நெருப்புச் சுடும்……

Posted on January 11, 2016

0


  • கருணாகரன் –

நெருப்புச் சுடும். அதற்காக அதைத் தீண்டாமல், அதைப் பயன்படுத்தாமல் இருந்து விட முடியுமா? மனிதர் நெருப்பைக் கையாண்டே தமது வாழ்வையும் வரலாற்றையும் சிறப்பாக உருவாக்கினர். வரலாறு என்பதே நெருப்பினால் ஆனதுதான். உணமையும் அப்படித்தான். சுடும். ஈட்டிபோலக் குத்தும். வலிய ஆயுதம் அது. அதற்காக அதை நாம்விட்டு விட முடியுமா? உண்மையின் சிறப்பே அதனுடைய கூர்தான். நாம் உண்மையைப் பேசுவதன் மூலமாகத்தான் பலமடைய முடியும். உண்மையின் வெளிச்சத்தில்தான் எங்கள் முகங்கள் பிரகாசமாக ஜொலிக்கும். வாழ்வும் வரலாறும் வெளிச்சமடையும்.

விமர்சனம் உண்மையைத் துலங்கச் செய்கிறது. பட்டைபோட்டு ஜொலிக்க வைக்கிறது. நாம் நக்கீரனை விமர்சனத்திற்காகப் போற்றுகிறோம். புராணக்கதைதான் இது என்றாலும் இதனுடைய சாரம் என்ன? கடவுளே என்றாலு்ம் விட்டுக்கொடுப்புகளின்றி, தயவு தாட்சணியமின்றி உண்மையைச் சொல்வோம். நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றுரைப்போம் என்று சொன்னவரின் பரம்பரை என்போம். ஆனால், நம்மைப்பற்றிய விமர்சனங்களுக்கு நாம் இடமளிப்பதில்லை. பிறரை விமர்சிப்பதற்கும் துணிவதில்லை. எல்லா அறிவுரைகளும் பாடங்களில் படிப்பதற்கு மட்டும்தானா? வாழ்க்கைக்கு அவற்றைப் பயன்படுத்துவதில் அக்கறையில்லையா?

ஒரு பசுவின் கன்றைக் கொன்றான் என்பதற்காக மனுநீதி கண்ட சோழன் தன்னுடைய மகனுக்குத்தண்டனை அளித்து பசுவுக்கு நீதி வழங்கினான் என்று படித்திருக்கிறோம். மகனாக இருந்தாலும் நீதிக்கு மாறாக இருந்தால் அது தவறு என்பதுதானே அர்த்தம். அப்படியென்றால். நாம் விரும்புகின்ற அமைப்போ, மனிதர்களோ, தலைவர்களோ தவறாக நடந்திருந்தால் அதை விமர்சிப்பதையிட்டு நாம் எதற்காகத் தயக்கம் காட்ட வேண்டும்? நமக்கு விருப்பமானவற்றை மட்டும் பேசுவது உண்மையோ இலக்கியமோ நியாயமோ என்றாகி விடாது. அது பிரச்சாரம் அல்லது விபச்சாரம். விருப்பத்துக்குரிய ஒன்றை மட்டும் செய்வது என்றால் அதனுடைய அர்த்தம் என்ன?

நாம் நமது மனதுக்கு உண்மையாக இருக்க வேணும். அதைப்போலப் படைப்புக்கு அந்தப் படைப்பாளி உண்மையாக, விசுவாசமாக இருப்பது அவசியம். படைப்புக்கு உண்மையாக இருக்க வேண்டுமே தவிர, தான் சார்ந்த தரப்புக்கோ, இனத்துக்கோ, சமூகத்துக்கோ அவர் விசுவாசமாக இருக்க வேண்டுமென்றில்லை. அப்படி இருப்பது தவறில்லை. ஆனால், அங்கே நடக்கும் தவறுகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. நாம் தவறுகளிலிருந்தும் நமது கடந்த கால அனுபவங்களிலிருந்தும பாடங்களைக் கற்றுக்கொள்வோம்.

கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் தமிழ்நாட்டில் பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டது. தமது சமூகத்துக்கு எதிராக எழுதி விட்டார் என்று குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பெருமாள் முருகனைத் தாக்க முற்படடனர். அவர் தன்னுடைய வீட்டிலேயே இருக்க முடியாமல் தலைமறைவுக்குள்ளானார். ஒரு தொலைபேசியைக் கூடப் பயன்படுத்த முடியாத அளவுக்கு அவருடைய உரிமை பறிக்கப்பட்டது. அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டது. ஒரு எழுத்தாளனுடைய சாதாரணமான கருத்தையே எதிர்கொள்ள முடியாத அளவுக்குத்தான் நமது சமூக மனது உள்ளது.

இதெல்லாம் நடந்தது தமிழ்கூறும் நல்லுலகில்தான். நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சொன்னவர்களின் பரம்பரையில்தான். இதையிட்டு நாம் மகிழ்வதா? வெட்கப்படுவதா? துக்கப்படுவதா?

இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவான்கரைக்குறிப்புகள் என்ற இந்த நூலின் கவிதைகளில் நான் யாரையும் விமர்சிப்பதற்காகவோ, தாக்குவதற்காகவோ பழி சொல்வதற்காகவோ முயற்சிக்கவில்லை. அப்படியான எண்ணத்தோடு இவற்றை நான் எழுதவும் இல்லை. அப்படி எழுதுவதில் பயனுமில்லை. முடிந்த விடயங்களைப் பகுத்துப் பார்க்கலாமே தவிர, அவற்றையிட்டுப் பழி சொல்வதால் பலன் கிட்டாது. இந்தப் பகுத்தாய்வு நமது தவறுகளைக் களைந்து புதிய பாதையில் பயணத்தைத் தொடர வேண்டுமென்பதற்காகவே தவிர, யாரையும் தண்டித்துக் குப்பைக்குள் தள்ளுவதற்காக அல்ல.

இந்தக் கவிதைகளை நான் எழுதிய காலத்தில் இவற்றைப் படித்த என்னுடைய மகன் கேட்டார், “எதற்காக நீங்கள் கடந்த காலத்தைப்பற்றி எழுதுறீங்கள்? இப்படி எழுதினால் உங்களின் மீது கண்டனங்களும் கல்லெறிகளும் வசைகளும்தானே வரும். இதனால் பயன்என்ன? இதைவிட நீங்கள் புதிய பிரச்சினைகளைப்பற்றி எழுதலாமே. அது உங்களைப் பாதுகாக்கும். முடிந்தவற்றைப்பற்றி எழுதுவதால் யாருக்கு லாபம்? இன்னும் பலருக்குக் கோபம்தான் வரும்“ என்றார்.

மேலோட்டமாகப் பார்த்தால் இது உண்மையாகவே தெரியும். ஆனால், அது உண்மையல்ல. தவறு. யாருடைய விருப்புங்களுக்காகவும் ஒரு எழுத்தாளர் எழுத முடியாது. மற்றவர்கள் கோபப்படுவார்களே என்று அவன் எழுதாமல், இயங்காமல் இருந்து விடவும் முடியாது. அப்படி இருந்தால் அது ஆதாயத்துக்கான அரசியல். படைப்பு என்பது உண்மையும் நீதியுமே அதனுடைய அடிப்படை. நீதியில் சனனிலை குலைய முடியாது. அப்படிச் சமனிலை குலைந்தால் அது நீதியாக இருக்காது.

இந்தக் கவிதைகள் படுவான்கரையைப்பற்றி, அதனுடைய சமகாலத்தைப்பற்றிக் கரிசனைப்படுத்த – கவனப்படுத்த விரும்புகிறது. மீண்டும் சொல்கிறேன். இதன் மூலம் யாரையும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதோ, யாரையும் கண்டிப்பதோ என்னுடைய நோக்கமல்ல. இந்தக் கவிதைகள் சொல்கின்ற சேதிகளின் பின்னே செல்லாமல் உள்ளே சென்று விளங்கிக் கொண்டால், பல பயனுள்ள காரியங்களைச் செய்யலாம்.

இன்று நாம் வடக்குக் கிழக்கு இணைப்பைப்பற்றிப் பேசுகிறோம். தமிழ்த்தேசியம் பற்றிப் பேசுகிறோம். ஆனால் வாகரையும் பனிச்சங்கேணியும் படுவானகரையும் பாலமோட்டையும் வன்னியும் இந்த வடக்குக் கிழக்கு இணைப்பிற்குள்தான் இருக்கிறது – இந்தத் தமிழ்த்தேசியத்தின் எண்ணப்பரபபிற்குள்தான் இருக்க வேண்டும் என்று யாரும் சிநதிப்பதாகத் தெரியவில்லை் எல்லாமே வடக்கில் – யாழ்ப்பாணத்தில்தான மையம் என்று சிநதிக்கப்படுகின்றன. எல்லா உரையாடல்களும் எல்லாத் தீர்மானங்களும் யாழ்ப்பாணத்திலிருந்துதான் – யாழ்ப்பாணத்திற்குள்தான்.

அது மனேஜஸ் போறமாக இருந்தாலென்ன, பொதுநூலகக் கேட்போர் கூடத்தினர் என்றால் என்ன யாரும் இதற்கு விதிவிலககல்ல. யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு பத்திரிகைகள் வருகின்றன. கிழக்கில் இருந்து ஒரு பத்திரிகையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று யாரும் சிந்திக்கவில்லை.

இந்த அரங்கிலே பலர் இருக்கிறார்கள். ஒரு காலம் மாபெரும் கனவுகளோடு போராடப்புறப்பட்டவர்கள், போராட்டத்துக்காகக் களமாடப் படகேறியவர்கள், பல்வேறு சித்தாந்தங்களிலும் வழிமுறைகளிலும் நம்பிக்கை வைத்திருந்தவர்கள், மாக்ஸிற்றுகள், தமிழ்த்தேசியர்கள், சமூக விடுதலைப்போராளிகள் எனப் பலர். பல கனவுகள். பல நம்பிக்கைகள். பலவிதமான எதிர்பார்ப்புகள். எல்லோருடைய நம்பிக்கைகளும் கனவுகளும் பொய்த்துப்போய் விட்டன. அல்லது எரித்தழிக்கப்பட்டன. அல்லது தோற்கடிக்கப்பட்டன. இதற்குப் பல காரணங்கள். பலருடைய சிந்தனைகள் காரணமாக இருக்கலாம்.

ஆனால், இன்று எல்லாம் முடிந்து விட்டது. கடந்த காலத்தில் எல்லோருக்கும் பங்குண்டு. எல்லோர் மீதும் பழிச்சொல்லுக்கு இடமுண்டு. ஆனால், ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவங்கள் உள்ளன. வெற்றியிலும் தோல்வியிலும் இழப்பிலும் பெறுதலிலும் நன்மையிலும் தீமையிலும் எல்லோருக்கும் பங்கும் முக்கியத்துவமும உண்டு. நாம் யாரையும் மறைக்க முற்படக் கூடாது. யாரையும் அளவுக்கு அதிகமாகத் தூக்கி விடவும் கூடாது. இரண்டும் தவறானவை.

இவை ஒன்றும் குற்றச்சாட்டுகளோ பழித்துரைப்புகளோ இல்லை. நம்மை மீண்டும் நிதானப்படு்த்திப் பார்த்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பின் வெளிப்பாடாகும்.

இறந்தவர்களுக்கு மரியாதையைச் செலுத்துவோம். அதற்கப்பால் அவர்களுக்கு நாம் எதுவும் செய்து விட முடியாது. இறந்த உன் தந்தையை விட உயிரோடிருக்கும் பிள்ளை முக்கியம் என்று சொல்லப்படுவதுண்டு. பிள்ளை என்பது எதிர்காலத்துக்குரியது. அவர்களைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

நாம் தோற்றுப்போனவர்கள் இலலை. அறிவின் ஒளி கொண்டு சிந்திப்பதாக இருந்தால், எமக்குத் தோல்வி இல்லை. அறிவின் ஒளியைக் கொண்டு சிநதிக்கின்ற – செயற்படுகின்ற எந்தச் சமூகமும் தோற்பதில்லை. அப்படி அறிவாகச் சிந்திப்பவர்களாக இருந்தால் நிசச்யமாக நமக்குப் பெரு வெற்றிதான். இல்லையென்றால் பெருந்தோல்வியே…

Advertisements