வீரகேசரிக்கு அகவை 90

Posted on திசெம்பர் 1, 2020

0


இலங்கையில் சுதந்திரத்துக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்டு இன்று அகவை 90ஐ காணும் வீரகேசரி தனது நூற்றாண்டு விழாவை கொண்டாடும் காலம் வெகு தொலைவில்லை.

வீரகேசரிக்கு அகவை 90

இந்நிலையில் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு வீரகேசரி ஆற்றிய அளப்பரியப் பணிகளை நினைவு கூர்வது அவசியமாகும். இலக்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திகளை மட்டும் கூறாமல், அவர்கள் சமகால அரசியல், சமூக, பொருளாதாரச் சூழல்களை எளிய முறையில் அறிந்துகொள்ள பெரும் பங்காற்றியது வீரகேசரி.

மக்கள் எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் செய்திகளைப் பக்கசார்பற்ற வகையில் வசன நடையில் வழங்குவது வீரகேசரியின் தனிச் சிறப்பு.

தமிழர்களின் அகிம்சைப் போராட்டக் காலத்திலும் ஆயுதப் போராட்டக் காலத்திலும் தமிழ்த் தேசியத்துக்கு பக்கபலமாக இருந்து ஓங்கி குரல் கொடுத்த பெருமை வீரகேசரிக்கு உண்டு. இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரஜாவுரிமை, காணி உரிமை, அடிப்படைத் தேவைகள், ஊதிய உயர்வுப் போராட்டங்கள் போன்ற விடயங்களில் அப்பத்திரிகை தொடர்ந்து குரல்கொடுத்து வந்துள்ளதையும் யாரும் மறுக்க முடியாது.

இலங்கையின் தேசிய அரசியலில், தமிழர்களுக்கு ஒரு முக்கிய இடமுண்டு என்பதைக் காலந்தோறும் தனது செய்திகள் மற்றும் கட்டுரைகள் மூலம் சமூகப் பொறுப்புடன் உணர்த்திய பெருமை வீரகேசரியைச் சாரும்.

காலவோட்டத்தில் பல பத்திரிகைகள் கரைந்துவிட்ட நிலையில், தனது தனித்துவத்தை இழக்காமல், காலத்துக்கு ஏற்ற வகையில் தன்னை மாற்றிக் கொண்டு பீடுநடை போடுகிறது வீரகேசரி.

வீரகேசரியின் தொடக்கத்துக்கும் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கும் நெருங்கியத் தொடர்பு இருந்தது. காந்தியடிகள் 1927அம் அண்டு இலங்கை சென்றபோது அவரது பயணம் குறித்த செய்திகள் சிங்களப் பத்திரிகைகள் பெரிதாக வெளியிடவில்லை. எனவே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு காழ்ப்புணர்ச்சியற்றா தரமான செய்திகளை அளிக்க வேண்டும் எனும் உந்துதல் இந்திய வம்சாவளித் தமிழரான சுப்பிரமணியம் செட்டியாருக்கு எழ வீரகேசரி பிறந்தது.

இலங்கையிலிருந்த இந்திய வம்சாவளி மக்களும் இதர தமிழ் மக்களும் இந்திய விடுதலைப் போராட்டச் செய்திகளை அறிந்துகொள்ளும் வகையில், கொழும்பின் வடபகுதியிலுள்ள செட்டித் தெருவில் எட்டுப் பக்கங்கள் கொண்ட தினசரியாக வீரகேசரி 1930 ஆகஸ்ட் 6 ஆம் திகதி தொடங்கப்பட்டது. அப்போது அதன் விலை 5 சதம்.

பத்திரிகையின் ஆசிரியராக சுப்பிரமணியம் செட்டியார் இருந்தாலும், பெரும்பாலான செய்திப் பணிகளை அவரது நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான நெல்லையா கவனித்து வந்தார்.

இரண்டாம் உலக யுத்த காலத்தில் தரமான செய்திகளை வழங்கியதன் மூலம் தனது பெயரையும் வர்த்தகத்தையும் வீரகேசரி பெருமளவுக்கு வளர்த்துக் கொண்டது.

தினபதி, ஈழமணி போன்ற தமிழ்ப் பத்திரிகைகள் சில ஆண்டுகளில் மறைந்துபோக, வீரகேசரி அனைத்து சவால்களுயும் எதிர்கொண்டு அவற்றை வெற்றிகரமாக முறியடித்து 90 ஆண்டுகளாக நீடித்து நிற்கிறது.

பல சாதனைகளைப் படைத்து இலங்கைத் தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள வீரகேசரிக்கு தான் விரும்பியபடி தமிழர்கள் தாயகத்தில் 1980களில் ஒரு பிராந்தியப் பதிப்பை வெளியிட வேண்டும் என்றிருந்த எண்ணம் ஈடேற முடியாமல் போனது குறித்து பலரைப் போலவே எனக்கும் அந்த வருத்தமுண்டு.

அதற்கு அந்தக் காலகட்டத்தில் நிலவிய ஆயுதக் கலாச்சார சூழல் ஒரு முட்டுக்கட்டையாக இருந்தது.

தற்போது டிஜிட்டல் உலகிலும் கால்பதித்துள்ள அவர்கள் அதை பல்துறை ஊடகமாக மாற்றி வருவதையும் காண முடிகிறது. ஒலி,ஒளிப் படைப்புகள் ஆகியவையும் அதில் உள்வாங்கப்பட்டுள்ளன. அது மேலும் விரிவடைந்து சிறக்க வேண்டும் என்பதே எம்மைப் போன்றவர்களின் அவா.

மலையகப் பகுதியிலுள்ள மக்களின் குரலாக வெளிவரும் `சூரியகாந்தி` நான் விரும்பிப் படிக்கும் ஒரு இதழ். மலையகம் தொடர்பான விடயங்களை அறிந்துகொள்ளவும், ஆவணப்படுத்த விரும்புவோர்களுக்கும் இது ஒரு இன்றியமையாத கையேடாக உள்ளது. மலையக மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகள், ஊதிய உயர்வு, சமூகப் பொருளாதார அரசியல் மேம்பாடு போன்ற பல விடயங்களில் `சூரியகாந்தி` காலத்தின் கண்ணாடி என்றே சொல்லலாம்.

இலங்கை சரித்திரத்தில் தமிழர்களின் பிரச்சினைகள், பார்வைகள், போராட்டங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தியதில் வீரகேசரியின் பங்கு ஈடு இணையற்றது.

வீரகேசரி இலங்கை சரித்திரத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கம் என்பது திண்ணம்.

சிவா பரமேஸ்வரன் — மூத்த பன்னாட்டுச் செய்தியாளர்

வீரகேசரிக்கு அகவை 90