மீடியா பெண்களுக்கு முக்கியமாச் சொல்றோம்!

Posted on January 4, 2016

0


மீடியாவில் தோன்றும் பெண்கள்,தொகுப்பாளினிகளோ, சின்னத்திரை நட்சத்திரங்களோ, செய்தி வாசிப்பாளர்களோ… யாரானாலும் அவர்கள் அணிகிற உடைகளும், நகைகளும் பார்வையாளர்களை நிச்சயம் கவரும். குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியையும் அதில் தோன்றிய முகங்களையும் நினைவில் வைத்துக் கொண்டு, அவர்கள் அணிந்திருந்த அதே டிசைனில் உடையும் நகையும் தேடிப்பிடித்து வாங்குபவர்களும் உண்டு. அதற்கு நேரெதிராக, சின்னத்திரையில் தோன்றும் பெண்களின் உடை மற்றும் நகைகளை வெறுத்து, ‘கொஞ்சம்கூட டிரெஸ்சிங் சென்ஸே இல்லையே… டிரெஸ்சுக்கும் போட்டிருக்கிற ஜுவல்ஸுக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லையே…’ என கமென்ட் அடிப்பவர்களும் உண்டு.இங்கே நாம் பார்க்கப் போகிற தகவல்கள், ஏற்கனவே மீடியாவில் உள்ள நட்சத்திரப் பெண்களுக்கு உதவியாக இருப்பதோடு, வருங்கால பிரபல முகங்களுக்கும் நிச்சயம் பயன்படும்.

செய்தி வாசிப்பாளர்

செய்தியே பார்க்காதவர்களைக் கூட டி.வி. முன் கட்டிப் போடச் செய்கிற வித்தை தெரிந்தவர்கள் இவர்கள். என்ன தான் மக்களின் கவனம் ஈர்ப்பவர்களாக இருந்தாலும், செய்தி வாசிப்பாளர்களுக்கென சில நகையலங்கார லட்சணங்கள் உண்டு. அவர்கள் அணிகிற எந்த நகையும் பார்வையாளரை ரசிக்கச் செய்யலாமே தவிர, கவனத்தைத் திசைத்திருப்புவதாக இருக்கக் கூடாது. கண்களை உறுத்தாத குட்டிக் குட்டி மணிகள் வைத்த செட் இவர்களுக்கு அழகு. இவர்கள் அணிகிற நகையானது, உடைக்கு மிகச் சரியான மேட்ச்சிங்காக இருக்க வேண்டும். கோல்டன் ஃபினிஷ் செயினில், குட்டி டாலர் வைத்து அணிவது பாந்தமாக இருக்கும்.

உட்கார்ந்து செய்தி வாசிப்பதால் இவர்களுக்கு இடுப்பு வரைதான் திரையில் தெரியப் போகிறது. எனவே, கழுத்து மற்றும் காதணிகளில் இவர்கள் அதிக கவனம் செலுத்தலாம். அகலமான தோள்பட்டைகள் கொண்டவர்கள், அது உறுத்தலாகத் தெரியாதபடிக்கு, கழுத்தை மறைக்கிற மாதிரி நகை அணிய வேண்டும். நகை அணியாமலிருப்பது ஃபேஷன் என்கிற எண்ணத்தில் கழுத்தை காலியாக விட வேண்டாம். பொடியான கொத்து மணிகள் சேர்த்து இரண்டு அல்லது மூன்று சரம் வைத்த மாலைகள் இவர்களுக்குப் பொருத்தமாக இருக்கும்.

பண்டிகை மற்றும் சிறப்பு தினங்களில் செய்தி வாசிக்கிற போது, வழக்கத்தைவிட சற்றே ஆடம்பர மாக நகை அணியலாம். அதுவுமே கல்யாண வீட்டுக்குச் செல்கிற மாதிரி அதிகமாகத் தெரியாமல் சிம்பிளாக அதே சமயம் ஸ்பெஷலாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.கன்னங்கள் ஒட்டி, சின்ன முகம் கொண்டவர்கள் ஜிமிக்கி அணியலாம். குண்டான, வட்ட வடிவ முகம் கொண்டவர்களுக்கு வட்ட வடிவ தோடுகள் அழகு. செய்தி வாசிப்பாளர்கள் பளபளவென மின்னுகிற, நீளமாகத் தொங்குகிற காதணிகளைத் தவிர்க்க வேண்டும்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்

செய்தி வாசிப்பாளர்களுக்கு அப்படியே நேரெதிரானவர்கள் இவர்கள். நேயர்களின் மொத்த கவனமும் இவர்களது நகையிலும், உடையிலும் தான் பதியும். எனவே, இவர்கள் சற்றே ஆடம்பரமான உடைகளையும் நகைகளையும் அணியலாம். அதிக வேலைப்பாடு செய்த சல்வார் அல்லது சேலை அணியலாம். அதற்கு மேட்ச்சாக பெரிய, நீளமான காதணிகளை அணியலாம். கை நிறைய வளையல்கள் அணிவதும் அழகு.

சேலை உடுத்தும் தொகுப்பாளினிகள்

என்றால் சோக்கர் செட் அணியலாம். ஆடம்பரமான, அடர்த்தியான நகைகள் அணியலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளினிகளைப் பொறுத்த வரை இப்படித்தான் நகை அணிய வேண்டும் என எந்த வரையறையும் கிடையாது. அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் வித்தியாசமாக எதையாவது முயற்சி செய்தாலே, அது பார்க்கிற மக்கள் மத்தியில் ஃபேஷனாகி விடும். புதிய ஃபேஷன்களை உருவாக்குகிற ட்ரெண்ட் செட்டர்கள் என்பதால், நிறைய புதுமைகளை முயற்சி செய்யும் வாய்ப்புகள் இவர்களுக்கு அதிகம். உதாரணத்துக்கு ஜிமிக்கி என்றால் காதில்தான் அணிய வேண்டும் என்றில்லை. பத்து, பதினைந்து ஜிமிக்கி களை ஒன்றாகக் கோர்த்து, கழுத்துக்கான நெக்லஸ் மாதிரி அணியலாம். அதே மாதிரி ஒரு ஜிமிக்கி, அதில் ஒரு மாட்டல், அந்த மாட்டலின் பின்புறத்தில் இன்னொரு ஜிமிக்கி என டபுள் ஜிமிக்கி அணிவதுகூட இப்போது லேட்டஸ்ட். ஒரு காலுக்கு மட்டும் வெள்ளி கொலுசு அணிவதும், கருப்புக் கயிறு கோர்த்த கொலுசு அணிவதையும் கூட தொகுப்பாளினிகள் முயற்சி செய்யலாம்.

மாடலிங் செய்கிற பெண்கள்

மாடலிங் செய்கிற பெண்களுக்கு நகைகள் மிகக் குறைவாக இருப்பதுதான் அழகு. அவர்கள் நகையைவிட உடைக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, காதை ஒட்டின மாதிரி ஒற்றைக் கல் வைத்த ஸ்டட், சற்றே காஸ்ட்லியான ரூபி, எமரால்ட் மாதிரியான கற்களையும் அணியலாம். மிக மெலிதான செயின், பொடி கற்கள் பதித்த மெலிதான பிரேஸ்லெட் அணியலாம். இவர்கள்தான் ஃபேஷனின் பிரதிநிதிகள் என்பதால், புதிய புதிய டிசைன்களை போடலாம். காதில் நான்கைந்து துளைகள் போட்டு, ஒவ்வொன்றிலும் காதணி போடுவது, மூக்கில் வளைய மாடலில் மூக்குத்தி அணிவது, கண்ணுக்கே தெரியாத, அதே நேரம் பளபளக்கும் ஒற்றைக் கல் மூக்குத்தி அணிவது போன்றவை இவர்களுக்கு மிக அழகாகப் பொருந்தும்.

சீரியல் நடிகைகள்

நடிகைகளைப் பொறுத்த வரை அந்த சீரியலில் அவர்களது கேரக்டர் மற்றும் சிச்சுவேஷனை பொறுத்தே நகைகள் அணிய முடியும். அப்படிப் பார்த்தால் அம்மா கேரக்டர் செய்கிறவர், புடவைக்கு மேட்ச்சாக மணிகள் வைத்த ஒற்றை அல்லது இரட்டைச் சர மாலை, முகப்பு வைத்த செயின் அணியலாம். ஹீரோயின் என்றால் சேலையோ, சல்வாரோ அதற்கேற்பவும், கதைப்படி அவர்களது கேரக்டரை பொறுத்தும் சிம்பிளாகவோ, ஆடம்பரமாகவோ நகைகள் அணியலாம். பெரிய பெரிய காதணிகள் மற்றும் கழுத்தை நிரப்புகிற நெக்லஸ்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஹீரோயின்கள் பெரும்பாலும் நல்லவர்களாகவே சித்தரிக்கப்படுவதால், இளம் சிவப்பு, இளம் ஊதா, சந்தன கலர் மாதிரியான மென்மையான கலர்களே இவர்களுக்குப் பொருந்தும்.

வில்லி கேரக்டர் செய்கிறவர்கள் பெரிய டாலர் வைத்த கனமான நெக்லஸ், பெரிய காதணி அணியலாம். அதாவது, அவர்களது நகைகளைப் பார்த்த உடனேயே அவர்கள் மீது பார்வையாளர்களுக்கு ஒரு வெறுப்பு வரும்படி, கண்களை உறுத்தும்படி அணிய வேண்டும். பளீர் நீலம், பளீர் ஆரஞ்சு, அடிக்கிற சிவப்பு என மிக ப்ரைட்டான கலர்களில் நகைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

Advertisements