தகவல் அறியும் உரிமை ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் பயனுடையதாகும்

Posted on April 26, 2015

0


எம்.எஸ். அமீர் ஹுசைன்
ஊடகங்கள் வெளியிடுகின்ற விடயங்களில் தவறுகள், குறைபாடுகள் ஏற்படும்போது வாசகர்கள் ஊடகங்களையும் அதனை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களையும் குற்றம் சுமத்துகின்றனர். அதுமட்டுமல்லாது தவறானதும் உறுதிப்படுத்தப்படாததுமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அறிக்கையிடல்களை அல்லது வெளிப்படுத்தல்களை மேற்கொள்ளும் போது மக்கள் தவறான வழிக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர்.

குறித்த தகவலோடு சம்பந்தப்பட்ட அல்லது செய்திக்கு பாத்திரமான அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். ஊடகம் வெளிப்படுத்துகின்ற தகவல் உண்மைக்குப் புறம்பானதாக அமையும் போது அது தனிநபர்களையும் அதிகாரிகளையும் இலக்காகக் கொண்டிருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்பை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது.
தகவல்கள் மறைந்திருக்கும்போது ஊழல், மோசடிகள், முறைகேடுகள், ஒழுங்கீனங்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் மலிந்து நல்லாட்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதோடு ஜனநாயகமும் கேள்விக்குறியாகின்றது. இன்று ஒருசில ஆட்சியாளர்கள் எப்போதும் நல்லாட்சி, நேர்மை என்று பேசிப்பேசியே பொதுச் சொத்துகளை விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கத்தால் மக்களுக்காக முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை ஒப்பந்தக் காரர்களுக்கு கையளிப்பதற்கு பாரியளவில் இலஞ்சம் பெறுபவர்களாக ஒரு சில மக்கள் தலைவர்கள் மாறியுள்ளனர். அதேபோன்று அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுகின்ற போது நடைபெறுகின்ற மோசடிகள் காரணமாக திட்டங்கள் சரியான தராதரத்தில் மேற்கொள்ளப்படாத நிலை காணப்படுகின்றது.

சில திட்டங்கள் இடைநடுவில் கைவிடப்பட்டதாகவும் தாமதமடைந்த நிலையிலும் காணப்படுகின்றன. ஊடக செயற்பாடு விழிப்பாக இருக்கும் போது இத்தகைய நிலைமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சிக்கான அடித்தளத்தை இட முடிகின்றது. ஜனநாயகம் பலமடையச் செய்யப்படுகின்றது.

ஊடகம் ஜனநாயகத்தின் காவல் நாய் என்பதன் அர்த்தமும் இதுவாகும். ஊடக சுதந்திரம் பற்றி விளக்கம் கூறுகின்றபோது ஊடகங்கள் அச்சமின்றி ஆட்சியாளர்களை விமர்சிப்பதை குறிக்கின்றனர். ஆட்சியாளர்கள் இந்த ஊடக சுதந்திரம் பற்றி பேசுகின்ற போது அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் விமர்சிப்பதற்கு இருக்கின்ற சுதந்திரத்தை, ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறுகின்றனர்.
ஆனாலும் இன்றைய இலங்கையின் அனுபவத்தில் பார்க்கின்றபோது சில சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களுக்கு பிடிக்காத அவர்களால் செய்யப்படுகின்ற முறைகேடுகள் அல்லது ஆட்சி துஷ்பிரயோகங்கள் தொடர்பான தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றபோது சில சந்தர்ப்பங்களில் குறித்த விடயத்தை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் பின்தொடரப்படுவதையும் அச்சுறுத்தப்படுவதையும் காண முடிகின்றது.

அத்தகைய தகவல்களை வெளிப்படுத்துவது குற்றச் செயலாகவும் நோக்கப்படுகின்றது. இந்நிலைமைகளுக்கு காரணம் ஜனநாயக மரபுகளுக்கமைய கருத்துகளை ஏற்றுக்கொள்ள ஒரு சில ஆட்சியாளர்கள் தயாராக இல்லை என்பதாகும்.
அவ்வாறே ஊடகங்களின் தார்மிக பொறுப்பாக அமைவது உண்மைகளை வெளிப்படுத்துவதாகும். வெளிப்படுத்துகின்ற விடயங்களின் உண்மைத்தன்மைகளை அறிந்துகொள்வதற்கு ஒரு நாட்டில் இருக்கின்ற பூரண சுதந்திரத்தையே ஊடக சுதந்திரம் என்று வரைவிலக்கணப்படுத்தலாம். அதாவது ஊடகவியலாளர் ஒருவர் வெளிப்படுத்தப்போகின்ற விடயத்திற்கான தகவலை எந்தவிதமான தடைகளும் இடையூறுகளும் இன்றி பரீட்சித்துப் பார்ப்பதற்கு பூரண சுதந்திரம் இருக்குமாயின் அதுவே ஊடக சுதந்திரம் எனலாம்.
ஆனால் நாம் இன்று பார்க்கின்றபோது இலங்கையின் 1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பின் பிரிவு 10 மற்றும் 14 ஆகியவற்றில் பேச்சு, எழுத்து மற்றும் கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரத்தை அனுமதித்திருப்பதால் அதனை நாம் மனிதனின் அடிப்படை உரிமையாக கருதுகின்றோம். அதன் அடிப்படையில் மக்களுக்கு தகவல்களை அறிந்து கொள்வதற்கும் வெளிப்படுத்துவதற்குமான உரிமை என்ற அடிப்படையில் ஊடகங்கள் இயங்குகின்றன.
அரசியலமைப்பில் தகவல்பெறும் உரிமை உறுதிப்படுத்தப்படாத நிலை காணப்படுவதால் சுதந்திரமாக தகவல் பெறுவதில் பொதுமக்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் பல சிரமங்கள் உள்ளன. குறிப்பிட்ட ஒரு விடயம் தொடர்பாக அதிகாரியொருவரிடம் தகவல் ஒன்றைக் கோருகின்றபோது அந்த அதிகாரி மறுத்தால் தகவலைப் பெற முடியாது. இன்று தகவல் என்பது ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்லாது பொதுமக்களுக்கும் அவசியமானதாகும். ஊடகங்கள் வெளிப்படுத்துகின்ற விடயங்களை அறிந்து கொள்வது மட்டும் தகவல்களாக அமைவதில்லை.

பொதுமக்களுக்கும் அவர்களாக தனிப்பட்ட அடிப்படையில் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டக்கூடிய தகவல்கள் ஏராளம் உள்ளன. அவற்றை அவர்களாகவே அரச இலாகாக்களுக்கு நேரடியாகச் சென்று அதிகாரிகளை அணுகி பெறும் தகவல்களாகும்.
தகவல் பெறும் உரிமையினால் ஊடகவியலாளர்கள் அடையும் நன்மைகள்
ஊடக நோக்கில் பார்க்கின்றபோது தகவல் பெறும் உரிமை சட்டரீதியாக அனுமதிக்கப்படாத ஒன்றாக இருந்து வருவதால் ஊடகவியலாளர்களால் தகவல்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக அதிகாரிகளை நாடும் போது அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு அஞ்சுகின்றனர்.

அத்துடன் ஏற்கனவே இது தொடர்பாக அதிகாரிகளைக் கட்டுப்படுத்தும் விதமாக உள்ள அரசாங்க சுற்று நிருபங்களும் இதற்கு தடையாக உள்ளன. அதனால் அதிகாரிகள் குறித்த விடயத்திற்குரிய தகவலை வழங்க மறுக்கின்ற போது எந்தவொரு ஊடகவியலாளரும் அல்லது ஊடகமும் அதனை மீறி தகவலை பெற முடியாது.

அத்தகைய சந்தர்ப்பங்களிலே ஊடகவியலாளர்கள் தகவல்களைப் பெறவும் உறுதிப்படுத்திக்கொள்ளவும் இரகசியமான மூலங்களை நாடவேண்டியேற்படுகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக தகவலை பெற முடியாத நிலை இருப்பதால் ஊகங்களின் அடிப்படையில் அல்லது கட்டுக்கதைகளின் அடிப்படையில் பெறும் தகவல்களைக் கொண்டு ஊடகம் செய்தி அல்லது தகவலாக்கத்திற்கு முற்படுகின்ற போது அங்கே உண்மைத்தன்மையற்ற செய்திகளையும் தகவல்களையுமே மக்கள் பெற முடிகின்றது.
ஆனால் ஊடக ஒழுக்கக்கோவையின்படி ஊடகவியலாளர்கள் ஒரு செய்தியை அல்லது தகவலை வெளிப்படுத்த முன்னர் அந்த விடயத்திற்கான மூலத்தை நல்ல முறையில் பரீட்சித்து பார்க்க வேண்டும் என்றும் உண்மையை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றது. நாட்டில் சுதந்திரமாக தகவல் பெறும் உரிமை இருந்தால் மட்டுமே தகவலுக்கான மூலத்தைப் பரீட்சித்துப் பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ள முடிகின்றது.

ஆனால் இலங்கையில் தகவல் பெறும் உரிமை சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டில்லாததால் ஊடகப் பணிக்கு தகவலை உறுதிப்படுத்திக் கொள்வதில் பெரும் சிரமம் காணப்படுகின்றது. இதனால் கூடுதலாக சிரமங்களுக்கு முகம் கொடுப்பவர்கள் பிராந்திய ஊடகவியலாளர்களாவர்.
இதனால் ஊடகவியலாளர்கள் அதிகமாக நம்பத்தகுந்த மூலம் என்ற அடிப்படையில் அல்லது உறுதிப்படுத்திக்கொள்ள முடியாத மூலம் என்ற அடிப்படையில் இருந்தே தகவல்களைப் பெற வேண்டியிருக்கின்றது. அத்துடன் ஊடகவியலாளர்கள் வெளிப்படுத்துகின்ற செய்தி அல்லது தகவலுக்கு பலம் சேர்ப்பது அதற்கான மூலத்தை வெளிப்படுத்தும் போதாகும். ஆனால் செய்தி மூலத்தின் பாதுகாப்பு கருதி தேவைப்படின் அந்த மூலத்தை வெளிப்படுத்தாமலும் இருக்க முடியும் என்று ஒழுக்கநெறிக்கோவை கூறுகின்றது.

எவ்வாறாயினும் தகவலைப் பெறும் வழிமுறை அல்லது மூலம் அவசியமாகின்றது. தற்போது நடைமுறையில் இருக்கின்ற தகவல் பெறுவதற்கான தடைகள் காரணமாக எப்போதும் தகவல் மறைந்திருக்கவே முயற்சி செய்வதோடு பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகின்ற உண்மையானதும் உறுதிப்படுத்தப் பட்டதுமான தகவலை வழங்க முடியாத நிலை காணப்படுகின்றது.
தகவல் பெறும் உரிமை சட்டரீதியாக அனுமதிக்கப்பட்டிருந்தால் அதிகாரிகள் ஊடகவியலாளர்களுக்கு ஒத்துழைப்பார்கள். ஊடகவியலாளர்களால் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பும் தகவல்கள் தொடர்பாக அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரையில் அச்சமின்றி ஒத்துழைக்கும் நிலை ஏற்படும். அதுமட்டுமல்லாது பொதுமக்கள் நிர்வாக மற்றும் பொது விடயங்களில் தேவைகளின் நிமித்தம் அரச அலுவலகங்கள், காரியாலயங்களில் இருந்து கோரும் தகவல்களையும் இலகுவாகப் பெறும் நிலை ஏற்படும்.

நிர்வாக செயற்பாடுகளில் பலவீனங்கள், அசமந்தப்போக்குகள் அல்லது சீர்கேடுகள் ஏற்படும் போது அது தொடர்பாக அதிகாரிகளைச் சந்தித்து உரையாடும்போது தமக்குத் தேவையான நிர்வாக செயற்பாட்டை இலகுவாகவும் துரிதமாகவும் மேற்கொள்ள முடிகின்றது.இத்தகைய நிலை இல்லாததால் சில சந்தர்ப்பங்களில் அதிகாரிகளால் பொதுமக்களுக்கு ஆற்றவேண்டிய கருமங்கள் தாமதமடைகின்றன.

அத்தகைய சந்தர்ப்பங்களில் சில அதிகாரிகள் தம்மை நாடி வரும் பிரஜையின் இயலாமையைக் கண்டு கொண்டால் இலஞ்சம் பெறுவதற்கும் வேறு நடவடிக்கைகளுக்கும் முயற்சிக்கும் சந்தர்ப்பங்கள் நடைபெற்று வருவதையும் நாம் நடைமுறையில் காணுகின்றோம்.
இந்த நிலையை தவிர்ப்பதற்காகவே இலங்கையில் தகவல் பெறும் உரிமை சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சுதந்திர ஊடக அமைப்பு,
இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகை வெளியீட்டாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு உட்பட ஊடக செயற்பாட்டாளர்களால்
நீண்ட காலமாக விடுக்கப்பட்டு வந்தாலும் அதற்கு ஆட்சியாளர்களிடம் இருந்து உறுதியான பதில் இல்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாதிருப்பதற்கு சொல்லப்படும் காரணங்களாக அமைவது  ஊடகவியலாளர்கள் பொறுப்பற்ற முறையில் செயற்படுவார்கள் என்றும் அதனால் அரசாங்க இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும் என்பதோடு அது எதிரியிடம் சிக்கிவிடுமானால் இந்நாட்டின் இறைமைக்கும் தனதாதிக்கத்திற்கும் அச்சுறுத்தலை உண்டுபண்ணும் என்றும் கூறப்படுகின்றது.
தகவல் பெறும் உரிமை தொடர்பான சட்டத்தை நிறைவேற்றுமாறு இறுதியாக 2012 ஆம் ஆண்டின் ஆரம்ப கட்டத்தில் எதிர்க்கட்சியினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இவ்வாறான ஒரு விளக்கமே முன்வைக்கப்பட்டு அந்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே 1996 முதல் 2000 ஆம் ஆண்டு வரையில் பல சந்தர்ப்பங்களில் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் வெற்றியளிக்கவில்லை. 2001 ஆம் ஆண்டு முதல் 2003 வரையில் குறுகிய காலம் பதவியில் இருந்த ஐ.தே.க அரசாங்கம் இந்தத் தகவல் பெறும் உரிமையை சட்ட அங்கீகாரத்திற்கு உட்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் அந்த அரசாங்கம் பதவியிழந்தது. பின்னர் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
இந்தியாவில் தகவல்பெறும் உரிமைக்கான சட்ட அங்கீகாரம்
ஆனால் தெற்காசியாவில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் இந்த தகவல் பெறும் உரிமை சட்டம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். குறிப்பாக இந்தியாவில் 1999 ஆம் ஆண்டு தகவல் பெறும் உரிமையை பெறுவதற்காக முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2005 ஆம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்பின் 22 ஆவது பிரிவுக்கு திருத்தம் கொண்டுவரப்பட்ட தன் மூலம்  தகவல் அறியும் உரிமை அங்கீகரிக்கப்பட்டதோடு அந்நாட்டின் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட்டதால் இந்த விடயம் மக்களுக்கான அடிப்படை உரிமையாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
தெற்காசியாவில் ஒரு வல்லரசு நாடு என்ற அந்தஸ்தில் மதிக்கப்படுகின்ற இந்தியா, பாதுகாப்பு விடயத்தில் தனது அயல் நாடான பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட பல ஆசிய  நாடுகளதும் சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் இந்த உரிமையை சட்டரீதியாக அங்கீகரித்திருக்கின்றது.

அந்நாட்டில் அரச இரகசியம் என்ற விடயத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கி தகவல் பெறும் உரிமையையும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. அவ்வாறாயின் இலங்கையும் வெறுமனே இதற்கான கோரிக்கையை தேசிய இரகசியம் என்று புறக்கணிப்பதைவிட இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் வெளிப்படுத்தக் கூடாத தகவல்களை வகைப்படுத்தி அவற்றுக்கு அப்பால் உள்ள அரசாங்கத்தின் இறைமைக்கும் தன்னாதிக்கத்திற்கும் பாதிப்பு இல்லாத மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தகவல் பெறுவதற்கு மக்களுக்கு இருக்க வேண்டிய உரிமையை சட்டரீதியாக அங்கீகரிக்க முடியும்.
இந்தியா கூட பின்வரும் அடிப்படையில் தகவல் வழங்களுக்குட்படாத விடயங்களை வகைப்படுத்தியிருக்கின்றதை இலங்கையும் முன்மாதிரியாகக் கொள்ள முடியும்.
இந்தியாவின் பாதுகாப்பு, இறைமை, தன்னாதிக்கம் போன்றவற்றிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் விதமான தகவல்கள், நீதிமன்ற நடைமுறைகளுக்கு பாதிப்பை உண்டுபண்ணும் தகவல்கள், விஞ்ஞான பொருளாதார மற்றும் வெளிநாட்டு உறவுகளுக்கு பாதிப்பையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும் வகையிலான தகவல்கள் என்பவற்றுடன் குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும் விடயங்கள் பற்றிய தகவல்களும் பொதுமக்களால் பெற்றுக்கொள்ள முடியாது என்று வரையறை செய்யப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் இலங்கையிலும் முற்றாக தகவல் பெறும் உரிமையை மக்களுக்கு மறுப்பதைவிட வெளிப்படுத்தக்கூடாத பாதுகாப்பு மற்றும் அரசாங்க இரகசியங்கள் எவை என்பதை வரையறுத்து ஏனைய விடயங்களில் அதற்கான வாய்ப்பை வழங்குகின்றபோது ஊடக செயற்பாட்டில் மேலும் உறுதிப்பாட்டிற்கும் நம்பகத்தன்மைக்கும் வலு சேர்ப்பதாக அமையும்.

அத்துடன் ஜனநாயகம் என்ற அடிப்படையில் மக்களுக்கும் அரச நிர்வாக நடவடிக்கைகளிலான சேவைகளை இலகுபடுத்திக் கொள்வதற்கு தகவல் பெறும் வாய்ப்பு உறுதியாக இருக்கும். அத்துடன் அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மைக்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும்.
மேலும் அரசாங்கம் கோடிக்கணக்கான நிதியை அபிவிருத்தி மற்றும் மக்கள் நலனோம்பும் செயற்பாடுகளுக்கு செலவிடுவதில் இருந்து அதிகாரிகள் விழுங்கி ஏப்பம் விடுவதைத் தடுத்து முழுமையான சேவை மக்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தக்கூடியதாக அமையும்.

இதன்மூலம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மக்களுக்கு வெளிப்படையானது என்பது புலனாகும். அத்துடன் மக்கள் ஆட்சி நிர்வாகத்திலும் நாட்டின் அபிவிருத்தியிலும் கூடுதல் பங்களிப்பை செய்ய முடியும். இன்றேல் நடைமுறையில் உள்ள ஆட்சியில் வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கும் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை உருவாகலாம்.
அத்துடன் ஊடகவியலாளர்கள் அவர்களது ஊடகப்பணியை மேற்கொள்கின்ற போது தகவல் பெறுவதற்கான சுதந்திரமான வாய்ப்பு இல்லாமல் கட்டுப்பாடுகள் நிலவும் போது பெறுகின்ற விடயங்களை உறுதிப்படுத்திக் கொள்ள புலனாய்வுத் தேடல்களை மேற்கொள்ள வேண்டியேற்படுகின்றது.

ஆனால் இன்று நாட்டில் புலனாய்வுத் தேடல் தொடர்பாக போதிய அறிவு இல்லாத அதிகாரிகள் இதற்கு குறுக்காக செயற்படுகின்ற போது முரண்பாடுகள் எற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலைமைகள் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசுகின்ற ஒரு நாட்டில் ஆரோக்கியமான நிலையல்ல. ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வுத் தேடல்  பயிற்சியளிக்கின்றபோது அதைக்கூட தவறாக புரிந்துகொள்கின்ற நிலைமைகள் உள்ளன.
ஏற்கனவே வடக்கு மற்றும் தெற்கை பிரதிநிதித்துவம் செய்த ஊடகவியலாளர்களுக்கு புலனாய்வுத் தேடல் தொடர்பாக பயிற்சியளிக்கும் செயலமர்வை நடத்திய போது அதற்கு இடையூறு ஏற்படுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றன. ஊடகவியலாளர்கள் தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள மேற்கொள்ள வேண்டிய முயற்சி, அதற்கான அறிவின் முக்கியத்துவம் பற்றி அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் போதிய தெளிவை பெறவில்லை என்பது தெளிவாகின்றது. ஊடகவியலாளர்கள் இத்துறையில் சரியான பயிற்சியுடையவர்களாக இருக்கும் போதே ஊடகப் பணியை மேற்கொள்ளும்போது தவறுகள் இடம்பெறுவதைத் தடுக்க முடியும்.
மறுபுறமாக ஊடகவியலாளர்கள் இத்துறையில் பயிற்சி பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பது எவ்வாறு போனாலும் அதற்கு இடையூறு ஏற்படுத்திக்கொண்டு எவ்வாறு ஊடகவியலாளர்கள் தவறிழைக்கின்றபோது விரல் நீட்ட முடியும்.
எனவே தகவல் அறியும் உரிமை பற்றி பேசும்போது தற்போது அதற்கான சுதந்திரம் இருக்கின்றது என்று வாதிட முடியாது.

ஏனெனில் அந்த சுதந்திரம் அரசியல் யாப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டால் மாத்திரமே முழுமையாக தடைகளுக்கு அப்பால் நின்று இலகுவாக தகவல்களைப் பெற முடியுமாகின்றது. அப்போது எல்லா அரசாங்க அலுவலகங்கள், திணைக்களங்களிலும் தகவல் வழங்குவதற்கான ஒரு அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் தனியான பிரிவுகள் அமைக்கப்பட வேண்டும்.
ஊடகவியலாளர்களின் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் வழிகாட்டக்கூடிய பத்திரிகை துறைசார் ஒழுக்க நெறிக்கோவையொன்று நடைமுறையில் இருந்து வருகின்றது. இந்த ஒழுக்கக் கோவையை ஊடகவியலாளர்களும் பத்திரிகைகளும் தகவல் வெளிப்படுத்தலில் பின்பற்றுகின்றபோது அரசாங்க இரகசியம் எது? வெளிப்படுத்தக்கூடாத விடயம் எது என்று பிரித்தறியும் திறமை இருக்கின்றது என்பது வெளிப்படையாகும்.

அத்தகைய சந்தர்ப்பத்தில் தகவல் அறியும் உரிமை வழங்கப்படும் போது அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படாது.
இது தொடர்பாக இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவும் ஊடகவியலாளர்களை அறிவூட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஊடகவியலாளர்கள் ஊடகப் பணியை மேற்கொள்கின்றபோது எத்தகைய பொறுப்புணர்வை கடைபிடிக்கவேண்டும் என்ற அறிவூட்டல் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அத்துடன் “யுனிசெப்”அமைப்பின் அனுசரணையுடன் “தகவல் அறியும் உரிமை ஓர் வழிகாட்டி’ என்ற ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டல் செய்யும் வகையிலான நூலொன்றும் அண்மையில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்டது.

இந்த அறிவூட்டல்களின் போது ஊடகவியலாளர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுக்களாக அமைவது பொறுப்புணர்வை உணர்ந்து உண்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சி செய்கின்றபோது அதற்கான இலகுபடுத்தல்களை விட தடைகளே அதிகம் இருப்பதாக கூறுகின்றனர். இத்தகைய தடைகளே உண்மையான ஊடக சுதந்திரத்திற்கு தடையாக உள்ள காரணிகளாக அவதானிக்கப்படுகின்றது. ஊடக சுதந்திரம் பற்றி மேடைகளில் முழங்கினால் மட்டும் போதாது.

சுதந்திரமாக தகவல்களைப் பெறுகின்ற வாய்ப்பும் உறுதிப்படுத்தப்படும்போதே அது உண்மையான ஊடக சுதந்திரத்திற்கான நுழைவாயிலாக அமையும். அதற்குள்ள காத்திரமான ஒரே வழி தகவல் பெறும் உரிமையை அங்கீகரித்து அதற்கு அரசியல் யாப்பின் ஊடாக உத்தரவாதமளிப்பதாகும்.

– See more at: http://www.thinakkural.lk/article.php?article/oozyhyzwde2388d04863f1005281fnk5sd59b3eb688a11f95b0ae60eflpe#sthash.jlSNc6c5.dpuf

Advertisements