தொடர்பு சாதனங்களின் யுத்தம்!

Posted on ஏப்ரல் 12, 2015

0


தினமுரசு ஆசிரியர் தலையங்கம் – 01.06.2011

இன்றைய தினத்தில் உலக மாந்தர் அனைவரினதும் வாழ்வைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது எது என்று கேட்டால், அணுவாயுத உற்பத்தி, இன – மத – தேச நம்பிக்கைகளுக்காக ஒருவரையொருவர் கொன்றுவிடத் துடிக்கும் மனோபாவம், மாசடையும் சுற்றுச் சூழல், பூகோள வெப்பமாதல் என்று பல்வேறு பதில்களையும் சொல்வோம்.

ஆனால், இவற்றையும்விட இன்னொரு பயங்கரம்தான் மிகவும் பயப்பட வேண்டியதாக இருக்கிறது என்கிறார்கள் இன்றைய மானிடவியல் அறிஞர்கள். இத்தருணத்தில் நம்மைப் பயமுறுத்திக் கொண்டிருப்பது over communication என்பதுதான் என்கிறார்கள். அதாவது, உலகின் ஒரு புள்ளியில் இருந்துகொண்டு உலகின் மற்றெல்லாப் பகுதிகளிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று அறிய விரும்புகிற குணம்தான்.

மக்களை வெளிப்படையாக ஒடுக்குமுறைக்குட்படுத்துகிற கருவிகளை நாமறிவோம். பொலிஸ், ராணுவம், சட்டம், சிறைச்சாலை போன்றன கண்காணிப்பையும் ஒடுக்குதலையும் நேரடியாகவே நிகழ்த்துகின்றன. அதேசமயம் மறைமுகமான ஒடுக்குமுறைச் சாதனங்களாக மதம், கல்வி, குடும்பம், தொடர்புச் சாதனங்கள் போன்றவற்றைச் சொல்கிறார்கள்.

நேரடியான ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவது மட்டுமல்லாமல், தாம் செலுத்துகிற வன்முறை வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிற காரணத்தால் இந்த மறைமுகமான ஒடுக்குமுறைக் கருவிகளே மிகுந்த அபாயத்தை உண்டுபண்ணக் கூடியனவாய் உள்ளன என்கிறார்கள்.

மதம், கல்வி, குடும்பம், தொடர்புச் சாதனங்கள் போன்ற இந்த மறைமுக ஒடுக்குதல் சாதனங்களினுள்ளும் மக்கள் தங்களைத் தாங்களே சீரழித்துக் கொள்ளும் வகையிலான கருத்துக்களை விழுங்க வைத்துக் கெடுதி செய்யும் சாத்தியங்களை அதிகம் கொண்டிருப்பவை தொடர்புச் சாதனங்களே எனப்படுகிறது.

குடும்பம், கல்வி, மதம் போன்றவற்றிலிருந்து தம்மை விலக்கித் துண்டித்துக் கொள்ள முடிகிறவர்களும் கூட தொடர்புச் சாதனங்களிடமிருந்து தம்மைத் துண்டித்துக்கொள்ள முடிவதில்லை. செய்திகளுக்கும், பொழுதுபோக்கு கேளிக்கைக்குமென்பதாக முன்வைக்கப்படுகிற இச்சாதனங்கள் மற்ற எவற்றையும் விட வலிமை வாய்ந்தனவாய் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.

என்ன சாப்பிடுவது, எதை உடுத்துவது, எந்த சோப், பற்பசை, சருமப்பசைகளைப் பயன்படுத்துவது, வாங்க வேண்டிய மின்சாதனங்கள் என்று அவையே நமக்குச் சொல்லித் தருகின்றன. தினந்தோறும் கொலை, கடத்தல், கொள்ளை, வல்லுறவு என்று பல்வேறு விதமாகத் தகவல்கள் நமக்குள் சேகரமாகின்றன. நம் மனங்களை வன்முறைக் கிட்டங்கிகளாகவும், நுகர்வுப் பைத்தியமாகவும், ஆதிக்கப் பிரிவினரின் கருத்தியலுக்குத் தாளங்களாகவும் ஆக்கிவிடுகின்றன.

இந்தத் தொடர்புச் சாதனங்கள் மூலமான கருத்தியல் ஆயுதத்தையே, சமூகத்தின் உற்பத்தி சக்திகளது உரிமையாளர்கள் மக்கள் மீது மேலாண்மை செய்யப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். தொடர்புச் சாதன ஆதிக்கத்தைக் கொண்டிருப்பவர்கள் இந்த சாதனங்களையே இராணுவத்துக்குப் பதிலீடாகவும் ஆக்கிக் கொண்டுவிட முடிகிறது. உதாரணத்திற்கு, ஈராக் யுத்தம் குண்டுவீச்சு தொடங்குவதற்கு முன்பே பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டுகிறார்கள்.

வியட்நாம் யுத்தத்தின் போது போருக்கெதிராக அமெரிக்காவில் மக்கள் திரண்டதைப் போல ஈராக் யுத்தத்தின் போது நடக்கவில்லை. முன்பு மக்களைத் திரட்டி வீதிக்கு இறக்கியதில் பத்திரிகைகளுக்குப் பெரும் பங்கிருந்ததைத் தெரிந்துகொண்டிருந்த அமெரிக்கா, இம்முறை ஊடகங்களில் கவனமெடுத்துக் கொண்டது.

ஈராக் யுத்தத்தை நடத்தி முடித்த அமெரிக்கத் தளபதிகளில் ஒருவர் சொன்னார்: ‘வியட்நாம் யுத்தத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். யுத்தத்தில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பவை துப்பாக்கிகளும் வெடிகுண்டுகளும் மட்டுமில்லை, பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் கூடத்தான்…’

அரசியல்வாதிகளை விடவும், மதத் தலைவர்களை விடவும் அதிக பொறுப்புணர்வு இன்று ஊடகங்களைக் கையாள்பவர்களுக்கே தேவைப்படுகிறது.

குறிச்சொற்கள்: ,