ஐயாத்துரை வர்ணகுலசிங்கம்

Posted on மே 1, 2022

0


(அமரர்.A.V.குலசிங்கம்)

திரு.A.V.குலசிங்கம் தன் வாழ்நாளில் கால் பதித்த அனைத்து முயற்சியாண்மையிலும் முதல்வராக விளங்கியவர். ஆசிரியர், அரசியல் வாதி, பத்திரிகை ஆசிரியர், வழக்குரைஞர், விவசாயி ஆகிய தொழில் முயற்சிகளை வெற்றிகரமாக ஆற்றக் கூடிய பன்முக ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தார். இத்தகையதோர் திறமைசாலி காரைநகரில் ஆடம்பரமின்றி, சாமானியனாக வாழ்ந்து தனது எண்பத்து எட்டாவது வயதில் இவ்வுலகில் இருந்து விடை பெற்றுச் சென்றார்.

1890ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 11ந் திகதி காரைநகரில் பிறந்து தனது ஆரம்பக் கல்வியை அயலில் இயங்கிய களபூமி அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் கற்று, மலாய் நாட்டில் பணியாற்றிய தந்தையிடம் சென்று கல்வியைத் தொடர்ந்து எழுதுவினைஞராகப் பணியாற்றினார்.

எழுதுவினைஞர் பணியில் மனநிறைவு காணாது தாயகம் திரும்பினார். காரைநகர் இந்து ஆங்கில வித்தியாசாலையில் ஸ்தாபகர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களுடன் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றினார். ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்களின் பிரியாவிடை நிகழ்வு    திரு. A.V.குலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

1947 ஆம் ஆண்டு சுப்பிரமணிய வித்தியாசாலையில் நடைபெற்ற பெற்றோர்  தின விழாவின் போது பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட  திரு.A.V. குலசிங்கம் அவர்களுடன் பாடசாலை ஆசிரியர்களும் முகாமைத்துவக் குழுவினரும், மாணவர்களும் சேர்ந்து எடுக்கப்பட்ட படம்

ஆசிரியத் தொழிலைக் கைவிட்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்றார். நொத்தாரிசு, வழக்கறிஞர் பரீட்சையில் சித்தி அடைந்து தொழில் பார்த்து, அதிலும் விருப்பமில்லாமல் கொழும்பு சென்று சட்டம் பயின்று வழக்குரைஞர் (அத்துவக்காத்து Advocate) பரீட்சையில் 1926ல் சித்தி பெற்றார்.

சட்டக் கல்லூரியில் மாணவனாக இருந்த பொழுது “Ceylonese”, “Morning Star”, “Times of Ceylon” ஆகிய பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். திரு.குலசிங்கத்தின் சுதந்திரமான, ஆழமான கருத்துக்கள், அழகான மொழி நடை கொழும்பு வாழ் அறிவார்ந்த குழாமின் அங்கீகாரத்தைப் பெற்றது. எழுத்தாளர் எனும் பெருங் கீர்த்தி பெற்றுக் கொண்டார். திரு.குலசிங்கத்தின் ஆங்கிலப் புலமை, எழுத்தாற்றலை அறிந்த “Ceylon Observer”  பத்திரிகை தனது முதல் ஆசிரியராகப் பணியாற்ற அழைத்தது.

ஹிலாரி ஜான்ஸ்  “Daily News” பத்திரிகையில் தான் இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் சிந்தனையைத் தூண்ட யாழ்ப்பாண சுருட்டினைப் பற்ற வைத்து மேலும் கீழுமாக அறையில் நடந்து கொண்டு ஆசிரியர் தலையங்கத்தை திரு.A.V.குலசிங்கம் சொல்ல தான் எழுதுவது தன் பணிகளில் ஒன்று’ எனக் குறிப்பிடுகின்றார்.

பத்திரிகை ஆசிரியராகப் பணியாற்றும் போது இலங்கைக்கு வருகை தந்த இந்திய காங்கிரஸ் தலைவர் ஒருவருடனான பேட்டியின் பின் இந்தியாவிற்கான சுதந்திரம் தொடர்பாக தீவிரமான கருத்துக்களைத் தாங்கிய ஆசிரிய தலையங்கத்தை எழுதினார்.

கொழும்பில் வாழ்ந்த அதிகாரம் மிக்கவர்கள் இவ்வாசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக திரு.D.R.விஜயவர்தனா அவர்களுக்கு தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்தனர். திரு. விஜயவர்தனா திரு. குலசிங்கம் அவர்களை அணுகி இவ்வாறான விடயங்களில் கருத்துத் தெரிவிக்கும் போது கூடியளவு அடக்கமாக எழுதுவது நல்லது என்று ஆலோசனை வழங்கினார். திரு.குலசிங்கம் தன்னுடைய நிலைப்பாடு சரியானது எனத் தெரிவித்து பத்திரிகை ஆசிரியர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். பத்திரிகை ஆசிரியரின் கருத்துச் சுதந்திரத்தில் குறுக்கீடு செய்வதனை விரும்பாது ஆசிரியர் பதவியின்றும் விலகிக் கொண்டமை திரு. குலசிங்கத்தின் துணிவுடமைக்கும் கொள்கைப் பிடிப்பிற்கும் எடுத்துக்காட்டாகும்.

தொடர்ந்து “இந்து சாதனம்” ஆங்கில இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்து சாதன பத்திரிகை ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் ஆரம்பித்து வைத்த உயர்ந்த பாரம்பரியத்தை பேணி வந்தார். இந்து சாதனத்தை ஒரு அரசியல் ஆயுதமாக உருவாக்கிய பெருமைக்குரியவர் திரு.A.V.குலசிங்கம். அந்நியர் ஆட்சி முடிவுக்கு வரும் வேளையில் மாற்றத்துக்கு உள்ளாகி வரும் அரசியலை தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்வது என்பதனை சிறந்த முறையில் வழிப்படுத்தினார். சுதந்திரப் பத்திரிகையிலும் (Free Press) ஆசிரியராகப் பணியாற்றிய வேளையில் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி ஆணித்தரமாக, சிந்திக்க வைக்க கூடிய வகையில் சிறந்த முறையில் எழுதினார்.

கொழும்பு, கண்டி, களுத்துறை நீதிமன்றங்களில் வழக்குரைஞராகப் பணியாற்றி சிறிது காலத்தில் யாழ்ப்பாணம் திரும்பி விட்டார். அரை நூற்றாண்டுக்கு மேலாக யாழ். குடாநாட்டு நீதிமன்றங்களில் முன்னணி சிவில் வழக்குரைஞராகத் திகழ்ந்தார். திரு.A.V. குலசிங்கம் அவர்களின் வழக்குரைஞர் தொழில் நுட்பங்களை அவருடன் பணியாற்றிய இளநிலை சட்டத்தரணி பின்வருமாறு விபரிக்கின்றார். “திரு. குலசிங்கம் அவர்களுடன் வழக்கை ஆயத்தம் பண்ணுவது ஒரு சிறந்த அனுபவம். குறித்த வழக்கினை ஆழமாக ஆராய்ந்து அவற்றை உப பிரிவுகளாக்கி சட்ட விதிகளையும், சாட்சியங்களையும் எழுதுவார். இலகுவான மொழியில் தன் வழக்கை எடுத்துரைப்பார். தன்னுடைய கட்சிக்காரருக்குச் சாதகமான ஒப்புதல்களை பெறக்கூடியவாறு சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்வார். தமக்கு மாறாக இருக்கக்கூடிய விடயங்களையும் பகிரங்கமாக நீதிமன்றுக்குச் சொல்லி தமது கட்சிக்காரரின் கோரிக்கையை சட்ட ஆதாரத்துடன் வாதிடுவார். சாட்சிக்காரர்களையும் எதிர்த்தரப்பு சட்டத்தரணிகளையும் கௌரவமாக நடத்துபவர். வழக்குகளுடன் தொடர்புபடாத விடயங்களைப் பேசி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதில்லை”.

சட்டத்தரணிகள் பேணிப் பாதுகாக்க வேண்டிய பண்பாடு, பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாத்தார். அன்னாரின் மேன்மை மிக்க பணியினால் அனைத்து நீதிபதிகளும் கௌரவப்படுத்தும் தகுதியைப் பெற்றிருந்தார்.

முடிக்குரிய வழக்கறிஞராக (Crown Advocate) பணியாற்றினார். அரசினால் வழங்கப்பட்ட மாவட்ட நீதிபதி பதவியை ஏற்கவில்லை.

அரசியல் கொள்கைகளை கற்று நாட்டின் நலத்தை கருத்தில் கொள்ளும் அதேவேளை சிறுபான்மை இனம், மொழி என்பனவற்றின் நிலையை ஆராய்ந்து ஏற்ற கொள்கையை வகுத்து உளத்தூய்மையுடன் அரசியலில் ஈடுபட்டார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். 1944களில் கட்சியின் இணைச் செயலாளராகப் பதவி வகித்தார்.

திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலத்துடன் இணைந்து டொனமூர் திட்டத்திற்கும் தொடர்ந்து வந்த சோல்பரி திட்டத்திற்கும் எதிரான மனுக்கள், கடிதங்களை எழுதினார். ‘சுதந்திர பத்திரிகையில்’ எழுதி எதிர்ப்பை வெளியிட்டார். 1972 ஆம் ஆண்டு அரசியல் யாப்பு தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களின் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கவில்லை என்பதனால் அரசியல் யாப்பு அமுலுக்கு வந்த போது அதில் பங்குபற்ற மறுத்து விட்டார்.

1947 பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறை தேர்தல் தொகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டார். வடஇலங்கையில் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் அலை வீசிய போதும் ஊர்காவற்றுறையில் சாதகமாக அமையவில்லை. 1947 ஆம் ஆண்டு ஊர்காவற்றுறைத் தேர்தல் முடிவுகள்

பதியப்பட்ட தேருநர் – 33,045

வேட்பாளரின் பெயர்      இடப்பட்ட சின்னம்             வாக்குகளின் தொகை

ஏ. தம்பிஐயா                                 தராசு                                           5,552

ஏ. வி. குலசிங்கம்                          கை                                              5,230

கே. அம்பலவாணர்                     குடை                                            3,701

வை. துரைசாமி                      துவிச்சக்கரவண்டி                         2,438

ஜே. சி. அமரசிங்கம்                  விளக்கு                                             981

Source Results of Parlimentary General election in Ceylon.

திரு. அல்பிரட் தம்பிஐயா 322 வாக்குகளால் வெற்றி பெற்றார். திரு.A.V. குலசிங்கம் மக்களிடையே மதிப்பினைப் பெற்றிருந்தும் தேர்தல் ஒழுங்குமுறை சிறப்பானதாக அமையாமையே தோல்விக்குக் காரணமாயிற்று என அரசியல் அவதானிகள் அன்று கருத்துத் தெரிவித்திருந்தனர். இவரது ஆதரவாளர்களை ஏற்றிக் கொண்டு வந்த வாகனங்கள் காரைதீவில் இருந்து ஊர்காவற்றுறைப் பகுதிக்கு பாதைச் சேவை இல்லாமையால் கடலை கடக்க முடியாததால் பெருமளவு வாக்குகளை இழந்தார். காரைநகர் முழுமையாக திரு.குலசிங்கத்திற்கு ஆதரவு வழங்கிய பொழுதும் ஒரு பகுதியினர் சேர். வைத்திலிங்கம் துரைச்சாமியை ஆதரித்தனர்.

திரு. அல்பிரட் தம்பிஐயா பாராளுமன்ற அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்டமையை எதிர்த்து தேர்தல் வழக்கொன்றை திரு.A.V. குலசிங்கம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். தன் வழக்கை தானே நீதிமன்றத்தில் பேசினார். அன்றைய காலகட்டத்தில் சட்ட மேதை எனக் கருதப்பட்ட திரு.H.V. பெரேரா இராணி அப்புக்காத்து (Queen Counsel) எதிர்த் தரப்பில் ஆஜரானார். திரு A.V. குலசிங்கம் வழக்கில் வெற்றி பெற்றார். அன்று ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியை திரு அல்பிரட் தம்பிஐயா ஆதரித்தமையால் அரசாங்கம் அவசர அவசரமாக  Election Petition Appeal Act No.1 of 1948 எனும் சட்ட விதிகளை அமுல்படுத்தியமையால் தேர்தல்  வழக்கில் வெற்றி பெற்றும் திரு. குலசிங்கம் பாராளுமன்றம் செல்ல முடியவில்லை.

“விவசாயம் தான் என்னுடைய முதல் காதலி.” விவசாயத்திற்கு செலவு செய்வதற்காகவே தான் மன்றுக்கு வருவதாகவும் தமது சீடருக்குச் சொல்லுவார். காக்கிக் காற்சட்டையுடன், ஓலைத் தொப்பி அணிந்து வெறும் மேனியராய் உழவு இயந்திரத்தால் வயலைத் தானே உழுவார். உருத்திரபுரம் பகுதியில் 150 ஏக்கர் வயல் காணியின் உரிமையாளராக இருந்தார்.

நாட்டு மக்கள் விவசாயிகளாக இருக்க வேண்டும். இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என பத்திரிகைகளில் எழுதிய இலட்சிய கருத்துக்களை தன் குடும்பத்தினருடன் இணைந்து முன் உதாரணமாக வாழ்வில் பயணித்தவர் திரு. குலசிங்கம்.

அமரர் குலசிங்கம் அவர்களின் வாழ்வு ஒரு திறந்த புத்தகம். அமரர். குலசிங்கம் வாழ்வில் ஆற்றிய பணிகள் அத்தனையிலும் சிங்கமாகவே வாழ்ந்தார் என்றால் மிகையாகாது.

எஸ். கே. சதாசிவம்

http://www.karainagar.com/pages/category/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D