அழகிகளை உருவாக்கும் மீடியா மேக்கப்!

Posted on ஜனவரி 4, 2016

0


உங்களில் பலருக்கும் மீடியாவில் மின்னும் ஆசை இருக்கும். ‘ஆசை இருந்தா மட்டும் போதுமா? அதுக்கெல்லாம் ஒரு லட்சணம் வேணும். ஸ்கிரீன்ல  வர்ற ஒவ்வொருத்தரும் எவ்ளோ அழகா இருக்காங்க… சாதாரணப் பெண்களுக்கு அதெல்லாம் சாத்தியமாகுமா?’ என்கிற அங்கலாய்ப்புகளும் சிலருக்கு  இருக்கலாம்.

‘‘மீடியாவை பொறுத்த வரை அழகிகள் உருவாக்கவே படுகிறார்கள். நல்ல ஆளுமையோடு, உங்களிடமுள்ள மைனஸை மட்டுப்படுத்தி, பிளஸ்சை  ஹைலைட் செய்யத் தெரிந்து கொண்டாலே போதும்… நீங்களும் மீடியாவில் முகம் காட்டத் தகுதி பெறுவீர்கள்’’ என்கிறார் பிரபல அழகுக்கலை  நிபுணர் வசுந்தரா.  சின்னத்திரையில் இருப்போருக்கும், உள்ளே வரத் துடிப்போருக்குமான அழகு ஆலோசனைகளைப் பட்டியலிடுகிறார் அவர்.

‘‘சினிமாவிலோ, டி.வியிலோ முகம் காட்டுகிறவர்களுக்கு முந்தைய காலத்தில் இருந்த ஒரே சாய்ஸ் பான் கேக். இதைத் தடவிக் கொண்டு, அதற்கு  மேல் மேக்கப் போட்டால் பளீரெனத் தெரிவார்கள். ஆனால், அது ரொம்பவும் ஸ்ட்ராங்கானது. வியர்வையை வெளிவிடாதபடிக்கு, சருமத் துவாரங்களை  அடைத்துக் கொள்ளும். வறண்டு காட்சியளிக்கும். மேக்கப் போட்டதை அப்பட்டமாகக் காட்டும்படி செயற்கையாகத் தெரியும். அந்தக் காலத்து  கேமராக்களுக்கு அந்த மேக்கப் ஓ.கே. இன்றோ எல்லாமே ஹெச்.டி. எனப்படுகிற ஹை டெஃபனிஷனாக மாறிவிட்டதால், மேக்கப்பிலும் நிறைய  மாற்றங்கள், முன்னேற்றங்கள்… எத்தனை பிக்சல் உள்ள கேமரா என்பதைப் பொறுத்தே, மேக்கப் செய்யப்படும்.

மீடியாவில் முகம் காட்டுகிற பெண்கள் முதலில் தமக்கான அழகுசாதனங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது  சாதாரணப்  பெண்கள் பயன்படுத்துகிற ஃபவுண்டேஷனோ, காம்பேக்ட் பவுடரோ இவர்களுக்குப் பொருந்தாது. ஹெச்.டி. எனக் குறிப்பிடப்பட்ட காஸ்மெட்டிக்ஸையே  தேர்ந்தெடுக்க வேண்டும். இன்று அனேகமாக எல்லா பிரபல பிராண்டுகளிலும் ஹெச்.டி. காஸ்மெட்டிக்ஸ் கிடைக்கின்றன. மென்மையாக, அதே நேரம்  கிரீம் போன்று இருக்கும். உபயோகிக்கவும் நன்றாக இருக்கும். ஃபவுண்டேஷன், லிப்ஸ்டிக், ஐ லைனர், மஸ்காரா, லூஸ் பவுடர், காம்பேக்ட் பவுடர் என  எல்லாமே இதில் கிடைக்கின்றன. சருமத்தின் நிறத்துக்கேற்ற ஷேடுகளில் தேர்ந்தெடுக்கலாம்.

எத்தனை தொலைவிலிருந்து பார்த்தாலும், மேக்கப்பின் பிரதிபலிப்பு அழகாகவும்இயல்பாகவும் தெரியும். மேக்கப் போட்டதே தெரியக்கூடாது…  இருப்பினும், முகம் பளீரென, அழகாக இருக்க வேண்டும் என விரும்புவோருக்கும் இது சரியான சாய்ஸ்.முகத்திலோ, சருமத்திலோ காணப்படுகிற  சின்னச் சின்ன தழும்புகள், கரும்புள்ளிகள், வடுக்களை எப்படி மறைப்பது என்கிற கவலை பலருக்கும் உண்டு. கன்சீலர் என்கிற ஒன்று மட்டும்  இல்லாவிட்டால், இன்றைக்கு மீடியாவில் பிரபலமாக இருப்பவர்களில் அனேகம் பேர் காணாமல் போயிருப்பார்கள். கன்சீலர் என்பது, சருமத்திலுள்ள  பிரச்னைகளை மறைக்க உதவும். அடுத்தது தனது சருமம் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ற அழகு சாதனங்களைத்  தேர்ந்தெடுக்கக்கற்றுக் கொள்ள வேண்டும்.

எண்ணெய் வழிகிற சருமம் கொண்டவர்கள், ஆயிலி மேக்கப் செய்யக்கூடாது. வறண்ட சருமம் இருந்தால், ட்ரை மேக்கப் கூடாது. முகத்தின்  வடிவத்துக்கேற்ப மேக்கப் செய்கிற கலையையும் கற்றுக் கொள்ள வேண்டும். கேமஃப்ளாஜ் எனப்படுகிற அதன் மூலம் முகத்தின் நீள, அகலங்களைக்  கூட்டியோ, குறைத்தோ காட்ட முடியும். நீளமான மூக்கை சின்னதாக்கலாம். அகலமான மூக்கை அழகாக்கலாம். டபுள் சின் எனப்படுகிற தாடைச்  சதைகளை மறைக்கலாம். ஸ்கின் டோனைவிட, இரண்டு ஷேடு டார்க்காக மேக்கப் போடுவதன் மூலம் இது சாத்தியம். இப்போதும் நிறைய பேர்  மேக்கப் செய்கிற போது முகத்துக்கு மட்டுமே போடுகிறார்கள். முகம் ஒரு கலரிலும், கழுத்தும் கைகளும் வேறு கலர்களிலும் தெரிவதைப்  பார்க்கிறோம். அதிலும் ஹெச்.டி. கேமரா என்றால் இந்த வித்தியாசம் இன்னும் தெளிவாகத் தெரியும். எப்போது மேக்கப் போட்டாலும் முகம், கழுத்து,  கைகளுக்கும் சேர்த்தே போட வேண்டும்.

ஹேர் ஸ்டைலும் இவர்கள் விஷயத்தில் ரொம்பவே முக்கியம். முகத்துக்குப் பொருந்துகிற மாதிரியான ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்க வேண்டும்.  கேமரா ஒளி பட்டு, கூந்தல் வறண்டு, உடைந்து போயிருக்கும். அதை மென்மையாக்கி, பட்டு போலக் காட்ட கெரட்டின் சிகிச்சைகளைச் செய்து  கொள்ளலாம். கூந்தலை மென்மையாகக் காட்டக்கூடிய சீரம் உபயோகிக்கலாம். சிலருக்கு தலைமுடி குறைவாக, அடர்த்தியின்றி இருக்கும். அவர்கள்  கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய வால்யூமைசிங் ஷாம்பு மற்றும் ஸ்டைலிங் பொருள்களை உபயோகிக்கலாம். முடி குறைவாக உள்ள  மண்டைப் பகுதிகளை மறைக்கும் ஹேர் எக்ஸ்டென்ஷன் உபயோகிக்கலாம். வழுக்கை தெரிகிற இடங்களில் ஹேர் ஃபைபர்ஸ் உபயோகிக்கலாம்.  பார்ப்பதற்கு மிக நைசான பஞ்சுத் தூள் மாதிரி இருக்கும் இதை வழுக்கை உள்ள இடங்களில் அப்படியே தூவி ஒட்டிக் கொள்ளலாம். பார்ப்பவர்களுக்கு  அது முடி மாதிரியே தெரியும். பிரவுன் மற்றும் கருப்பு ஷேடுகளில் கிடைக்கிறது.

இவை தவிர…

  • தினமும் கிளென்சிங், டோனிங், மாயிச்சரைசிங் செய்ய வேண்டியது அவசியம். சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிற இந்த மூன்றுக்கும்  சேர்த்து வெறும் 5 நிமிடங்கள்தான் ஆகும். காலையிலும் மாலையிலும் கிளென்சர் தடவி, முகத்தைத் துடைத்தெடுத்து, பிறகு டோனரை அப்படியே  ஒற்றியெடுத்து, அடுத்து மாயிச்சரைசர் தடவ வேண்டும்.
  • இரவு தூங்கச் செல்லும் முன் மேக்கப்பை முற்றிலும் நீக்க வேண்டியது அவசியம். சிலர் காலை முதல் இரவு வரை மேக்கப்புடன் அப்படியே  இருப்பார்கள். இது சருமத் துவாரங்களை அடைத்து விடும். சருமம் சுவாசிக்க வழியின்றி இருக்கும். எனவே தரமான கிளென்சிங் மில்க் அல்லது  மாயிச்சரைசர் அடங்கிய ஃபேஸ் வாஷ் கொண்டு மேக்கப்பை அகற்றி விட வேண்டும்.
  • ‘இத்தனை நாளா நல்லா இருந்த என் ஸ்கின், மேக்கப் போட ஆரம்பிச்சதும் பருவைக் கிளப்பி விட்ருச்சு’ என பலரும் சொல்லக் கேட்கலாம். அதற்கு  மிக முக்கிய காரணம், அவர்கள் உபயோகிக்கிற ஸ்பாஞ்ச். ரொம்பவும் அழுத்தமான ஸ்பாஞ்ச் உபயோகிக்க வேண்டாம். மற்றவரது ஸ்பாஞ்ச் மற்றும்  பிரஷ்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஒவ்வொரு முறை உபயோகத்துக்குப் பிறகும் ஸ்டெரிலைஸ் செய்து உபயோகிக்க வேண்டும்.
  • அடிக்கடி மேக்கப் போட வேண்டியிருப்பதால், சருமத்தின் ஊட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள, நரிஷிங் ஃபேஷியல் மற்றும் ஒயிட்டனிங் ஃபேஷியல்  செய்து கொள்ள வேண்டும்.
  • உடல்வாகு என்பதும் மீடியா பெண்களுக்கு மிகவும் முக்கியம். சாதாரண உடல்வாகுள்ள ஒருவரை திரையில்பார்க்கிற போது, குண்டாகத் தெரிவார்கள்.  அதற்குக் காரணம், திரை ஒரு உருவத்தைப் பெரிதாக்கிக் காட்டும். ஆகவே, அதிலும் கவனம் வேண்டும்.

http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=2239&Cat=501