சூரியன் எப்.எம் செய்திப்பிரிவின் ஆசிரியர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன்

Posted on December 12, 2016

0


கல்குடா நேசனுக்காக ஓட்டமாவடி றியாஸ்

கவிஞர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன் ஒரு பன்முக ஆற்றல் கொண்ட இளைஞர், பாடகர், கவிஞர், ஊடகவியலாளர் எனப் பல்துறைகளிலும் பிரபல்யமடைந்து வரும் ஒரு கலைஞர். சூரியன் எப்.எம் செய்திப்பிரவில் ஆசிரியராகக் கடமையாற்றும் இவரை “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில்” சந்தித்த போது…..

உங்களைப் பற்றிய அறிமுகமொன்றை சர்வதேசமெங்கும் பரந்து வாழும் கல்குடா நேசன் இணைய தள வாசகர்களுக்காக கூறுங்களேன்?

எனது முழுப்பெயர் பரமேஸ்வரன் விக்னேஸ்வரன். சூரியன் எப் எம் செய்திப்பிரிவில் செய்தி ஆசிரியராகக் கடந்த எட்டாண்டுகளாகச் செயற்படுகிறேன். மனைவி நதியா, மகன் ஆரோன், அப்பா பரமேஸ்வரன் (உயிருடன் இல்லை), அம்மா ஜோதி மலர் இரண்டு சகோதரர்கள். விக்கி விக்னேஸ் என்ற பெயரில் சிறுகதைகள், கவிதைகளையும் கட்டுரைகளையும் பத்திரிகைகளுக்கும் இணைய ஊடகங்களுக்கும் எழுதி வருகிறேன்.

உங்கள் ஊடகத்துறைப் பிரவேசம் பற்றி கூறுங்களேன்?

உண்மையில் ஊடகத்துறையை நான் தெரிவு செய்யவில்லை. முதலில் இசை மீது ஏற்பட்ட ஆர்வம் அத்துறையிலேயே பயணிக்க வேண்டுமென்ற உந்துதலை ஏற்படுத்தியது. உயர் தர வகுப்பில் கற்றுக் கொண்டிருக்கும் போது, பண்டாரவளையிலிருந்து ஊவா சமூக வானொலியில் சில நிகழ்ச்சிகளைச் செய்ய வாய்ப்புக்கிடைத்தது. அந்த வானொலியின் முன்னாள் பணிப்பாளர் மணிவானன் அதற்கான வாய்ப்பை வழங்கினார். படிப்பை முடித்துவிட்டு இரண்டு வருடங்களில் குடும்பச் சூழ்நிலைகள் காரணமாக ஏதேனும் தொழில் செய்ய வேண்டுமென்ற நிலை ஏற்பட்டதால், பதுளையிலுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றுடன் இணைந்து மீண்டும் ஊவா சமூக வானொலியிலேயே தொழில்பட்டேன். அப்போது அறிவிப்பாளராக இருந்தேன். ஆனாலும், எனக்கு அந்தத்துறையில் அவ்வளவாக விருப்பம் இருக்கவில்லை. பிறகு செய்திகள் பற்றி அக்கறை காட்ட ஆரம்பித்தேன். அதன் ஒரு கட்டத்தில் சூரியன் எப்.எம். செய்தி முகாமையாளர் எம்.இந்திரஜித் வழங்கிய வாய்ப்பையேற்று, 2008ம் ஆண்டு இணைந்து கொண்டேன்.

இலங்கையில் இன்று ஊடகத்துறைச் சுதந்திரம் எவ்வாறிருக்கிறது ?

ஊடகங்களின் தன்மையைப் பொறுத்து இதன் பதில்கள் மாறுபடலாம். ஊடக நிறுவனங்களின் கொள்கைகளின் அடிப்படையிலேயே அது சுதந்திரமாக இயங்குகிறதா? இல்லையா? என்பதைக் கூற முடியும். பொதுவாக கடந்த காலங்களில் இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்து சர்வதேச ரீதியாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. கண்ணெதிரே நடக்கின்ற சம்பவங்களைக் கூட தணிக்கை செய்ய வேண்டிய நிலை காணப்பட்டது. தற்போது ஓரளவுக்கு அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், நிர்வாகத்தணிக்கை என்ற ஒரு விடயம் எல்லா ஊடகங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. ஊடக நிறுவனங்களுக்குக் கிடைத்துள்ள சுதந்திரம், ஊடகவியலாளர்களுக்கு கிடைத்துள்ளதா? என்பது முக்கியமான ஒரு கேள்வி?

ஊடகத்துறையில் இருக்கும் நீங்கள் எழுத்து, இசைத்துறையிலும் கால் பதித்துள்ளீர்கள் அந்த அனுபம் பற்றி?

இதற்கு மிக நீண்ட வரலாற்றைக்கூற வேண்டியிருக்கிறது. மன்னிக்க வேண்டும். இசைத்துறையில் இன்னும் கால்பதிக்கவில்லை. ஆயினும், அதனையே விரும்புகிறேன். இது உள்ளார்ந்த கிளர்ச்சி. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எழுத்துத்துறை என்பது எதேட்சையாக ஏற்பட்ட ஆர்வம். நான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும் போது சினிமாப்பாடல்களை அதே மெட்டில் மாற்றி எழுதுவேன். அப்பாவிடம் வாசித்துக் காட்டி திட்டு வாங்குவேன். அந்தக் காலப்பகுதியில் ஒரு பத்திரிகையில் தொழில் புரிய வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஆனால் நாம் வாழும் சூழல் நம் இலட்சியங்களை மாற்றி அமைத்து விடுமல்லவா? நானும் பொறியிலாளராக வேண்டுமென்ற ஆசையை அந்த சூழல் தந்தது. எழுத்து கவிதைகள் அப்போதே மறந்து போயின. பின்னர் ஹப்புத்தளை, இதல்கஸிண்ண தமிழ் வித்தியாலயத்தில் நான் ஏழாம் வகுப்பு கற்ற போது அங்கு ஆசிரியராக இருந்த நவமோகன் அவர்கள், எனக்கு கவிதைகள் குறித்த அறிமுகத்தை வழங்கினார். அதன் பின்னர் கவிதை என்ற பெயரில் நிறைய எழுதுவேன். பாடசாலை மேடைகளில் எனது கவிதை என்ற ஒரு விடயத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும் அப்போது. அது மிகப்பெரிய ஊக்கமாக இருந்ததால், உயர் தரம் கற்கும் வரையில் தொடர்ச்சியாக எழுதுவேன். பத்திரிகைகளுக்கும் அனுப்பியதுண்டு, எதுவும் பிரசுரமானதாக நினைவில் இல்லை. கவிதைகளுக்கு 2004ம் ஆண்டு ஜனாதிபதி விருது ஒன்றும், 2005ம் ஆண்டு ஊவா மாகாண இளைஞர் விருதும் கிடைக்கப்பெற்ற போது, அப்பா ஊக்கப்படுத்த ஆரம்பித்தார். துரதிஸ்ட்டவசமாக அப்பா இறந்துவிட, நானும் எழுத்தை மறந்து போனேன். அதே நேரம் இசை மீதான அதீத நாட்டம், இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு என்னை தள்ளி இருந்தது. அப்போது இரண்டையும் என்னால் முகாமை செய்ய முடியாததன் காரணமாக, இசையை மட்டும் தெரிவு செய்து மனதில் இருத்திக் கொண்டேன். சூரியன் எப் எம் என்பது மிகப்பெரிய கல்விக்கூடம். இங்கு வந்த பிறகு நிறைய கற்றுக் கொண்டேன். அப்போது நவா, மப்றுக் அண்ணா போன்றவர்கள் வழங்கிய ஊக்கப்படுத்தலினால் மீண்டும் கவிதைகளை எழுத ஆரம்பித்து, அவை சூரியனில் ஒலிபரப்பானதுடன், பின்னர் பத்திரிகைகளிலும் பிரசுரமாகத் தொடங்கின. கவிதைகளை மாத்திரம் எழுதிக் கொண்டிருந்த போது, அவ்வப்போது நான் காணும் கனவுகளை எழுதி வைக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. அதுவே பின்னர் சிறுகதைகளை எழுத வைத்தது. அதனைத் தொடர்ந்து, என்னுடைய மனைவி, நண்பர்களின் ஊக்கப்படுத்தலால், சிறுகதைகளை கடந்த இரண்டு வருடங்களாக எழுதி வருகிறேன். 10க்கும் குறைவான சிறுகதைகளையே எழுதி இருக்கின்ற போதும், அவற்றுக்கு கிடைத்த அதீத வரவேற்புகளாலும், எழுதிய பின்னர் ஏற்படுகின்ற நிம்மதி மற்றும் மனத்திருப்தியினாலும் தொடர்ந்து எழுதத்தூண்டுகிறது. இசைத்துறையில் உங்கள் கனவு அல்லது திட்டம் பற்றி..? நிறைய இருக்கின்றன. இதனைத் தொடர்ந்து கற்று வருகிறேன். இசைத்துறையில் சாதிப்பதற்கு அதிக வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. கிடைத்த ஓரிரு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்தைச் சேர்ந்த எனது சகோதரர் கணேஸ் ராம் இயக்கிய செந்நீர் ஓவியம் என்ற குறும்படத்துக்கு இசை அமைத்திருக்கிறேன். மேலும் சில குறும்படங்கள் தற்போது திட்டத்தில் இருக்கின்றன. சொந்தப்பாடல்கள் என்று பலவற்றை செய்து கணினியில் அடைகாத்து வருகிறேன். வேளை வரும் போது, வெளியில் வரும். இப்போதைக்கு இவற்றை மட்டும் சொல்லி வைக்கிறேன்.

சிறுகதை, நாவல், கவிதை எழுதுவதில் ஆர்வமுடைய உங்களுக்கு இலங்கையின் இளம் படைப்பாளிகளின் தரம் பற்றிக்கூற முடியுமா?

தரம் பற்றிக்கூறும் தகுதி எனக்கு இருக்கிறதா? என்று தெரியவில்லை. நான் அண்மைக்காலமாகத்தான் எழுதவே ஆரம்பித்திருக்கிறேன். ஆனால், ஒன்றைக் கூறலாம். ஆர்வம் என்பது எல்லோருக்கும் இருக்கும்.  ஆர்வத்தில் அனைவரும் எழுதுவார்கள். ஒரு பியானோவை எடுத்துக் கொண்டால், யார் வேண்டுமானாலும் அதனைத்தட்டி ஒலியை எழுப்ப முடியும்.  ஆனால், ஒரு சிலரால் மாத்திரமே இரசிக்கக்கூடிய இனிமையான புதிய மெட்டுக்களை அமைக்க முடிகிறது. ஆனால், மற்றவர்கள் பியானோவை வாசிக்கக்கற்றுக் கொண்டு ஏனையோரின் இசைக் குறிப்புகளை வாசித்து இன்பம் கொடுக்கிறார்கள். இது திறமைக்கும் ஆர்வத்துக்குமான வித்தியாசம். எழுதுகின்றவர்கள் எல்லோரையும் எழுத்தாளர் என்று கூற முடியாது என்பது என் கருத்து. படைப்பின் தரம் என்பது கடுமையான தமிழில், இலக்கணக்கட்டுப்பாட்டுடன், மரபு வழியில், கற்றுத் தேர்தந்தவர்களால் எழுதப்பட வேண்டும் என்பதில்லை. எழுதுகின்ற எதுவாக இருந்தாலும் அதனை வாசிக்கின்றவர்களின் மனதில் ஏதோ ஒரு உணர்வு பூர்மான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான படைப்புகளை மாத்திரம் அடையாளம் கண்டு ஊடகங்கள் பிரசுரிக்க, ஒளிபரப்ப வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. இந்த விடயத்தில் ஊடகங்கள் கடுமையாக இருந்தால் தான், சீரான, சிறந்த, தரமான படைப்புகளையும், படைப்பாளிகளையும் வடிகட்டி எடுக்க முடியும். இல்லையென்றால், இல்லா குறைக்கு இராணுவத்துக்கு ஆள்சேர்த்ததை போல, இடர்களுக்கு முகம் கொடுக்க வேண்டி வரலாம். பத்திரிகைகளும் ஊடகங்களும் தரமான படைப்புக்களையும், படைப்பாளிகளையும் வடி கட்டி எடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். உண்மை தான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும், கவிதை இதுதான் இலக்கியம் இதுதான் என்று மொழிக்குள் தாழ்பாள் போட்டு விட்டால் காலத்தின் மாற்றத்தை அனுசரித்து தமது தமிழ் மொழியின் வளர்ச்சி தடை படாதா? முதலாவது, இலக்கியம் இதுதான் என்ற தாழ்பாள் என்பது குறித்து எனக்கு சொல்லத்தெரியவில்லை. ஆனால் கவிதை இது தான் என்ற தாழ்ப்பாள் ஒன்று அவசியமிருக்க வேண்டும். அது தான் மொழிக்கு வளம் சேர்க்கும். எத்தனை எண்ணிக்கையில் எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. எவ்வளவு தரமாக எழுதுகிறோம் என்பது தான் முக்கியமானது. தரமான இலக்கியங்களுக்காகத்தான் தமிழ் மொழி செம்மொழியானது. பண்டைத் தமிழர்கள் படைத்து விட்டுப்போன வளமான இலக்கியங்களின் சூட்டில் நாம் இன்னும் குளிர்காய்கிறோம். இரண்டாவது, காலமாற்றத்துக்கேற்ற படைப்பாளி மற்றும் படைப்பின் மாறுதல் வேண்டுமானாலும், படைப்புகள் நீர்த்துப் போக இடமளிக்கக்கூடாது. முறித்து எழுதப்பட்ட கட்டுரையொன்றுக்கும், கவிதை என்ற முணகலுக்குமிடையில் வித்தியாசம் காண முடியாத நிலைக்கு வாசகன் தள்ளப்படும் போது, எமது இலக்கியம் தோற்றுப் போய் விடுகிறது. பாரதியார் காலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவரது மரபு தழுவிய எளிமையான கவிதைகள் எல்லோரும் விளங்கும் வண்ணம் இருந்தமையே தமிழின் மறுமலச்சியாக இருந்தது. அதே போன்ற கால மாற்றம் கண்ணதாசன் காலத்திலும் வந்தது. செய்யுள் வடிவ சினிமாப்பாடல்கள் முழுமையான புதுக்கவிதைக்கு மாறிய போது, வைரமுத்து முக்கிய பங்கினை வகித்தார். வைரமுத்துவின் கால மாற்றத்தை ஏற்ற மாறுதல் தரமானதாக இருந்ததால் தான் இன்றளவும் அவரது புத்தகங்கள் விற்பனையாகின்றன. கவிதைகள் புகழப்படுகின்றன. எப்பேர்பட்ட கால மாற்றம் என்றாலும், அது உணர்வுகளை கொன்று விட்டு வெறும் சொற்களை மட்டும் தாங்கி வரும் சுமையாகி விடக்கூடாது.  அதற்கு ஊடகங்களும் இடமளித்து விடக்கூடாதென்பதே இந்த கேள்வியின் மூன்றாம் பதில். பெரிதாக இருப்பதில் பயன் இல்லை. சரக்கிருக்க வேண்டும்.

சூரியன் எப்.எம் செய்திப்பிரிவில் பணியாற்றி வருகிறீர்கள். அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்களேன்?

சூரியன் எப்.எம். ல் கடமையாற்றி வருகிறேன் என்பதை விட கற்று வருறேன் என்பேன். இதற்கு முன்னர் வழங்கிய செவ்விகளிலும் கூறியது தான். சூரியனே என்னை செம்மைப்படுத்தியது. பிரச்சினைகளுக்கும், தீர்வுக்குமிடையில் நிற்கும் சாணக்கியத்தை கற்றுக் கொடுத்துள்ளது. மக்களின் ஒரு உறவுக்காரனாக என்னை உணரச் செய்துள்ளது. இது ஒரு இன்ப மயம். போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் அடையாளம்…? வானொலி செய்தித்துறையை பொறுத்த வரையில் தனித்து அடையாளத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு துறையில்லை. செய்திகளுக்கு முன்னாள் செய்தி ஆசிரியர் என்று எமது பெயர் சொல்லப்படுவதுடன், எமது அடையாளப்படுத்தல் நிறைவடைந்து விடுகிறது. இதிலும் தம்மை அடையாளப்படுத்திக் கொண்ட பலர் சாதனையாளர்கள் தான். அந்தளவுக்கு நான் இன்னும் வளரவில்லை. ஆனால், அதனையும் தாண்டி நான் மதிக்கின்ற சில புத்திஜீவிகள், என் பெயரை கேளாமலேயே நான் செம்மைப்படுத்திய செய்திகளை அடையாளம் கண்டும் எனக்கு அழைத்து கருத்து கூறுகின்ற நிலைமையை எனது அடையாளமாகக் கருதுகிறேன். சொல்லும் விடயத்தைத் தெளிவாக, சுற்றி வளைக்காமல் கூறி விட வேண்டும். அதனையே செய்கிறேன், அதுவே என் அடையாளமும் கூட…

பல்துறை திறமை கொண்ட உங்களுக்கு நேர அட்டவணை சிரமமாக இருக்குமே எவ்வாறு நேரத்தை ஒதுக்குகிறீர்கள்?

ஆரம்ப காலங்களில் இது சிக்கலாக இருந்தது. பின்னர் பழகிக் கொண்டேன். தேவையற்றது என்று கருதும் விடயத்தில் நம்மை நுழைத்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும். மீதமிருக்கும் நேரத்தைக் குடும்பத்துடன் செலவிடுகிறேன்.

இலங்கையில் இந்தியாவிலுள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?

அறிவிப்பாளர் குறித்த அறிவு எனக்கு மிகக்குறைவு. ஆனால் சூரியனின் பணிப்பாளர் ஏ.ஆர்.வீ.லோசன் எப்போதும் என்னைக் கவர்ந்தவர். நான் கல்வி கற்கும் காலங்களில் வானொலியைக் கேட்பதே அவரது நிகழ்ச்சிக்காக மாத்திரம் தான். இப்போதும் நான் அவரது ரசிகன்.

நீங்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?

இதற்கு உங்களின் எட்டாவது கேள்வியை நினைவுப்படுத்த விரும்புகிறேன். இருந்தாலும், ஆவிகள், மர்மங்கள் மற்றும் அறிவியல் விடயங்களைக் கொண்ட நிகழ்ச்சிகள் பிடிக்கும். ஆகவே டிஸ்கவரி போன்ற அலை வரிசைகளை நேரம் கிடைக்கும் போது பார்ப்பேன்.

இந்திய சிறுகதை, நாவல், இலக்கியங்களோடு ஒப்பிடுகையில் இலங்கையின் இலக்கிய வளம் உங்கள் பார்வையில் ?

எனது வாசிப்புப் பழக்கம் மிகவும் குறுகியது. ஒப்பு நோக்குமளவுக்கு என்னிடம் வளமில்லை. ஆனால், ஒப்பு நோக்கப்படுதை நான் எதிர்ப்பேன். என்னைப் பொறுத்த வரையில், ஈழத்து இலக்கியத்தின் தரம் சுவைக்கப்படாமலேயே இருப்பதே எனது எண்ணம். சிறந்த இலக்கியங்களைப் படைத்து வெளியிட்டு வருகின்ற ஈழத்தவர்கள், புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். உள் நாட்டிலுள்ள படைப்பாளிகள் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தங்களின் சிறகுகளை முடக்கிக் கொண்டு விட்டார்களோ? என்று ஒரு எண்ணம். பத்திரிகைகள் வாயிலாகவே உள்நாட்டுப் படைப்பாளிகளின் படைப்புகளை வெகுவாக அறிய முடிகிறது. புத்தகங்கள் வெளியீட்டு தினத்திலும், அறிமுக தினத்தில் பேசப்படுமளவுக்கு மாற்று தினங்களில் பேசப்படுவது குறைந்து விட்டது. புத்தகக் கடைகளுக்கு சென்றாலும், ஈழத்து படைப்பாளிகளின் புத்தகங்கள் ஒரு ஓரத்தில் வைக்கப்பட்டு விற்பனையாகாத நிலைமை இருக்கிறது. இதனையும் தாண்டி சுவைக்கப்பட்ட பல ஈழத்து இலக்கியங்கள் இருக்கின்றன. பேஸ்புக் கூட ஈழத்து இலக்கியத்தை வளர்த்து ஒரு உச்ச கட்டத்துக்கு கொண்டு செல்ல சிறந்த ஊடகமாக நான் பார்க்கிறேன்.

2004 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது 2005 ஆம் ஆண்டு ஊவா மாகாண இளைஞர் விருது இப்படியாக பல விருதுகளுக்கு சொந்தக்காரரான நீங்கள் விருதுகள் பெறுவது பற்றி உங்கள் மன நிலை என்னவாக இருக்கிறது?

இவையனைத்தும் பாடசாலை மட்டப்போட்டிகளுக்கு கிடைத்திருந்த விருதுகள். விருதுகளைப்பெறுவது, பெறாமல் தவிர்ப்பதும் அவரவர் பண்பு. சிலர் விருதுகளைத் துரத்துவதில்லை என்பார்கள்.  என்னைப் பொருத்த வரையில், படைப்பாளிக்கு விருதுகள் என்பது முக்கியமான அங்கீகாரம். அதிலும், ஈழத்துப்படைப்பாளிகளுக்கு அது மிகவும் முக்கியம் என்பேன். காரணம், படைப்பாளிகளுக்கான களம் இங்கு வெகு அரிதாகவே காணப்படுகிறது. இது அவர்கள் மத்தியில் மிகப்பெரிய தொய்வை ஏற்படுத்தி விடுகிறது. இது இலக்கியத் தொய்வையும் ஏற்படுத்தும். இவ்வாறான தருணங்களில் வழங்கப்படுகின்ற விருதுகளும், பரிசில்களும், பாராட்டுக்களும் அவர்களை ஊக்கப்படுத்தி, சிறப்பான படைப்புகளுக்கு வித்திடுகிறது. அதே நேரம், இந்த விருதுகள் தரமான படைப்புகளுக்குதான் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்க வேண்டுமென்பதே இங்கு முக்கியம். யார் வேண்டுமானாலும் அதனை வாங்கி விடலாம் என்ற நிலை வந்தால், இந்த விருதுகள் மீதான நம்பிக்கையும் போய் விடும். ஆனால், வெறும் விருதுகளை மாத்திரமே துரத்தும் ஒரு பந்தய படைப்பாளியாக நான் இருக்க விரும்பவில்லை. அவற்றையும் கடந்து செல்வோம், ஆனால் சுமந்து செல்லோம். செய்திகளைத் தொகுத்து வழங்கும் போது நடந்த சுவரஷ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்களேன்? ஒரே நேரத்தில் பல சம்பவங்கள், பல கருத்துக்கள். இவற்றில் சுவாரஸ்யம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. சுவாரஷ்யம் என்றால் ஆரம்பத்தில் இந்த துறையை கற்றுக் கொள்ளும் போது விட்டு வந்த பிழைகளைத்தான் கூற வேண்டும். ஆனால், சுவரஷ்யமில்லாத ஒன்றைக் கூறுவேன். நான் இந்த துறைக்கு வருதற்கு முன்னர் ஒரு சாதாரண இளைஞனாக இருந்த போது, உலகில் எங்கேனும் ஒருவர் இறந்து விட்டதாக செய்தி கிடைத்தால் கூட மனம் வருந்துவேன். இரண்டு பேரிடமாவது சொல்லி கவலைப்படுவேன். இப்போது அப்படி இல்லை. செய்திகளைத் தேடும் போது, ‘……. இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 40 பேர் பலி….’ என்ற ஒரு செய்தி கிடைத்து விட்டால்… ‘அப்பாடா…. நல்ல செய்தி கிடைத்து விட்டது.’ என்று என்னை அறியாமலேயே பெருமூச்சி விட்டு மகிழும் இறுக்கத்தை பெற்றுவிட்டேன்.  இது அவ்வப்போது கவலையைத் தருவதுண்டு.

உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள், புத்தகங்கள் பற்றி சொல்லுங்களேன்?

முதலிலேயே சொன்னேன்… வாசிப்புப்பழக்கம் மிக அண்மையிலேயே என்னை வெகுவாக தொற்றிக் கொண்டது. உயர் தரம் படிக்கும் போது ஜேம்ஸ் ஹெட்லி சேசின் நாவல்களை வாசிப்பேன். இப்போது அந்த பழக்கம் தொடர்கிறது. பின்னர் சுஜாதாவின் சிறுகதைகளை மட்டும் வாசித்து தற்போது அவரின் ஒரு பகுதி நாவல்களுக்கு அடிமையாகி விட்டேன் எனலாம். ஆரம்ப காலங்களில் பாரதியார் கவிதைளையும், கண்ணதாசனின் புத்தகங்களையும் வாசிப்பேன். அவர்களைத் தாண்டி எழுதுவதற்கு யாருமில்லை என்ற ஒரு வட்டம் எனக்குள் இருந்தது. இந்த வட்டம் மிக சமீப காலத்தில் ஈழத்து எழுத்தாளரான ஜெயகுமாரன் அண்ணாவின் சப்புமல் குமாரயா என்ற சிறுகதை உடைத்தெறித்தது. இப்போது அவரது எழுத்துக்கள் மிக அதிகமாகப்பிடிக்கும். அவரது இணைத்தளத்தில் இடும் பதிவுகளை படித்து அவர் குறிப்பிடும் எழுத்தாளர்களை இரசிக்க ஆரம்பித்தேன்.  அப்படி ஒருவர் தான் செங்கை ஆழியான். அவரை இப்போது வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். அதே நேரம் லியோ டோல்ஸ்டோய், அகதா கிறிஸ்ட்டி போன்றோரின் நாவல்களும், டி.எச். லோவ்ரன்ஸின் ஆவிகள் சம்பந்தமான புத்தகங்களும் பிடிக்கும். இவர்கள் தவிர, முகநூலில் இப்போது ஏராளமான ‘இன்ஸ்ட்டன் படைப்பாளிகளை’ பார்க்க முடிகிறது. சிலரின் கவிதைகள் வெகுவாக கவர்ந்து விடுகின்றன. தனித்து புத்தகங்கள் என்றால், புலனாய்வு, மர்மம் மற்றும் அறிவியல் சம்பந்தமான புத்தகங்கள் அதிகம் விருப்பம். தத்துவங்களும் விருப்பத்தில் உண்டு.

தொடங்கியிருக்கும் இந்தப் பயணத்தில் நீங்கள் மறந்தும் செய்து விடக் கூடாது என்று நினைக்கிற விசயம் ஏதுமுண்டா?

எனது சமுகப்பார்வை சற்று மங்களானது என்ற உண்மையை நான் கூறி வைத்து விடுகிறேன். என் மங்களான பார்வை இந்த சமூகத்தை சீரழித்து விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருக்கிறேன். என்னை வாசிக்கின்றவர்கள் யாரும் ‘கூடாது என்று கூறப்படுகின்ற’ திசைக்கு திரும்பி விடக்கூடாது. எனது கதைகளில் எப்போதும், மதுப்பழக்கம், புகைப்பழக்கம், பெண்ணிய சீரழிப்பு என்பன இருந்து விடக்கூடாது என்பதில் இது வரையில் உறுதியாக இருக்கிறேன். எதிர்மறை பொருளை சொல்லாமல் இலக்கியம் இல்லை. ஆனால். அதில் எனக்கு விருப்பமில்லை.

உங்களது கலைப்பயணத்திற்கு உங்களுடன் அதிகம் துணை வருபவர்கள் குறித்து கூறுங்கள்?

எல்லாவற்றுக்கும் முதல் என் மனைவி நதியா. என்னை வெகுவாகப் பொறுத்துப் போகிறாள். என் முதல் இரசிகை. எனது படைப்புகள் முதலில் அவள் வழியே சென்று பின்னர் வெளியுலம் வருகின்றன.  லோஷன் அண்ணா போன்றோரும் பல முகநூல் நண்பர்களும் வெகுவாக ஊக்கமளிக்கிறார்கள். சிறியளவே எனது படைப்புகள் எனினும், இது வரையில் அவற்றை வாசித்த பல நண்பர்கள் நேரடியாகவும், முகநூல் வழியாகவும் தெரிவிக்கும் கருத்துக்கள் மிகுந்த உட்சாகத்தைத் தருகின்றன. என்னை பட்டைத் தீட்டுகின்றன. தரமான கருத்துக்களையே நானும் எதிர்பார்க்கிறேன். இறுதியாக….? பயணத்தைத் தொடர்வோம். பலவிதம் காண்போம். இவ்வாறான செவ்விகள் எமக்கு ஒரு அடையாளத்தைத் தருகின்றன. இவ்வாறான களங்களே நாளை ஈழத்து இலக்கியத்துறையின் அடித்தளங்களாக அமையும் என்பதில் வேற்றுக்கருத்தில்லை. நன்றிகள் உங்களுக்கு… வாய்ப்பு வழங்கியமைக்கு….

http://kalkudahnation.com/25436

Advertisements