இரத்தினசிங்கம்: நீள்துயிலான நிர்குணன்

Posted on January 13, 2016

0


-தெய்வீகன்-

1967ஆம் ஆண்டு அரபுநாடுகளுக்கு சிம்ம சொப்பனமாக அமைந்த இஸ்ரேலின் ஆறுநாள் யுத்தத்தின்போது, துணிச்சல் மிக்க பாதுகாப்பு அமைச்சராக களத்தில் நின்று தனது படைகளை நெறிப்படுத்திய புதிய இஸ்ரேல் நாட்டின் யுத்த வீரன் மோஷி தயான். அக்காலப்பகுதியில் சமர்க்கள நாயகனாக உலகநாடுகளால் வர்ணிக்கப்பட்ட மோஷி தயான், பின்னர் இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்று எகிப்துடன் நடைபெற்ற முக்கிய சமாதான பேச்சுக்களிலும் பங்களித்தார்.

மோஷி தயான், 1941இல் சண்டை ஒன்றுக்காக களத்தில் தொலைநோக்கு கருவியை இயங்கிக்கொண்டிருந்தபோது எங்கிருந்தோ மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதலினால் தனது இடது கண்ணை இழந்தார். அதற்குப்பின்னர், அவர் வகித்த பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு, அவரது ஒற்றைக்கண்ணுடனான தோற்றம் பார்ப்பவர்களுக்கு இயல்பாகவே ஒருவித உக்கிர தோற்றத்தை ஒட்டியதுபோலிருந்தது. அவரது நேர்த்தியான பணி அதற்கு மேலும் வலு சேர்த்தது. இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால், 50களில் இலங்கை ஊடகத்துறையில் கால்பதித்து கோலோச்சிக்கொண்டிருந்த ஜாம்பவான் இரத்தினசிங்கம் அவர்களுக்கு சக ஊடகவியலாளர்கள் சூட்டியிருந்த பட்டப்பெயர்தான் மோஷி தயான்.

அறுபதாண்டு காலமாக இலங்கை ஊடகத்துறையில் தனக்கென தனியிடம் பதித்து ஆட்சிபுரிந்த ‘இலங்கையின் மோஷி தயான்’ இரத்தினசிங்கம் கடந்த 10ஆம் திகதி நீள்துயிலடைந்தார். இரத்தினசிங்கம் அவர்களை மோஷி தயான் என்றழைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இரத்தினசிங்கம் அவர்களுக்கு வலது கண் இல்லை. அத்துடன் ஆசிரியர் பீடத்தில் அவருடைய நிர்வாகம் எனப்படுவது மிகவும் கடுமையானதாகவே காணப்படும். ஒரு செய்தி ஆசிரியராக அவர் விடுக்கும் இராணுவத்தனமான உத்தரவுகளும் வெட்டு ஒன்று துண்டிரண்டாக சக செய்தியாளர்களிடம் பேசிக்கொள்ளும் வழக்கமும் அவர் மீது ஒரு கடுமையான உயரதிகாரி என்ற விம்பத்தை உருவாக்கியிருந்தது. அப்படி பழகுவதால் அவர் எவருடனும் தனிப்பட்ட ரீதியில் பகை பாராட்டுபவர் என்றோ அல்லது ஊழியர்கள் மத்தியில் பாரபட்சம் காட்டுபவர் என்றோ காரணம் கிடையாது. ஆனால், தனது பணியிலும் தனக்கு கீழ் பணிபுரிபவர்களிடமும் நேர்த்தியான வேலையை பெற்றுக்கொள்வதிலும் இறுக்கமான நிலைப்பாட்டை கடைப்பிடித்தவர். அவ்வளவே. அவரதுஅந்த நிலைப்பாட்டில் ஒருபோதும் சமரசம் இருக்கவில்லை. அதற்காக அவர் பெருமையும் கொள்ளவில்லை. இன்று அந்த ஜாம்பவானை இலங்கை தமிழ் ஊடக உலகம் இழந்திருக்கிறது.

மாறிவருகின்ற கால நீரோட்டத்தில் மாற்றம் கொள்கின்ற எல்லா துறைகளையும் போல ஊடகத்துறையும் – குறிப்பாக இலங்கையின் ஊடகத்துறையும் – இன்று பலவிதங்களில் முன்னேற்றங்களைத் தொட்டுவிட்டது. இணையம், சமூகவலைத்தளங்கள் என்று பாரியளவில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள் ஊடகத்துறையை ஆட்டுவித்துக்கொண்டிருக்கும் இன்றைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் அச்சுக்கோர்த்துப் பத்திரிகை வெளியிடும் காலத்திலேயே தங்கள் திறமைகளை பறைசாற்றியவர்களில் ஒருவராக உருவாகியவர்தான் இரத்தினசிங்கம் அவர்கள். இலங்கை தமிழ் ஊடகத்துறையை சற்று பின்நோக்கி திரும்பிப்பார்த்தால், உண்மையை வெளியில் கொண்டுவந்த ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் சுமுகமாகவோ, சுதந்திரமாகவோ பயணம் செய்ததாக வரலாறு கிடையாது. அவர்கள் கால காலமாக பாரிய அடக்குமுறைகளுக்குள்ளும் அச்சுறுத்தல்களுக்கும் தொடர்ச்சியாக உள்ளாகியிருக்கின்றன. இது ஒருபுறமிருக்க, ஊடக தர்மத்தை தியாகம் செய்துவிட்டு, கடமைக்காகவும் காசுக்காகவும் போய்வருகின்ற அலுவலகமாக பத்திரிகைத்துறையை பயன்படுத்திக்கொண்ட பலர், எந்த சிக்கலுமின்றி சகல சௌபாக்கியாங்களுடனும் வாழ்ந்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், ஊடகத்துறையை வேறுபல துறைகளுக்கு பக்கபலமாக உபயோகித்தவர்களும் இதனால் பயனடைந்திருக்கிறார்கள். முக்கியமாக ஆட்சிகள் மாறுகின்றபோதெல்லாம் ஊடகத்துறையிலுள்ள விலைபோகக்கூடியவர்களை தங்களது கைக்கூலிகளாக பயன்படுத்துவதற்கு கண்கொத்திப் பாம்பாக செயற்படுவதில் அரச தரகர்கள் விண்ணர்கள்.

இந்த சலுகைகள் சிலவேளைகளில் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஊடகவியலாளர்களுக்கு ஆசனங்கள் வழங்குவதுவரை சென்றதும் உண்டு. அந்த வரலாறுகளை மக்கள் நன்றாகவே அறிவர். இவ்வாறு அரசியல்வாதிகளாக மாறிய ஊடகவியலாளர்களில் சிலர் நேர்மையாக மக்களுக்கு சேவை செய்வதற்கு தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துவர்களாகவும் உள்ளனர். அதேபோல, புலனாய்வுப் பிரிவினரும் ஊடகத்துறைக்குள்ளிருந்து விடயங்களை கறந்துகொள்வதற்கு ஊடகவியலாளர்களை விலைக்கு வாங்கிக்கொள்ள முயற்சிப்பதுண்டு. இப்படியாக, ஊடக தர்மத்துக்கு வெளியே நின்றுகொண்டு – நியாய தராசுகளை தூர எறிந்துவிட்டு – பணிசெய்ய புறப்பட்ட ஊடகவியலாளர்கள் எனப்படுபவர்களுக்கு ஊடகத்துறை என்பது எத்தனையோ சௌகரியங்களை அள்ளிக்கொடுக்கும் அட்சயபாத்திரம் ஆகும். ஆனால், இரத்தினசிங்கம் போன்ற ஊடகவியலாளர்கள் இப்படியான சகல கரடுமுரடான பாதைகளையும் கடந்து வந்தவர்கள். ஊடகத்துறையின் உதாரண புருஷர்களாக தங்களை முன்னிறுத்தி வாழ்ந்தவர்கள்.

ஊடக தர்மத்தின் வரைவிலக்கணம் என்ன என்பதை தங்களது வருங்காலத்திற்கு வாழ்ந்து காட்டியவர்கள். இரத்தினசிங்கம் அவர்களின் ஊடக வாழ்க்கையை எடுத்துநோக்கினால், அவர்;, ‘சுதந்திரன்’ பத்திரிகையின் ஆசிரியராகவும், ‘வீரகேசரி’ பத்திரிகையின் இணை ஆசிரியராகவும், ‘தினபதி’, ‘சிந்தாமணி’ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியராகவும் பின்னர் ‘சூடாமணி’ பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணிபுரிந்து பின்னர், 2000ஆம் ஆண்டளவில் ‘சுடரொளி’ வாரப் பத்திரிகையினதும் பின்னர் அதன் தினசரியினதும் ஆசிரியராக பணிபுரிந்தார். ‘வீரகேசரி’ பத்திரிகையில் பணிபுரிந்த காலப்பகுதியில், அப்போது அங்கு பணிபுரிந்துகொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துடன் நெருங்கிய நண்பரானார். பின்னர், ‘தினபதி’, ‘சிந்தாமணி’ பத்திரிகைகளுக்கு ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சென்றார். அந்தக் காலப்பகுதியில், 1970 களில் – ஆட்சிக்கு வந்த சிறிமா அரசு, வெளிநாட்டு இறக்குமதியை கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது.

அதன் ஓர் அங்கமாக, கோதுமை மாவின் இறக்குமதியை கட்டுப்படுத்தி மரவள்ளிக்கிழங்கின் உற்பத்தியை அதிகரிக்கவும் அதனை காலை, மாலை உணவுகளாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதற்கு மரவள்ளி கன்றுகளை விநியோகிக்கும் நடவடிக்கையைகூட பாரிய அளவில் முன்னெடுத்தது. சிறிமா அரசின் இந்த நடவடிக்கையை தினபதி, சிந்தாமணி பத்திரிகைக் குழுமங்களின் ‘தவச’ நிறுவனம் கடுமையாக எதிர்த்தது. மரவள்ளி கிழங்குகள் நஞ்சு பீடித்து மக்களுக்கு உயிராபத்து விளைவிக்கக்கூடியவை போன்ற செய்திகளை முன்பக்க செய்திகளாக பிரசுரித்தன. இதனையடுத்து, இந்த பத்திரிகைகள் சிறிமா அரசினால் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் இரத்தினசிங்கம் அவர்கள், பிரித்தானிய தூதரகத்தில் சென்று மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றினார். மூன்று வருடங்களின் பின்னர், இந்த பத்திரிகைகள் மீண்டும் திறக்கப்பட்டபோது, தூதரகப் பணியை துறந்துவிட்டு மீண்டும் பத்திரிகைக்கு வந்தார். அப்போது தூதரகம் அவரது இடத்துக்கு யாராவது ஒருவரை பெற்றுத்தரும்படி கோரியதற்கிணங்க, தனது இடத்துக்கு அன்டன் பாலசிங்கத்தை பிரேரித்திருந்தார். இரத்தினசிங்கம் பிரேரித்ததை ஏற்று அன்டன் பாலசிங்கத்துக்கு பிரித்தானிய தூதரகம் அந்தப் பணியை வழங்கியிருந்தது.

இருவருக்கும் இடையிலிருந்த இந்த இறுக்கமான நட்பு, பாலசிங்கத்தின் கடைசிக்காலம் வரை தொடர்ந்தது. அதிகம் நட்பு வட்டாரத்தை கொண்டிராத இரத்தினசிங்கம் அவர்கள், தனது ஊடகவியலைத்தான் அதிகமாக நேசித்தார். அதிகமாகக் காதலித்தார். சின்னச் சின்ன விடயங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து எழுதுவார். செய்தி கட்டுமானத்தில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றினார். எல்லோரையும் அதேபோல எழுதவேண்டும் என்று வற்புறுத்தாவிட்டாலும் செய்தி எழுதும் பாணி வாசகர்கள் இரசிக்கும்படியும் இலகுவாக விளங்கும்படியும் இருக்கவேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்.

ஒரு வசனத்தில் ஒரு விடயத்தை மட்டுமே சொல்ல வேண்டும். செய்திகள் எழுதும்போது இரண்டு விடயங்களை கோர்த்து எழுதவேண்டும் என்பதற்காக தேவையில்லாத இணைப்பு சொற்களை பயன்படுத்தக்கூடாது. ஒருமையில் ஆரம்பிக்கும் வசனங்கள் ஒருமை விகுதிகளுடனும் பன்மை சொற்களுடன் ஆரம்பிக்கும் வசனங்கள் பன்மை விகுதியுடனும் நிறைவுபெறவேண்டும். (உதாரணம் – யாழ்ப்பாணத்திலிருந்து அனுப்பப்பட்ட தபால்கள், கொழும்பு வந்து சேர்ந்தன. சேர்ந்தது என்பது பிழை) உயர்திணை, அ‡றிணை சொற்களில் கடுமையான விதிமுறைகள். (உதாரணம் – சந்திரிகா வருவதாக அறிவிக்கப்பட்ட கூட்டம். இந்த வசனத்தில், சந்திரிகா உயர்திணையாகவும், வருவதாக என்று எழுதப்படுவது அ‡றிணைக்குரிய சொற்களாகவும் உள்ளன. ஆகவே, சரியாக எழுதும்போது சந்திரிகா வருவார் என்று அறிவிக்கப்பட்ட கூட்டம். போன்ற பல விடயங்களை, செய்திகளில் நுணுக்கமாக திருத்துவார். ‘ஐசே… இது செய்தி மட்டுமில்லை. இதை பார்த்து நாளைக்கு சின்னப் பிள்ளைகள், தமிழையும் படிக்கக்கூடும். அவர்களுக்கு ஏற்ற மாதிரி பொறுப்போட செய்தி எழுதவேணும்’ என்று எல்லோரிடமும் கூறுவார். இப்படியான பல விடயங்கள், அநேக தருணங்களில் சுடு சொற்களாக அவர் வாயிலிருந்து வந்து விழும். அதனால், அவற்றை ஏற்றுக்கொள்வதில் பலருக்கு சிரமங்கள் இருந்தன. ஆனால், அந்தக் கண்டிப்பினை ஒரு சரியான ஆசானாக அவர் வெளிப்படுத்தினாரே அன்றி, அதில் கபடத்தனமோ தன்னைவிட ஏனையோர் மிஞ்சிவிடுவார்கள் என்ற பொறாமையினாலோ அல்ல. ஆனால், அதனை உணர்ந்துகொள்வதற்கு பலருக்கு பல மாதங்கள் ஆனதுண்டு.

சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை ஊடகவியலாளர் அமைப்பு, இரத்தினசிங்கம் ஐயாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது என்று தீர்மானித்து அவரிடம் அனுமதி பெறுவதற்காக அவரை சென்று சந்தித்தது. ஆனால், அந்த விருதினை மறுத்த இரத்தினசிங்கம் அவர்கள், தன்னோடு பல காலம் பணிபுரிந்த சிவகுருநாதன் அவர்களுக்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சிவகுருநாதன் அவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. தனக்குரிய அங்கிகாரங்களையும் விருதுகளையும் தனிப்பட்ட பாராட்டுக்களையும் அவர் என்றைக்கும் ஏற்றுக்கொண்டது கிடையாது. அவற்றை அறவே வெறுத்தார். தனக்குக் கீழே பணிபுரிந்தவர்களை உயர்த்தி விடுவதிலும் அவர்களுக்கு புகழ் சேரும்போது அதனை பார்த்து மனம் நிறைவதிலும் அதிகம் மகிழ்ச்சியடைபவராக வாழ்ந்தார்.

– See more at: http://www.tamilmirror.lk/163589/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%A9%E0%AE%9A-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A8-%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%A9-%E0%AE%A8-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%A3%E0%AE%A9-#sthash.QxqysBlZ.dpuf

Advertisements