங்கு செய்வர். அது மிகவும் அவமானகரமானது. மற்ற வெள்ளையர்களுக்கு முன்னால், தங்களுக்கு ஒரு கருப்பினத்தவரைத் தெரியும் என்று ஒப்புக்கொள்ள விரும்பவில்லை என்பது போல் இருந்தது.” என்கிறார்

ஆனால் டொரோதி தனது ஆசிரியர்களுடன் எதிர்கொண்ட சவால்களைப் பற்றி விவாதிக்கவில்லை. எந்தவொரு புகாரும் கருப்பின பத்திரிகையாளர்களை வேலைக்கு அமர்த்தாமல் இருக்க ஒரு காரணமாக அமைந்துவிடலாம் என்று அவர் கவலைப்பட்டார்.

1960களில் அமெரிக்காவில் கருப்பினப் பெண்ணான டொரோதிக்கு மதிய உணவு கிடைப்பது கூட கடினமாக இருந்தது.

டொரோதி வெளிப்படையான இனவாத சட்டங்களால் கருப்பு வெள்ளை என இரண்டுக்கும் இடையே பிரிக்கப்பட்ட ஒரு நகரில் வளர்ந்தார். கருப்பின மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கலாம், அவர்களின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன, அடிப்படை மனித மரியாதைகள் கூட மறுக்கப்பட்டன.

வாஷிங்டனில் கூட உணவகங்கள் பிரிக்கப்பட்டு இருந்தன, அப்போது வாஷிங்டன் போஸ்ட் அலுவலகங்களுக்கு நெருக்கமான உணவகங்களில் ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு உணவு சேவை வழங்கப்படவில்லை. அவர் நிம்மதியாக அமர்ந்து உணவு சாப்பிட டொரோதி அதிக தொலைவு செல்ல வேண்டி இருந்தது.

கருப்பின மக்களின் கதைகளை புதிய வழியில் சொல்லும் தன் திறனை அவர் நன்கு அறிந்திருந்தார். பெரும்பாலும் கருப்பின மக்களின் குரல்கள் கேட்கப்படவில்லை என்பதால், அந்த காலகட்டத்தில் முக்கிய பத்திரிகைகளில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் குறித்து எதிர்மறை விஷயங்களே பிரசுரமாயின.

ஒருங்கிணைந்திருக்கும் மக்கள் - கோப்புப் படம்
படக்குறிப்பு,ஒருங்கிணைந்திருக்கும் மக்கள் – கோப்புப் படம்

“கருப்பின மக்களைப் பற்றிய எதிர்மறையான கதைகளை மட்டும் நான் சேகரிக்க விரும்பவில்லை, கருப்பின மக்களின் முழுமையான வாழ்க்கையை சேகரிக்க விரும்பினேன்,” என்று அவர் கூறுகிறார்.

1962ஆம் ஆண்டில் மிசிசிப்பி பல்கலைக்கழகத்தின் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய சிவில் உரிமைகள் நிகழ்வுகளை டொரோதி களத்திலிருந்து செய்தி சேகரித்துள்ளார். அப்பல்கலைக்கழகத்தில்தான் ஒரு இளம் மாணவரான ஜேம்ஸ் மெரிடெத், முதல் ஆப்ரிக்க அமெரிக்கராகப் பதிவு செய்யப்பட்ட பிறகு போராட்டங்கள் மற்றும் கலவரங்கள் நடந்தன.

வெள்ளை இனவாத மேலாதிக்கத்தின் ஒருங்கிணைப்புக்கு கருப்பின மக்களின் எதிர்வினையை புரிந்து கொள்ள கருப்பின சமூகங்களுடன் பேச டொரோதி நியமிக்கப்பட்டார்.

ஜேம்ஸ் மெரிடெத் செய்ததை அடிப்படையாகக் கொண்டு, தங்களின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொண்டிருப்பதாக கருப்பின மக்கள் கூறினர். மேலும் ஒருங்கிணைப்புகள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும் ஆண்களையும் பெண்களையும் அவர் பார்த்தார், அதைப் பற்றியே அவர் எழுதினார்.

வெள்ளை இன பத்திரிகையாளர்கள் எழுதிய கட்டுரைகளை படித்தபோது, அவர்கள் கருப்பின மக்கள் பயந்தவர்களாகவும், அச்சம் நிறைந்தவர்களாகவும் சித்தரித்திருப்பதை கவனித்தார். “ஆனால் நான் அப்படி எதையும் பார்க்கவில்லை.” என்கிறார் டொரோதி.

அவர் மிசிசிப்பியில் இருந்தபோது, வெள்ளை இனத்தவர்களின் விடுதிகளில் தங்க அனுமதிக்கப்படவில்லை, கருப்பின மக்களுக்கு இறுதி சடங்கு செய்யும் இடத்தில் தங்கினார். “நான் இறந்தவர்களுடன் தூங்கினேன்,” என்று அவர் கூறுகிறார். “செய்தி சேகரிக்க நீங்கள் செய்ய வேண்டியதை செய்கிறீர்கள்.” என்கிறார் அவர்.

டொராதி பட்லர் கில்லியம்
படக்குறிப்பு,டொராதி பட்லர் கில்லியம்

டொரோதி தனது மூன்றாவது குழந்தையைப் பெற்ற பிறகு 1960 களின் நடுப்பகுதியில் வாஷிங்டன் போஸ்டை விட்டு வெளியேறினார். சிறிது காலம், அவர் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டார். மீண்டும் 1972ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிலேயே உதவி ஆசிரியராக, ஸ்டைல் பிரிவில் பணியமர்த்தப்பட்டார். அது அவருக்கு பிடித்திருந்தது.

“ஸ்டைல் ​​பிரிவுக்குள் கருப்பின மக்களின் கலாசாரத்தைப் பற்றி அதிகம் கொண்டு வருவது மிகவும் உற்சாகமாக இருந்தது. காரணம் தங்களின் உதவியாளர்களிடமோ, தங்களின் காவலர்களிடமோ பேசும் நியாயமான சில பணக்காரர்களைத் தவிர, வெள்ளை இன மக்களுக்கு, கருப்பின மக்கள் என்ன செய்கிறார்கள் என்பது பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. கருப்பின கலாசாரத்தை மைய நீரோட்டத்தில் கொண்டு வருவது தான் நோக்கம்” என்கிறார் டொரோதி.

உதவி ஆசிரியர் ஆன பின் டொரோதி ஆட்களை வேலைக்கு அமர்த்த முடிந்தது, கருப்பின மக்களின் அனுபவத்தைப் பற்றி எழுதக்கூடிய பத்திரிகையாளர்களை நியமித்தார். பின்னர் 1979-ல் அவர் ஒரு கட்டுரையாளர் ஆனார். கல்வி, அரசியல் மற்றும் இனம் ஆகிய பிரச்னைகளில் கவனம் செலுத்தி, 19 ஆண்டுகள் தன் பணியைத் தொடர்ந்தார். கடந்த 2003ஆம் ஆண்டு வாஷிங்டன் போஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

பத்திரிகைத் துறையில் 50 வருட வாழ்க்கை முழுவதும் டொரோதி எப்போதும் பன்முகத்தன்மையை முன்னெடுத்து வென்றார். அவர் கருப்பின பத்திரிகையாளர்கள் தேசிய சங்கத்தின் தலைவராக இருந்தார். மேலும் பத்திரிகை கல்விக்கான ராபர்ட் சி மேனார்ட் நிறுவனத்தை இணைந்து நிறுவி, வாரிய உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். இந்த நிறுவனம், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு பத்திரிகையாளர்களாக பயிற்சி அளித்துள்ளது.

“ஒரு குழுவினரின் கண்களால் மட்டுமே நீங்கள் உண்மைக் கதையையோ அல்லது அவர்களின் முழு கதையையோ சொல்ல முடியாது” என்று அவர் கூறுகிறார்.

“வெவ்வேறு கண்களால் உலகைப் பார்க்கும் நபர்கள் உங்களிடம் இல்லையென்றால், என்ன நடக்கிறது என்கிற முழு நிலவரம் உங்களிடம் இருக்காது”

டொரோதி பட்லர் கில்லியம், ‘ட்ரெயில்ப்ளேஸர்’ – ஊடகத்தை அமெரிக்கா போல தோற்றமளிக்கச் செய்த ஒரு பத்திரிகையாளரின் போராட்டம் என்கிற புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.