பாரதியாரின் பத்திரிகைத் துறை

Posted on March 18, 2014

0


இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் (11.12.2006 Posted) . எனது முதலாவது வலைப்பதிவினை பாரதிக்கு அர்ப்பணித்திருந்தேன். இன்று பாரதி பிறந்த நாளில் எனது முதலாவது நட்சத்திர பதிவைப் பதிவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்பதை சொல்லத் தேவையில்லை.

இன்று பாரதியார் இருந்தால் அவருக்கு வயது 124 இருக்கும். ஆனால் அவர் வாழ்ந்தது ஆக 39 ஆண்டுகளே. தனது 5வது வயதிலேயே தந்தை கணக்குச் சொல்லிக் கொடுத்த்போது, “கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு” என்று கவிதையிலேயே அடுக்கியவர். அவர் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்தில் கவிஞராக மட்டுமல்லாமல், ஒரு தலைசிறந்த இதழாளனாக, பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார். பாரதியாரின் பத்திரிகைத் துறை ஈடுபாட்டை மட்டும் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

இளசைச் சுப்பிரமணியன் 1904 இலிருந்து 1921 வரை ஒரு பத்திரிகையாளராகப் பவனி வந்தவர். 1904, நவம்பரில் சுதேச மித்திரன் இதழுக்கு இரண்டு ஆண்டுகள் துணை ஆசிரியராக பத்திரிகைத் தொழிலை ஆரம்பித்தார். தொடக்கத்தில் மெய்ப்புத் திருத்தல், பின்னர் செய்தி மொழிபெயர்த்தல். இப்படியாக இரண்டாண்டுகள். அதற்கிடையில் சக்கரவர்த்தினி என்ற பெண்கள் மாத இதழில் ஆசிரியரானார். (சக்கரவர்த்தினி இதழின் முன்பக்கத்தில் ஆங்கிலத்தில் Indian Ladies என்றும் அதனையே தமிழில் தமிழ்நாட்டு மாதர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது). “இளமை மணம், சதி, வரதட்சணை, கைம்பெண் கொடுமை, ஆகியவற்றை எதிர்த்தும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் கட்டுரைகள் வெளியிட்டார். சுதேச மித்திரனில் எழுத முடியாததை எழுதச் சக்கரவர்த்தினி பயன்பட்டது” (முனைவர் பா. இறையரசன்).

“சக்கரவர்த்தினி”யில் இருந்து விலகிய பாரதி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார். 4-05-1906இல் ஆரம்பமாகியது இந்தியா இதழ். அன்று ஈழத்தில் மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்தஇந்துசாதனம் என்ற இதழ் தனது 1906 ஆம் ஆண்டின் இதழொன்றில் “இந்தியா”வைப் பற்றி இவ்வாறு எழுதியிருந்தது:

“இந்தியா – இது சென்னைப் பிரமவாதின் அச்சியந்திரசாலையில் வாரத்துக்கொரு முறை 16 பக்கங்கள் கொண்ட ‘கிறௌன் போலியோ” சயிஸ் காகிதத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும் ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிகை. பெரிய இங்கிலீஷ் பத்திரிகைகளில் என்னென்ன விஷயங்கள் எழுதப்படுகின்றனவோ அந்த விஷயங்களெல்லாம் இந்தப் பத்திரிகையிலும் எழுதப்பட்டு வருகின்றன. இதனை வாசிப்போருக்கு இராஜாங்க விஷயங்களில் நல்லறிவும் தேசாபிமானமும் உண்டாகும்.”

1909 ஜூலை 7 இந்தியா (புதுவை) இதழில் யாழ்ப்பாணத்தில் சீதன வழக்கத்தின் கெடுதி பற்றி பாரதி இவ்வாறு எழுதுகிறார்:

“சிலோன் நாட்டு, கொழும்பு நகரத்து நோறீஸ் றோட்டு 68 நெ. வீடு ஸ்ரீ க.ண.கோ.பாலப்பிள்ளையவர்கள் எழுதியுள்ள விளம்பரம் நமது பார்வைக்கு வந்தது. அதில் சீதன வழக்கத்தால் உண்டாகும் கெடுதிகளைப் பல யுக்தி அனுபவங்களால் விளக்கிக் காட்டியிருக்கிறார். இந்த வழக்கத்தால் பெண்கள் கற்புக்கும் புருஷன் ஊக்க முயற்சிக்கும் வெகு சுலபமாய்க் கேடுகள் உண்டாகின்றன என்று நாட்டியிருக்கின்றார். இந்த வியாஸம் 22 பாராக்களில் அடங்கியிருக்கிறது. இதை அவசியம் யாழ்ப்பாணவாசிகள் கவனித்து நடந்தால் மெத்த நலமே.”

இந்தியா இதழைத் தொடர்ந்து சென்னை பாலபாரதா (1906), புதுவையிலிருந்து வெளியான இதழ்களான விஜயா (1909), கர்மயோகி (1910), தர்மம் (1910), சூரியோதயம், பாலபாரதா ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார் நமது இதழியல் முன்னோடி சுப்பிரமணிய பாரதி.

பாரதியாருக்கு பாரதி பட்டம் யாரால் வழங்கப்பட்டது என்ற தகவல் எந்த நூலிலும் காணப்படவில்லை. தற்செயலாக குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அக்கட்டுரையில் பாரதியாரின் பால்ய நண்பனாயிருந்த சோமசுந்தர பாரதியார் பற்றிக் குறிப்பிடும்போது சோமசுந்தரத்துக்கும், சுப்பிரமணியனுக்கும் பாரதி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது ஒரு யாழ்ப்பாணத்துப் புலவர் என்பதைத் தெரிவித்திருந்தார். அவரும் அந்தப் புலவரின் பெயரைத் தரவில்லை. ஆனால் ஒரு யாழ்ப்பாணத்துப் புலவரே இப்பட்டத்தை இருவருக்கும் எட்டயபுரத்து சந்நிதானத்தில் புலவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அறிந்தவர்கள் யாராவது இங்கு வந்து தகவலைப் பகிர்வார்கள் என நம்புகிறேன்.

இறுதியாக, மகாத்மா காந்தி அவர்கள் பத்திரிகையாளர்களைப் பற்றிக் கூறிய கருத்து ஒன்றை இங்கு தருகிறேன். நிருபர் ஒருவரின் கேள்வியும் மகாத்மாவின் பதிலும்:

கே: “பத்திரிகையாளராகிய எங்களுக்கு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலக்கு தருகிறீர்களே, நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம் என்பது உங்கள் எண்ணமா?”

ப: “அப்படியில்லை. பத்திரிகைகளில் நீங்கள் பணி புரிவதே தியாக வாழ்க்கை தான். அதனால்தான் விதிவிலக்கு.”

இன்று ஈழத்தில் எத்தனை பேர் பத்திரிகைகளில் பணிபுரிந்து தியாகிகளாக, மாமனிதர்களாக ஆகிவிட்டார்கள். மகாத்மாவின் அந்தக் கூற்று காலத்தால் அழியாததே.

ஆதார நூல்: இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்.

http://srinoolakam.blogspot.com/2006/12/blog-post.html

Advertisements