கருத்தியலை கட்டமைப்பதில் ஊடகவியலின் முதன்மைப் பாத்திரம்

Posted on December 10, 2016

0


கருத்தியலை கட்டமைப்பதில் ஊடகவியலின் முதன்மைப் பாத்திரம்
கருத்தை கட்டமைப்பதும், கட்டமைக்கப்பட்ட கருத்தை பதிவுசெய்வதும் கடத்துவதும் காவிச் செல்வதும் பரப்புவதும் ஊடகவியல் முக்கியமான பணி என்று சொல்லலாம்.
கருத்து என்கிற போது அது ஏற்கனவே உள்ள ஒரு பொருளின் பிரதிபலிப்பால் ஒரு மனிதனுடைய சிந்தனையில் உருவெடுத்து ஒருசெயற்பாட்டின் மூலம் இறுதி செய்யப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுகின்ற போது முழுமையடைகிறது.
(‘கருத்து என்பது முதல் வந்தது. கடவுளால் படைக்கப்பட்டது. கருத்திலிருந்தே பொருள் வந்தது’ என்ற கருத்து முதல் வாதச் சிந்தனைக்குள் சிக்கிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.)
உதாரணமாக சொந்த வீடு என்ற ஒரு கருத்து ஒருவருக்கு இருக்குமானால் ஏற்கணவே தங்களுக்கென்று சொந்த வீட்டை வைத்திருக்கும் பலரைப் பார்த்தால் ஏற்பட்ட பிரதிபலிப்பு அவரது மனதிலே சொந்த வீடு கட்டவேண்டும் அந்த எண்ணக் கருவை உருவாக்குகிறது.
உண்மையிலேயே அவர் அந்தக் கருத்துக்கு செயல் வடிவம் கொடுத்து ஓரு வீட்டுக்குச் சொந்தக்காரனாகின்ற போதுதான் அது முழுமையடைகிறது.இங்கே ஏற்கனவே உள்ள சொந்த வீடு என்ற எண்ணக் கரு சொந்த வீடு தனக்கு வேண்டும் என்ற ஒரு மனிதனால் செயல்வடிவப் படுத்தப்படுகின்ற போது அந்தக் கருத்து இன்னும் வலுப் பெறுகிறது.
ஆனால் அதேவேளை எதிர்பாராத விதமாக நடக்கும் சில சம்பவங்களும் புதிய கருத்தை தோற்றுவிப்பதுண்டு;.
உதாரணமாக கடலில் அலையடிக்கும் என்பதும் சதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம்;. அதே கடல் அலை ஊரையே அழிக்கும் என்பதும், ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவு கொள்ளும் என்பதும் சுனாமி வந்து பேராழிவை உண்டாக்கிய பின்பு தான் பலருக்குத் தெரியவந்தது.இங்கே எதிர் பாராமல் நடந்த ஒரு செயலில் இருந்து ஒரு புதிய கருத்துப் பிறக்கிறது.இதிலே ஊடகவியலுக்கு என்ன பணி என்ற கேள்வி எழலாம்?

மீழ்நிகழ்த்தல்

ஒரு சம்பவம் அல்லது செயல் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஒரு வட்டாரத்திலோ புதிதாக நிகழ்கின்ற போது அதை ஊடகங்கள் தான் ஒரு செய்தியாகவோ, ஒரு புதினமாகவோ, அல்லது ஒரு கலைத்துவம் மிக்க படைப்பாக அதற்கு ஒரு வடிவம் கொடுத்து அதை தேசிய மட்டத்தில் அல்லது உலகளவில் மறு நிகழ்தலுக்கு உள்ளாக்குகின்றன. ஒரு குறிப்பிட்ட இடத்திலோ அல்லது ஒரு வட்டாரத்திலோ ஏற்கணவே நிகழ்ந்த அல்லது நிகழ்ந்துகொண்டிருக்கிற ஒரு செயலை அல்லது சம்பவத்தை ஊடகங்கள் பதிவு செய்து மறு நிகழ்த்தலுக்கு உள்ளாக்காது விட்டால் அந்தச் செயலும் அந்தச் சம்பவமும் நிகழ்ந்ததற்கான சான்றுகளும் தடயங்களும் அவை நடந்த அந்தக் களத்தோடு நின்று அழிந்து போய்விடும்.
குறிப்பாகச் சொன்னால் ஒரு சம்பவம் அல்லது ஒரு செயல் இயற்கையாக நிகழ்ந்தாலும் அல்லது செயற்கையாக நிகழ்த்தப்பட்டாலும், அது நிகழ்ந்ததாக அல்லது நிகழ்த்தப்பட்டதாக அதற்கு அடையாளமும் வடிவமும் கொடுப்பது ஊடகங்கள் தான்.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி எமது தாயகத்தை சுனாமி தாக்கிய போது பிரான்சில் நான் செய்தி ஆசிரியராக பணிபுரிந்த தொலைக்காட்சி பணிமனையிலிருந்து அதிகாலை நான்கு மணிக்கு ‘கடல்கொந்தழித்து ஊருக்குள் புகுந்துவிட்டது விசேட செய்தி ஒளிபரப்ப வேண்டும் உடனே வாருங்கள்’ என்று தெலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்கள்.
‘மார்கழி மாதம் வடபகுதி கடலிலே பாரிய அலை அடிப்பதும் கொந்தளிப்பதும் வழக்கம் தானே’ என்ற சொல்லிவிட்டு நான் இருந்துவிட்டேன்.
சுனாமி அலைகளைப்பற்றி ஏற்கணவே ஓரளவு அறிந்திருந்தாலும் எமது அறிவுக்கெட்டிய காலகட்டத்தில் எமது பிரதேசத்தில் அது நிகழாததால் அதனுடய கோரம் அதனால் ஏற்படும் பாதிப்பு என்பவற்றை அப்போது என்னால் உணர முடியவில்லை.
மீண்டும் ஒரு 15 நிமிடத்தின் பின்னர் மீண்டும் தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ‘கடலலை ஊருக்குள் புகுந்து ஆட்களை கொண்டு போய்விட்டது. நிறையப் பேர் உயிரிழந்துவிட்டார்கள்.’ என்று கூறிய போது எழுந்து சென்று பிரெஞ்சு தொலைக்காட்சிகளையும் இணையத் தளங்களையும் பார்த்த போது தான் அந்த நிகழ்வின் கொடூரம் அதன் செய்திப் பெறுமதி எனக்குத் தெரிய வந்தது.
அதாவது சுனாமி; தாக்கியது என்ற நிகழ்வு தகவலாக வந்து செவிப்புலனூடாக ஏற்படுத்திய தாக்கத்தை விட ஊடகங்கள் அந்த அவலத்தை பதிவு செய்து மறுநிகழ்த்தலுக்கு உள்ளாக்கியதால் ஏற்பட்ட தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாகச் சொல்வதானால் சுனாமி தாக்குதல் என்ற இயற்கையின் கொடூரத்தை, ஊடகங்கள் பதிவு செய்து மக்களுக்கு மீளநிகழ்த்திக் காண்பித்ததன் மூலம் தான் அது ஒரு பேரழிவு என்பது உலகத்திற்கு தெரியவந்தது.

சொந்தவீடும் சுனாமி அனர்த்தமும்

மேலே குறிப்பிட்ட ‘சொந்தவீடு’, ‘சுனாமி அனர்த்தம்’ ஆகிய இரண்டு விடயங்களிலும் கருத்தியலை தீர்மானிப்பதில் ஊடகங்கள் எப்படி தீர்மானகரமான சக்கதியாக விளங்குகின்றன என்பதைப் பார்ப்போம்.
‘வீடு’ என்பது உலகம் முழுவதிலுமுள்ள மக்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று. உலக மக்கள் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பகுதியினர் வீடற்றவர்களாக இருக்கிறார்கள்.யுத்தம் மற்றும் இயற்கை பேரனர்த்தங்கள் போன்றவற்றால்; வீடற்றவர்கள் ஆக்கப்பட்டவர்களையும் இதில் அடக்கலாம்.
இலங்கை இந்தியா ஆபிரிக்கா போன்ற வெப்ப வலயப் பிரதேச நாடுகளில் வீடில்லாமல் தெருவேரங்களிலும் மரநிழல்களிலும் பொது மண்டபங்களிலும் அதிக மக்கள் வாழ்கின்றார்கள். ஆனால். ஐரோப்பா கனடா போன்ற குளிர் வலைய நாடுகளில் அவ்வாறு மக்கள் வாழமுடியாது.அங்கே உறைபனிக் குளிரை தாக்குப்பிடித்து உயிர் வாழ்வதற்கு வீடு என்பது அத்தியாவசியமானது.அந்த நாடுகளில் நூற்றக்கு 98 வீதமான மக்களுக்கு வீடிருக்கிறது. வீடற்ற ஒரு சிறு பகுதியினர் கூட குளிர்காலத்தில் அரசாங்க காப்பகங்களில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
குறிப்பாகச் சொல்வதானால் ஐரோப்பா மற்றும் கனடாவில் வீடில்லாமல் ஒரு மனிதன் தெருவோரத்திலோ மரநிழலின் கீழேயோ தொடர்ந்து இருக்க முடியாது. எனவே அங்குள்ள மக்களுக்கு வீடென்பது முதன்மைத் தேவைகளில் ஒன்றாகும். ஆனால் அங்கே வசிக்கும் அநேகமான மக்களுக்கு சொந்த வீடு கிடையாது. அவர்கள் வாடகை வீடுகளிலேதான் வசிக்கிறார்கள்.அந்த மக்களுக்கு சொந்த வீடு வாங்குவதென்பது ஒரு கனவு போன்றதாகும்.அந்தக் கனவை ஊடகங்கள் நனவாக்குகின்றன.
றியல் எஸ்டேட் எனப்படும் வீட்டுமனை விற்பனை என்பது மேற்குலகில் வளர்ச்சிபெற்ற ஒரு தொழில்துறையாகும். இதற்கென்ற பல நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் பற்றிய கவர்ச்சிகரமான விளம்பரங்கள் ஊடகங்களால் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படுகின்றன.’மலிவான விலையில் தரமான வீடு, நீங்கள் அதிக வாடகைப்பணம் செலுத்துகின்றீர்களா? கவலையை விடுங்கள் அதைவிட குறைந்த பணத்தை மாதாந்தம் செலுத்தி ஒரு வீட்டை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளுங்கள், இரண்டு அல்லது மூன்ற படுக்கை அறைகள்,தளபாட மயப்படுத்தப்பட்ட வரவேற்பறை, நவின சாதனங்களுடன் கூடிய குளியலறை, கழிப்பறைகள், முற்றிலும் நவீன சாதனங்கள் பொருத்தப்பட்ட சமையலறை, தளபாடங்களுடன் கூடிய விசாலமான சாப்பட்டுக் கூடம், விசாலமான கார் தரிப்பிடம், விசாலமான தோட்டம்’ என்றெல்லாம் அறிக்கையிடப்படும் போது சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவையுடைய ஒரு மனிதன் அதை நோக்கி இழுக்கப்படுகின்றான்.
வீடென்றால் ஆடம்பர வசதிகளுடன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை அந்த மனிதனுடைய சிந்தனைத் தளத்திலே ஊடகங்கள் திட்டமிட்டு புகுத்தி விடுகின்றன. சொந்த வீடு வாங்குவதற்காக அவன் வங்கியில் வட்டிக்கு கடன் எடுக்கும் போது இத்தகைய உபரி ஆடம்பொருட்களுக்கும் சேர்த்தே கடன் வாங்கும் நிலைக்கு அவனையறியாமலே அவன் தள்ளப்படுகிறான். சொந்த வீடு என்ற அடிப்படை தேவைக் கூடாக அவன் ஆடம்பரப்பொருட்களுக்கான நுகர்வோனாக மாற்றப்படுகின்றான்.
இங்கே வீட்டுமனை விற்பனைத் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் ஒரு தரப்பாகவும் நுகர்வோர் மறுதரப்பாகவும் இருந்தாலும் இந்த இரண்டு தரப்பையும் சந்திக்க வைக்கின்ற முதன்மைச் சக்தியாக ஊடகங்கள் தான் இருந்திருக்கின்றன்.
குறிப்பாகச் சொல்வதானால் சொந்த வீடு என்பது என்ற ஒரு அடிப்படைக் கருத்துக்கு அது இப்படித்தான் இருக்கவேண்டும் அடையாளத்தை கொடுக்கின்ற வேலையை ஊடகங்கள் செய்கின்றன.

சுனாமியும் கடல்கோளும் ஆழிப்பேரலையும்

அடுத்து சுனாமி பேரழிவு நிகழ்ந்த போது இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் என்ற வகையில் அனைத்து ஊடகங்களுமே அதை பதிவு செய்து உலகமயப்படுத்தியிருந்தன.
இவ்வாறு இந்த விடயம் உலக மயப்படுத்தப்பட்ட போது சுனாமி என்ற அந்த ஜப்பானியச் சொல் ஊடாக ஜப்பானிய மொழியும் ஜப்பானிய வரலாறும் கூட உலகமயப் படுத்தப்பட்டது.
எதோ இந்தப் பேரழிவு என்பது ஜப்பானில் தான் முதல் முதலாக நிகழ்ந்தது போலவும் ஜப்பானியர்கள் தான் அதைக் கண்டுபிடித்து அதற்கு பெயர் வைத்தது போலவும் அனைத்து ஊடகங்களும் ஒரு வரலாற்றப் புனைவைச் செய்து கொண்டிருந்தன.
வரலாற்றில் உலகின் பல இடங்களில் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாகப் பதிவுகள் இருந்தாலும்,சுனாமி என்ற ஐப்பானிய சொல் இந்தப் பேரனர்த்தத்துக்கான துறைசார் குறியீட்டுச் சொல்லாக அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ஜப்பானிய மக்கள் தங்களுடைய வரலாற்றையும், தங்களுடைய கருத்தியலையும், மொழியின் ஆளுமையையும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். அதாவது ‘சுனாமி’ என்ற ஒரு சிறிய சொல்லுக் கூடாக ஜப்பானின் வரலாறு மீட்கப்பட்டது. அந்தச் சொல்லுக்கான அர்த்தம் என்று என்ன என்று கண்டுபிடிப்பதற்காக ஜப்பானியர்களுடைய கருத்தியலும் ஜப்பானிய மொழியினுடைய ஆளுமையும் மறு வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டன.
தமிழர்களுடைய மிக நீண்ட நெடிய வரலாற்றிலே, இவ்வாறான பேரனர்த்தம் பல தடவைகள் நிகழ்ந்ததற்கான பல தடயங்கள் இருக்கிருக்கின்றன. ‘பஃறுளி ஆற்றுடன் பன்மலையடுக்கத்து குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள’ என்ற சிலப்பதிகார குறிப்பும், காவிரிப்பூம் பட்டணம், ஏழ் பனை நாடு ஏழ்தொங்கநாடு முதலான பல நாடுகள் கடலால் கொள்ளப்பட்டதற்கான சங்க இலக்கியக் குறிப்புகளும் இந்தப் பேரனர்த்தத்தை உணர்த்தும் சான்றுகளாக இருக்கின்றன. ‘கடல்கோள்’ என்ற பதம் இந்தப் பேரழிவைக் குறிக்கும் குறியீட்டுப் பெயராக சங்க இலக்கியங்களிலே பயன் படுத்தப் பட்டதற்கான சான்றுகள் நிறைய இருக்கின்றன.
2004 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 திகதி இந்தப் பேரழிவு நிகழ்ந்ததும் தமிழ் வரலாற்று ஆர்வலர்களும், வரலாற்றுத் தளத்தில் நின்று சிந்தித்த சில தமிழ் ஊடகங்களும், சுனாமி என்ற ஜப்பானிய சொல்லுக்குப் பதிலீடாக ‘கடல்கோள்’ என்ற இந்த சொல்லை பயன்படுத்த முற்பட்டபோது, இன்னொரு பகுதியினர் அந்தச் சொல் தவறு என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.
‘கடல்கோள் என்பது கடல் வந்து முழுமையாக ஒரு நாட்டை ஒரு பிரதேசத்தை முற்காக அழித்ததைத் தான் குறிப்பது’ என்றும் ‘தற்போது ஏற்பட்ட பேரழிவு ஒரு நாட்டையோ ஒரு பிரதேசத்தையோ முற்றாக அழிக்கவில்லை. அதனால் இதற்கு ஆழிப்பேரலை என்ற புதிய பெயரை வைக்கலாம்’ என்றும் அவர்கள் அதற்கு ஒரு புதிய கருத்தில் வடிவத்தைக் கொடுத்து அதற்கான குறியீட்டுப் பெயரையும் உருவாக்கினார்கள். இன்று பல தமிழ் ஊடகங்கள் ‘ஆழிப் பேரலை’ என்ற இந்தப் பதத்தைத் தான் பயன் படுத்துகின்றன.
உண்மையில் ஒரு சொல் ஒரு இனத்தின் வரலாற்றை எப்படிப் புரட்டிப் போடுகிறது அல்லது சிதைக்கிறது அல்லது மறுதலிக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்;.
ஏனென்றால் ஒரு சொல்லுக்குரிய அர்த்தம் என்பது அந்தச் சொல்லைக் கட்டமைக்கின்ற மொழிக்கூடாகவும் அதனுடைய வரலாற்றக்கூடாகவும் தான் கொள்ளப்படுகிறது. அதாவது மொழியும் மொழியினுடைய வரலாறும் தான் ஒரு சொல்லுக்கு அர்த்தம் கொடுக்கின்றன. மொழிக்கு அப்பால் அர்த்தம் என்பது தனியாகக் கிடையாது.
உதாரணமாக தடம், வடம், குடம், படம், மடம் என்ற தமிழ் சொற்களை எடுத்துக் கொண்டால் இவை அனைத்தும் ‘டம்’ என்ற விகுதியைக் கொண்டு முடிகின்றன. த,வ,கு,ப,ம என்று தொடங்கும் உயிர்மெய் எழுத்துக்கள் தான் ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்துகின்றன.ஆனால் இந்த எழுத்துக்களுக்கு தனியான அர்த்தம் கிடையாது.
தடம், வடம், குடம், படம், மடம் என்றால் என்ன என்பதை தமிழ் மொழியிலுள்ள பல சொற்கூட்டங்களை வைத்துக் கொண்டும் அந்தச் சொற் கூட்டங்களை கட்டமைத்து ஒழுங்குபடுத்திய மொழியினுடைய வரலாற்றை வைத்துக் கொண்டும் தான் இவற்றுக்கான அர்த்தம் கொள்ளப்படுகிறது.
கடல்கோள் என்றால் கடல் பொங்கி வந்து ஒரு நாட்டை முழுமையாக அழிக்கின்ற செயல் என்றும் சுனாமிக்கு அது பொருந்தாது என்றும் சொல்வதானது வரலாற்றுப் பார்வையற்ற அல்லது தமிழ் மொழியின் வரலாற்றை மூடிமறைக்கின்ற ஒரு செலாகத் தான் பார்க்க வேண்டும்.

புவிஅதிர்வும் சுனாமியும்

பூகம்பம்,பூவியதிர்வு,நிலநடுக்கம் என்ற இந்த மூன்று சொற்களும் உலகில் அடிக்கடி நடக்கும் ஒரு இயற்கை பேரனர்த்தை குறிப்பவையாகும். வெள்வேறு தளங்களில் இந்தச் சொற்கள் பாவிக்கப்பட்டாலும் இவற்றுக்குரிய அர்த்தம் என்பது ஒன்று தான் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். இந்தப் பூகம்பம் அல்லது நில நடுக்கம் என்பது றிக்டர் மானி என்ற அளவுகோலால் அளவிடப்படுகிறது. இது 5.8 அல்லது 5.9 மேல் செல்லும் போது கட்டிங்களை தகர்த்தும் பூமி பிளந்து உள்வாங்கியும் மிகப் பெரிய பேரனர்த்தம் நிகழ்கிறது.
ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான தடுப்பு முறைகள் கட்டிடங்களை அமைக்கும் போது கடைப்பிடிக்கப்படுவதால் இந்தப் பேரனர்த்தத்தின் போது எற்படுத்தப்படும் உயிரிழப்புகள் குறைக்கப்படுகின்றன. ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் இந்தப் பேரனர்த்தம் ஏற்படும் போது பாரிய உயிரழிவுகளும் சொத்தழிவுகளும் ஏற்படுகின்றன.
இதற்காக பாரிய உயிரழிவும் சொத்தழிவும் ஏற்பட்டால் தான் பூகம்பம் என்றும் அவ்வாறு ஏற்படாததை பூமி ஆடியது என்றும் சொல்வதில்லை.கட்டிடங்களில் சிறிய வெடிப்புக்களை ஏற்படுத்தும் சிறிய அதிர்வுகள் கூட பூகம்பம் என்றுதான் சொல்லப்படுகின்றன. றிக்டர் அளவில் 9.க்கு மேல் பதிவாகும் மிகப்பெரிய அதிர்வும் 1 ஆகப் பதிவாகும் மிகச் சிறிய அதிர்வும் கூட பூகம்பம் என்று தான் சொல்லப்படுகின்றன.
கடல்கோள் என்பதும் கடலுக்கடியில் ஏற்படும் மிகப் பெரிய நில அதிர்வால் ஏற்படும் சக்தி அலைகள் அல்லது அதிர்வலைகள் கடலை அமுக்கித் தள்ளி தரைப் பகுதியில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்துவதையே குறிக்கிறது. கடலுக்கடியில் ஏற்படும் நிலஅதிர்வின் வீச்சத்தைப் பொறுத்து ஒரு நிலப்பரப்பே அழிவதும் நிலப்பரப்பிலுள்ள மக்கள் அழிவதும் நிகழ்கிறது.
கடல் வந்து ஒரு நிலப்பரப்பை முற்றாக அழிப்பதற்கு கடலுக்கடியில் நிகழும் நில நடுக்கத்தையும்,தரைப்பகுதியல் ஏற்படும் நில நடுக்கத்தையும் தவிர விஞ்ஞான ரீதியாக வேறெந்தக் காரணமும் இல்லை.
எனவே ஒரு நிலப்பரப்பை முழுமையாக அழித்தால் தான் அது கடல்கோள் என்றும், இல்லையென்றால் அது ஆழிப்பேரலை என்றும் குறிப்பிடுவது தமிழர்களது வரலாற்றை மறைக்க வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்ட தவறான செயலாகும்.
‘ஆழிப் பேரலை’ என்றால் கடலில் எழுந்த பேரலை என்று பொதுவாக அர்த்தங் கொள்ளப்படுகிறது. இந்தப் பேரலை ஒரு புயற்காற்றால் -கடலில் ஏற்பட்ட ஒரு ஒரு பெரிய தாழ்வமுக்கத்தால் கூட ஏற்பட முடியும். இந்த அலைகளுக்கும் கடலுக்கடியில் எற்படும் நிலநடுக்கம் எற்படுத்தும் பேரலைகளுக்கும் இடையில் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது.
சுனாமி என்ற ஜப்பானிய மொழியில் அழைக்கப்படுவதை (நேரடியாகவோ அல்லது ஆங்கில மொழி வழியாகவே) ஜப்பானிய மொழியல் மற்றும் கருத்தியல் தளத்தினுடாக பார்த்து ‘ஆழிப்பேரலை’ என்று மாற்றீட வைத்துள்ளதும், ‘கடல்கோள்’ என்று இதனை தமிழ் தளத்திலும் தமிழ்மொழியின் வரலாற்றுக்கூடாகவும் பார்த்தவர்களுடைய கருத்து காலத்துக்க ஒவ்வாததென்று சிறுமைப்பட்டிருப்பதும் கருத்திலை கட்டமைப்பதில் ஊடகத் துறை எவ்வளவு முதன்மை பாத்திரம் வகிக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
00000

https://sivasinnapodi.wordpress.com/2014/07/05/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/

Advertisements