அர்னாப் கோஸ்வாமி: மக்கள் நேசிப்பவரா வெறுக்கும் தொகுப்பாளரா – எது உண்மை?

Posted on நவம்பர் 24, 2020

0


அர்னாப்
படக்குறிப்பு,அர்னாப் கோஸ்வாமி

சமீபத்தில், ரிப்பப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை ஆசிரியரும் செய்தி தொகுப்பாளருமான அர்னாப் கோஸ்வாமி, ஒரு தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பின்னர் அவரே ஒரு செய்தியாக மாறினார். அவர் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார். இப்போது அவருக்கு ஜாமீனும் கிடைத்துவிட்டது. ஆனால் இந்த வழக்கு அவரின் அணிதிரட்டும் ஆளுமையை பலப்படுத்தியுள்ளது.

ஏப்ரல் மாதம் ‘ரிப்பப்ளிக் பாரத்’ சேனலில், தனது ப்ரைம்டைம் நிகழ்ச்சியில் அர்னாப், “80% இந்துக்கள் வாழும் ஒரு நாட்டில், இந்துவாக இருப்பது ஒரு குற்றமாகிவிட்டது” என்றார்.

“ஒரு இஸ்லாமிய மதகுரு அல்லது ஒரு பாதிரியார் கொல்லப்பட்டிருந்தால், மக்கள் அமைதியாக இருந்திருப்பார்களா என்று நான் இன்று கேட்கிறேன்.”என்று அவர் முழக்கமிட்டார்.

இரண்டு இந்து சாதுக்கள் மற்றும் அவர்களது ஓட்டுநர் ஒரு கும்பலால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அர்னாப் அந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்தார்.

இந்த சாதுக்களை குழந்தை திருடர்கள் என்று தவறாக கருதப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் இறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள். ஆனால் இறந்தவர்களின் இந்து அடையாளமே இந்த குற்றத்திற்கு காரணம் என்று கூறி, ரிப்பப்ளிக் நெட்வொர்க் ஒரு வாரம் வரை நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருந்தது.

அர்னாபின் நயமற்ற, ஆரவாரமான மற்றும் பக்கசார்பான செய்தி வழங்கலின் உண்மையான ஆபத்து இதுதான் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆளும் பாஜகவுக்கு பயனளிக்கும் பொருட்டு, தவறான தகவல்கள், எதிர்மறை பிரசாரம், பிளவுபடுத்தும் மற்றும் அழற்சி எண்ணங்கள் இந்த சேனலின் பார்வையாளர்களிடம் நிரப்பப்படுகின்றன என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பிபிசியின் நேர்காணல் கோரிக்கைக்கு அர்னாப் மற்றும் ரிப்பப்ளிக் டிவி, பதிலளிக்கவில்லை. தூண்டிவிடும் பேச்சு மற்றும் போலி செய்திகள்; பாஜக மீதான சாய்வு குறித்த கேள்விக்கும் அந்த நிறுவனம் எந்த பதிலும் அளிக்கவில்லை.

சர்ச்சைக்குரிய பாணி

இத்தகைய பாணியிலான கவரேஜை செய்யும் முதல் நபர் அர்னாப் அல்ல. ஆனால் அவர் அதை முன்பை விட இரைச்சலாகவும், ஆவேசமாகவும் ஆக்கியுள்ளார்.

அவரது பேச்சின் தொனி, ஒரு பிரிவைச் சேர்ந்த மக்களை அணி திரட்டும் திசையில் உள்ளது மற்றும் இந்தியாவில் உள்ள மத வேறுபாடுகளை சாதகமாக்கிக் கொள்ளும் பணியை செய்கிறது.

ஏப்ரல் மாதம், தப்லிகி ஜமாத் என்ற முஸ்லிம் அமைப்பு மீது பொதுமுடக்க உத்தரவுகளை மீறியதாக குற்றம் சாட்டிய அவர், இந்த குழுவின் தலைவர்களை சிறையில் அடைக்க பிரதமர் மோதியிடம் முறையிட்டார்.

தொற்று நோயின் ஆரம்ப நாட்களில், இந்த அமைப்பின் உறுப்பினர்கள் டெல்லியில் ஒரு மாநாட்டுக்காக கூடினார்கள். அதன் பின்னர் நாடு முழுவதும் சுமார் ஆயிரம் பேருக்கு இவர்களால் கோவிட் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. பொது முடக்கத்திற்கு முன்பே இந்த மாநாடு நடந்து கொண்டிருந்ததாக அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் வலியுறுத்தினார். அந்த கூற்றின் உண்மையை நாட்டின் பல நீதிமன்றங்கள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளன.

ஆனால் ரிப்பப்ளிக் மற்றும் பிற சேனல்களில் இருந்து தவறான தகவல்கள் வெளியான காரணத்தால், சமூக ஊடகங்களில் இஸ்லாமியவாத வெறுப்புணர்வு கருத்துக்கள் வெளியாயின.

“நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இந்த நேரத்தில் நாடு எதிர்கொண்டுள்ள மோசமான நிலைக்கு தப்லிகி ஜமாத் தான் காரணம்,”என்று அர்னாப் தனது நிகழ்ச்சியில் கூறினார்.

அர்னாப்

சுஷாந்த் மரணத்தை சர்ச்சையாக்கிய அர்னாப்

ஜூலை மாதம் சேனலின் கவரேஜ், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் குறித்து இருந்தது.

சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவரது நண்பர் ரியா சக்ரவர்த்தி தற்கொலைக்கு தூண்டியதாக, சுஷாந்தின் குடும்பத்தினர் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

ரியா குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் காரணமாக, பெண்களுக்கு எதிராக வெறுப்பைத்தூண்டும், மற்றும் கசப்பான கவரேஜ் ஆரம்பித்தது. ரியாவை கைது செய்வதற்கான பிரசாரத்தைக்கூட ரிப்பப்ளிக் நடத்தியது.

“இந்தியாவில் மக்கள் ரிப்பப்ளிக் சேனலை,அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் அது சரியில்லை என்று நான் நினைக்கிறேன். ஃபாக்ஸ் நியூஸ் ஒரு பக்கச்சார்பானதாகவும், டிரம்ப் ஆதரவாளராகவும் தெரிகிறது. ஆனால் ரிப்பப்ளிக் தொலைக்காட்சி , ஒருதரப்பான பிரசாரத்தை செய்கிறது. மேலும் மத்திய அரசின் நலனுக்காக பெரும்பாலும் தவறான தகவல்களைத் தருகிறது,”என்று இணையதள செய்தி நிறுவனமான ‘நியூஸ்லாண்டரி’யின் நிர்வாக ஆசிரியர் மனீஷா பாண்டே கூறுகிறார்.

“ரிப்பப்ளிக் ஒரு விதத்தில் மக்களை அரக்கர்கள் போல சித்தரிக்கிறது. அவர்கள் போராட வலிமை இல்லாதவர்களாக இருப்பவர்கள். அவர்கள் ஆர்வலர்கள், இளம் மாணவர்கள், சிறுபான்மையினர் அல்லது எதிர்ப்பாளர்கள் என்று யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.”

அர்னாப்

ரசிகரும் விமர்சகரும் கூட

இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் செய்தி சேனல் இது என்று ரிப்பப்ளிக் தன்னைப்பற்றி கூறிக்கொள்கிறது. டி.ஆர்.பி தரவுகள் இதேபோன்ற ஒன்றைக் கூறுவதால் நிறைய பேர் இந்த கூற்றை நம்புகிறார்கள். ஆனால் இப்போது இந்த தரவுகள் தொடர்பாகவும் ஒரு சர்ச்சை உள்ளது. இந்த புள்ளிவிவரங்களில் மோசடி செய்ததான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அர்னாபும் அவரது சேனலும் விசாரிக்கப்படுகின்றனர். இருப்பினும், அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

ஆனால் அர்னாப் கோஸ்வாமிக்கு பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது என்பது தெளிவாகிறது.

“நான் இரவில் வீட்டிற்குச் சென்றவுடன் முதலில் ரிப்பப்ளிக் சேனலை பார்ப்பேன். அர்னாப் கோஸ்வாமி மிகவும் தைரியமானவர். மக்களுக்கு உண்மையைச் சொல்ல முயற்சிக்கிறார்,” என்று நிதி ஆலோசகரான கிரிதர் பசுபுலேட்டி தெரிவிக்கிறார்.

ரிப்பப்ளிக் சேனலில் போலி செய்திகள் பரப்பப்படுவதான குற்றச்சாட்டுகள் பற்றி என்ன நினைக்கிறார் என்று அவரிடம் கேட்டபோது, “நான் இதை நம்பவில்லை, அவர்கள் நன்கு விசாரித்த பிறகே எங்களுக்கு உண்மையைச் சொல்கிறார்கள்” என்று கூறினார்.

“இது சிறிதளவு தூண்டுதல் பத்திரிக்கையியல் என்று சொல்லலாம். ஆனால் அதன் வேலை சரியான செய்தியை வழங்குவதாகும். நிகழ்ச்சி ஒரு வணிகத்தைப் போன்றது. தூண்டுதல் போக்கை புறந்தள்ளி, மற்ற சேனல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த சேனலில் உள்ள தகவல்களைப் நாம் பார்க்க வேண்டும்,” என்று கணக்காளர் லட்சுமண் அட்னானி குறிப்பிடுகிறார்.

அத்தகைய விளைவு மிகவும் ஆபத்தானது என்று எழுத்தாளர் ஷோபா டே நம்புகிறார்.

“நாம் இன்னும் கண்காணிக்க வேண்டும். சரிபார்ப்பும், சமநிலையும் பராமரிக்கப்படவேண்டும். புலனாய்வு பத்திரிகையியல் என்று அழைக்கப்படும் இதுபோன்ற அச்சுறுத்தல் மற்றும் தவறான பத்திரிகையியல் இல்லாமல் கூட நிச்சயமாக நம்மால் இருக்கமுடியும், ” என்று அவர் கூறுகிறார்.

அர்னாப்

இந்தப் பயணம் எங்கிருந்து தொடங்கியது?

அர்னாப் வடகிழக்கு மாநிலமான அசாமில் பிறந்தார். ராணுவ அதிகாரியின் மகனான அர்னாப் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றார்.

கொல்கத்தாவின் டெலிகிராப் செய்தித்தாளில் தனது பணியை அவர் ஆரம்பித்தார். அதன் பிறகு அவர் என்டிடிவி செய்தி சேனலில் சேர்ந்தார். டிவியில் அர்த்தமுள்ள வாதங்களை வழங்கிய ஒரு நடுநிலையான தொகுப்பாளராக அவர் இருந்தார் என்று அவருடன் பணியாற்றவர்கள் அவரை நினைவுகூர்கிறார்கள்.

ஆனால் டைம்ஸ் நவ் டி.வி 2006 இல் தொடங்கி அர்னாப் அதன் முக்கிய முகமாக மாறியபோது, அவரது தோற்றம் படிப்படியாக மாறியது . இன்று அனைவருக்கும் முன்னால் அது தெளிவாகத் தெரிகிறது. 2008இல் மும்பை தாக்குதல்களால் காங்கிரஸின் மீது கோபம் கொண்டிருந்த மற்றும் ஊழல்களால் கொதித்துப் போயிருந்த இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தின் மனதை அவர் கவர்ந்தார். படிப்படியாக, அவர் வீட்டுப் பெயராக மாறினார்.

2017ஆம் ஆண்டில் அவர் ரிப்பப்ளிக் சேனலை நிறுவினார். அதன் பிறகு அவர் மிகவும் பக்கசார்பான மற்றும் கடுமையான தோற்றத்தை அளிக்கத்தொடங்கினார். 2019ஆம் ஆண்டில், இந்தி சேனலையும் ஆரம்பித்தார்.

“அவர் ஒரு பத்திரிகையாளராக நம்பகத்தன்மையைக் கொண்டிருந்தபோது, நான் ஒரு குழு உறுப்பினராக அவரது நிகழ்ச்சிக்குச் செல்வது வழக்கம். ஆனால் அவர் ஒரு பக்கசார்பற்ற பத்திரிகையாளராக தனது வேலையை கைவிட்டபோது, நான் அவர் மீதான மரியாதையை இழந்தேன். அவர் பல இடங்களில் வரம்புகளைத் தாண்டிவிட்டார். இன்று அவரது நேர்மை குறித்து பல கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன,” என்று ஷோபா டே தெரிவித்தார்.

தனது ஸ்டுடியோவை வடிவமைத்த ஒரு கட்டிடக் கலைஞரின் மரணம் தொடர்பாக அர்னாப் சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். கட்டிடக் கலைஞருக்கு பணபாக்கி எதுவும் இல்லை என்று அர்னாபும் அவரது சேனலும் தெரிவிக்கின்றனர்.

அவர், மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்ததால் அவர் குறிவைக்கப்பட்டார் என்று பலர் நம்புகிறார்கள்.

பல பாஜக அமைச்சர்கள், அவருக்கு ஆதரவாக வந்து, அவரது கைது நடவடிக்கை பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான தாக்குதல் என்று அழைத்தபோது கோஸ்வாமியின் அரசியல் வலுவும் வெளிப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளில் பாஜக ஆளும் மாநிலங்களில் பல பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தக்கூற்று, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலர் மீது தேச துரோகம் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் எந்த கட்சித் தலைவரும் அமைச்சரும் அவர்களுக்காக குரல் எழுப்பவில்லை.

‘ரிப்போர்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ அமைப்பின் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில், 180 நாடுகளில் இந்தியா 142 வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆறு இடங்களை இழந்துள்ளது.

2018 ஆம் ஆண்டில் வளைகுடா செய்திக்கு அளித்த பேட்டியில், பாஜகவுக்கு பக்கசார்பாக இருப்பது குறித்து கேள்வி அர்னாபிடம் கேட்கப்பட்டது.

“இது நிரூபிக்கப்படாத கூற்று .மாறாக விமர்சனம் தேவைப்படும் இடத்தில் பாஜகவை நாங்கள் கடுமையாக விமர்சிக்கிறோம், “என்று அதற்கு அவர் பதிலளித்தார்.

கடந்த வாரம் அர்னாப் கோஸ்வாமி ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார். அவர் தனது செய்தி அறைக்கு திரும்பியது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

அவரது குழு அவரை கைதட்டலுடன் வரவேற்றது. அர்னாப் தனது உரையில், “எங்கள் பத்திரிகையியல் காரணமாக அவர்கள் எங்களை குறி வைத்துள்ளனர். எனது இதழியலின் அளவை நான்தான் தீர்மானிப்பேன்” என்று கூறினார்.

“ரிப்பப்ளிக் டி.வி செய்வதை நல்ல இதழியல் என்று அழைக்க முடியாது. இதை ஒரு ரியாலிட்டி ஷோ என்று அழைக்கலாம். ஆனால் அவர் வெற்றிகரமாக மக்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். ஒரு ஜனநாயகத்தில் இது கவலை அளிக்கும் விஷயம்,” என்று மனீஷா பாண்டே தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/india-55047927