” ஊடகத்தின் மீது நீளும் கொலைக்கரம்”

Posted on மார்ச் 31, 2014

0


குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக – கோ நாதன்:-

" ஊடகத்தின் மீது நீளும் கொலைக்கரம்" குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக  - கோ நாதன்:-

“உன்னுடைய கருத்துகளில் ஒன்றுடனோடு கூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துகளைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்”

ஜனநாயகத்தின் மக்களாட்சியின் மகத்தான மகுட வாக்கியங்களில் முதன்மையானது. இது ஆனால் இன்று இந்த வார்த்தைகளின் அர்த்தத்தை,அவசியத்தை கற்பனை பண்ணிப் பார்க்கும் நிலை கூட இந்த நாட்டில் இல்லை என்பது தான் உண்மை. செய்திகள் .கட்டுரைகளின்  நோக்கம் அபிப்பிராயத்தை உருவாக்குவது தகவல்களை அறிய தருவது என்றியிருப்பது தேவையானது ஊடகத்துறையின் வளர்ச்சியை உற்று நோக்கும் பலர் இதன் பரிணாமத்தைப்பார்த்து வியப்புறும் போதிலும் வேறு பலர் இதனை ஒரு மிகச் சாதாரண சாதனமென்றே கருதுகின்றனர்

இந்த நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டியிருந்த காலத்துக்கு முன்னர் இருந்தே தொடங்கப்பட்டியிருக்கிறது.ஊடகத்துறையின் மீதான வன்மம் .1979 ஜூலை மாதத்திலிருந்தே பயங்கரவாதத் தடைச்சட்டமும் அவசரகால நிலையும் இலங்கையில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இடையிடையே ஒரு சில ஆண்டுகள் இவை நடைமுறையில் இருந்திருக்கவில்லை என்றாலும் அவசரகாலநிலையின் கீழ் நீண்ட காலமாக ஆட்சி நடாத்துகிற அரசு இலங்கை அரசாகத்தான் இருக்க வேண்டும். விதிவிலக்காக அமைய வேண்டியதே விதியாக அமைகின்ற ஒரு அவலமான சூழல் இலங்கையில் நிலவுகின்றது. இலங்கை ஒரு ஜனநாயக அரசு என்பதை எத்தகைய கேள்விகளுக்கும் இடமில்லாமல் “சர்வதேசச் சமூக”மும் இந்திய அரசும் ஏற்றுக்கொண்டு நடப்பதால் ஊடக சுதந்திரங்களும் அடிப்படை உரிமைகளும் சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமையும் மோசமாக மீறப்படுகிறபோதும் போர்ச் சூழலில் இவை தவிர்க்க முடியாதவை எனவும் பயங்கரவாதிகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது எனவும் நியாயப்படுத்தப்படுகிறது. எதிரிகளுக்கும் காட்டுமிராண்டிகளுக்கும் எந்த உரிமையும் கிடையாது என்பதே தாராளவாத ஜனநாயகத்தின் இரட்டை நிலைப்பாடாக இருக்கிறது.

ஈழத்தமிழர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த காலங்களில்  போர் உலக அளவில் மறக்கப்பட்ட ஒன்றாகும். கொல்லப்படுவோர் எண்ணிக்கையிலும் மானிட அவலத்திலும் உலகின் மிக மோசமான போர் என்று சர்வதேசத் தொண்டு நிறுவனங்களாலும் மனித உரிமை அமைப்புகளாலும் வர்ணிக்கப்படும் இந்தப் போர் பற்றிய சரியான விவரங்களையும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாரிய இழப்புகள் பற்றிய தகவல்களையும் களத்திலிருந்தும் தளத்தில் இருந்தும் தருவதற்கு எந்தச் சர்வதேச ஊடகமும் இல்லை.ஊடகவியலாளர்களையும் தொண்டு நிறுவனங்களையும் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனங்களையும் போர்ப் பகுதிகளிலிருந்து அரசாங்கம் எப்போதோ வெளியேற்றிவிட்டது. எந்த ஊடகவியலாளருமே அங்கே செல்வதற்கு அரசாங்கம் தடைவிதித்திருக்கிறது. உடன்படுகையாளர்களாகக்கூடப் (embedded!) பத்திரிகையாளர்கள் அங்கு இல்லை. இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தின் உத்தரவாதத்தினால் வந்த வினை யாகத் தோன்றுகிறது .சுதந்திரமானதும் பகிரங்கமானதுமான மோதலில் உண்மைத்தன்மை தெரிந்தவரே மோசமான நிலைக்கு தள்ளப்படுவர்.

பெரும்பான்மையான மக்கள் அது குறித்து அதிர்ச்சியடைந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஒட்டுமொத்தச் சூழலையும் கணக்கிலெடுத்துக்கொண்டு பார்த்தால், மக்களின் எதிர்வினை போதிய அளவு இல்லை. போர் மக்களிடையே பிளவை ஏற்படுத்தியிருக்கிறது. பெரும்பாலானோர் போர் நடக்கும்போது அரசுக்கு எதிராக எழுதக் கூடாது என்று நினைக்கிறார்கள். இப்போது அமலில் இருக்கும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஊடகவியலாளர் அரசு கருத்து சுதந்திரத்தில் நுழைய நினைத்தால் கூட கைது செய்யப்பட்டலாம்.

எந்தத் துறையும் அதில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியின் பொருட்டு உயிரை விட வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை – ஆயுதப் படைகளையும் இலங்கையில் ஊடகத் துறையையும் தவிர. கடந்த சில வருடங்களாக சுதந்திரமான ஊடகத் துறை தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகிவருகிறது. பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் கொளுத்தப்படுகின்றன, குண்டுவைத்துத் தகர்க்கப்படுகின்றன, சீல்வைத்துப் பூட்டப்படுகின்றன அல்லது அதிகாரத்துக்கு இணங்கும்படி வற்புறுத்தப்படுகின்றன. கணக்கற்ற ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; மிரட்டப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள்.
இன்னும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற சுலோகமும் கருத்தியலும் அடிப்படை உரிமைகளை வேரறுக்கிற ஒரு பேராயுதமாக அரசுகள் பலவற்றால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆளுங் கட்சிப் புத்திஜீவிகளும் அரசாங்கத்தின் ஊடகத் துறை அமைச்சர்களும் ஊடகத் துறையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெருநிதிநிறுவனங்களும் இவற்றை நியாயப்படுத்தி வருகின்றன.

இப்போதைய ஆட்சிக்கு வந்த பிற்பாடும் ஊடகவியலாளரதும் ஊடக சுதந்திரத்தினதும் நிலை பல மடங்கு மோசமாகிவிட்டது. இலங்கையின் வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்களில் பெரும்பான்மையானவை அரசக் கட்டுப்பாட்டில் இயங்குபவை. எனினும் தனியார் வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள்கள் இயங்கி வந்துள்ளன. போர்ச் செய்திகள், சிறுபான்மை மக்களது உரிமைகள் என்பவற்றைப் பொறுத்தவரை ஆங்கில, சிங்கள மையநீரோட்ட ஊடகங்கள் எல்லாவகையான இலங்கை அரசுகளுக்கும் மிகுந்த விசுவாசமாகவே எப்போதும் தொழிற்பட்டு வந்துள்ளன

பிராந்தியங்களைப் பொறுத்தவரை அதுவும் குறிப்பாக வடக்கு ,கிழக்கு  ஊடகவியலாளர்களில் பெரும்பாலானவர்கள் அச்சம் காரணமாக நாட்டை விட்டுப் புலம் பெயர்ந்துள்ளனர் இருப்பவர்கள் அச்சுறுத்தலோ,நெருக்கடியோ இல்லாமல் தமது பணியை ஆற்ற முடிவதில்லை  சில சந்தர்ப்பங்களில் இந்த பிராந்திய ஊடகவியலாளர்கள் ஊடக அடையாள அட்டையை வைத்திருந்தும் உளவுப் படைகளால் அச்சுறுத்தப்படுகின்றனர்.ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக எழுதி வரும் ஊடகவியலாளர்கள் ஊடகவியல் ஒழுக்க விதிகளையும் மீறி செய்தி மற்றும் மூலங்களுக்கான தகவல்களைத் தருமாறு அதிகாரத்தால் அச்சுறுத்தப்படுகிறார்கள் மறுப்பவர்களும் இணங்கிக் கொள்ளாதவர்களும் அரசு சார்ந்த ஊடகங்களால் துரோகிகளாக வர்ணிக்கபடுகின்றார்கள்.

இன்று பெரும்பான்மையான மனித உரிமை அமைப்புக்கள் ஆழ்ந்த நித்திரையில் உள்ளன ஊடகத் துறையிலும் பொதுவாக கவலைக்குரிய அமைதி நிலையே காணப்படுகின்றது. அன்று மனித உரிமைகளை தமது கொடியாக சுமந்து கொண்டு செயற்பட்ட ஊடகத்துறை இன்று அர்த்தமற்ற மௌன நிலையில் ஆழ்ந்துள்ளது. உண்மையானசவால் ஜனநாயக சமூகத்தில்  ஒழுக்க விழுமியங்களை காப்பாற்றும் உண்மையான சவால் நிலை ஏற்படுவது சமாதான காலத்தில் அல்ல ஜனநாயகம் அற்ற சக்திகளை சந்திக்கும் போதே உண்மையான சவால் நிலை ஏற்படுகின்றது இதனால் எந்த நிலையிலும் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் சித்தரவதைகள் கொலைகள்  என்பனவற்றைக் கண்டிப்பதற்கு ஜனநாயக சக்திகளுக்கு உரிமை உண்டு  ஆனால் துரதிருஸ்ட வசமாக அவ்வாறான சக்திகள் அரிதாகி விட்டன.

இன்று பெரும்பான்மையான மனித உரிமை அமைப்புக்கள் ஆழ்ந்த நித்திரையில் உள்ளன ஊடகத் துறையிலும் பொதுவாக கவலைக்குரிய அமைதி நிலையே காணப்படுகின்றது. அன்று மனித உரிமைகளை தமது கொடியாக சுமந்து கொண்டு செயற்பட்ட ஊடகத்துறை இன்று அர்த்தமற்ற மௌன நிலையில் ஆழ்ந்துள்ளது.

இதுவரை காலமும் இலங்கையில் கொல்லப்பட்ட மற்றும் காணாமல்போன ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களுள் மிகப் பெரும்பாலானோர் இலங்கை அரசப் படைகளாலும் இலங்கை அரசின் கொலைக் குழுக்களாலும் கொல்லப்பட்டவர்கள். 20க்கும் மேற்பட்ட அனுபவம்வாய்ந்த ஊடகவியலாளர்கள் அரசியல் தஞ்சம் கோரி வேறு நாடுகளுக்குச் சென்றுவிட்டார்கள். ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்ற வரிசையில் முதல் இரண்டு இடங்களிலும் இருப்பவை ஈராக்கும் இலங்கையும்தான். காணாமல் போனோர் எண்ணிக்கையிலும் உலகின் முதலிடத்தில் இரண்டு இடங்களிலும் இருப்பவை இலங்கையும் ஈராக்கும்தான். எல்லைகளற்ற செய்தியாளர்கள் (Reporters Sans Frontiers) அமைப்பு ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்ற ஊடக சுதந்திர சுட்டெண் (Press Freedom Index) வரிசையில் 169 நாடுகளில் இலங்கை 153ஆம் இடத்தில் இருக்கிறது. இலங்கையை விட மிக அதிகப்படியான ஊடக சுதந்திரம் சவூதி அரேபியாவிலும் சிம்பாவேயிலும் கிர்க்கிஸ்தானிலும் இருக்கிறது.

ஒரு சிறந்த ஊடகமும், ஊடகவியளலாரும் இந்த நாட்டில் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியவில்லை ஒரு அச்சம் கொணர்ந்த நிலையில் தான் தனது படைப்புகளை படைத்துக் கொண்டியிருக்கின்றார்கள் அவர்கள் முதுகுக்கு பின்னும் முகத்துக்கு முன்னும் துப்பாக்கிகள் நீட்டிக் கொண்டே அலைந்து திரிகின்றது. எந்த சூழ் நிலையிலும் மரணம் அவர்களை ஆட் கொள்ளலாம்

எந்த நம்பிக்கையும் இல்லாவிட்டாலும் கூட , நம்பிக்கைகளை படைப்பது நமது கடமையாக இருக்க வேண்டும்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/102295/language/ta-IN/article.aspx