மே – 03 உலக ஊடக விடுதலை நாளாகும்! சிறப்புக் கட்டுரை

Posted on May 3, 2014

1


மே-03 உலக ஊடக விடுதலை நாளாகும். இந்நாளை கௌரவித்து அனுஸ்டிக்கும் முகமாக இலங்கையிலிருந்து இளம் ஊடகவியலாளர் “அ.ஈழம் சேகுவேரா”வின் சிறப்புப்பதிவு!

நாகரிகத்தின் வளர்ச்சியும், அறிவியல் உணர்வின் பெருக்கமும் மனிதனின் ஆர்வத்தை மேலும் தூண்டி விட, அதன் விளைவாக பிரபஞ்சமெங்கும் வியாபித்து நிற்கும் ஊடகத்துறை, பல்வேறு புதிய சிந்தனைகளுக்கும், இன்றைய உலகின் மாற்றமிகு மறுமலர்ச்சிக்கும் பாய்ச்சலாக அமைந்ததெனலாம்.

“அறிவித்தல்” என்கிற போது இங்கு செய்தியே முதலிடம் பெறுகின்றது. நாளாந்த செய்திகளை முழுமையாகத் திரட்டி, முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைப்படுத்தி, செய்தி வெளியிடுதலே ஓர் ஊடகத்தின் முதன்மைப் பணியாகும்.

இந்த முதன்மைப் பணியில், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட பிரச்சினைகளை – உண்மைகளை செய்திகளாக இனங்கண்டு, அவற்றை ஆழத்துருவி ஆராய்ந்து, எல்லோரதும் பார்வைக்கு வெளிக் கொணரும் ஊடக வாழ்க்கை மிகவும் சவாலானது மட்டுமல்ல, ஆபத்தும் எதிர்ப்பும் நிறைந்தது.

ஆயினும், மக்களின் உரிமைகள் பாதிக்கப்படும் போது, தேசிய உணர்வுக்கும் நலனுக்கும் பலம் சேர்த்து, இன ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, வன்முறையைத் தூண்டாமல் போராட்டம் நடத்தி, நீதியை நிலை நாட்ட ஊடகத்துறை முனைய வேண்டும். அரசியல் மட்டுமன்றி, அனைத்துத் துறைகளிலும் சட்டங்கள் மீறப்படுவதையோ, மக்களை ஏமாற்றும் நடவடிக்கைகளையோ, செய்கைகளையோ, ஊடகத்துறை ஒரு பொழுதேனும் கைகட்டி நின்று வேடிக்கை பார்த்தலாகாது.

சர்வதேச மனித உரிமைப் பிரகடனத்தின் 19 ஆ ஆம் உறுப்புரையில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரத்துக்கான தங்களின் உரிமையை மக்கள் ஊடகங்கள் மூலம் பிரயோகிக்க முடியும். சுதந்திரமான பேச்சும், நம்பத்தகுந்த ஊடகத்துறையும் எங்கிருக்கின்றனவோ, அங்கெல்லாம் பொதுமக்கள் தமது சொந்த நலன்களுக்கு இணங்க நன்கு அறிவூட்டப்பட்ட தீர்மானங்களை எடுக்கக் கூடியவாறான சூழல் இருக்கிறது. நம்பத் தகுந்த செய்தியிடல் தான், அநேக நாடுகளின் அரசியல் யாப்புகளிலும், சட்டங்களிலும் ஊடகத்துறைக்கென்றே ஒரு சிறப்பான தனியிடத்தை பெற்றுக் கொடுத்திருக்கின்றது.

மக்களாட்சி முறையாக தழைத்தோங்குவதற்கும், முழுநிறைவு பெறுவதற்கும் ஊடகங்கள் நம்பத்தகுந்தனவாக மட்டுமன்றி, பன்முகப்பட்டதாகவும் இருத்தல் வேண்டும். அது சமுதாய தரத்தை உருவாக்குவதிலும், உயர்த்துவதிலும் வலிமையுடையது மட்டுமல்லாமல், சமூகக் கட்டுபாடுகளிலும் அதுவே ஆதிக்கமும் செலுத்துவதாக இருத்தல் வேண்டும்.

செய்திகளை வெளியிட்டு விளக்குதலுடன் மட்டும், ஓர் ஊடகத்தின் பணி முற்றுப்பெற்று விட்டதாக கருதிவிட முடியாது. செய்தி அறிவிப்பு – அறிவுறுத்தல் என்பவற்றுக்கு அப்பால் பொதுமக்கள் கருத்தை உருவாக்கும் பணியினையும் ஊடகங்கள் செய்தாக வேண்டும். மக்களாட்சியின் “உயிர்மூச்சு” என்று சொல்லப்படுகின்ற ஊடகத்துறை, எந்த நாட்டில் தன்னுடைய பணியினைச்செய்ய முடியாமல் கட்டுப்பட்டுக் கிடக்கிறதோ, அங்கெல்லாம் மக்களாட்சி முடங்கிக் கிடப்பதாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது.

உலகெங்கும் நடந்த விடுதலைப்போர்களிலே “எழுதுகோல்களே துப்பாக்கிகளாகவும், எழுத்துகளே குண்டுகளாகவும்” இருந்திருக்கின்றன. அதனால் தான் பல நாடுகளிலும் நூற்றுக்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் ஆட்சியாளர்களினாலும், ஆயுததாரிகளினாலும் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்கள். கடுமையாக தாக்கப்பட்டுள்ளார்கள். அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

கடந்த பத்து வருட காலப்பகுதியில் சர்வதேச ரீதியாக ஆயிரத்துக்கும் மேல்பட்ட ஊடகவியலாளர்களும், ஊடகப் பணியாளர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். சர்வாதிகார ஆட்சியாளர்கள் கொடுமையான அடக்குமுறைகளையும், ஆயுத வன்முறைகளையும் கட்டவிழ்த்து விட்டு, வாய்ப்பூட்டும் கைப்பூட்டும் போட முனைந்த போதெல்லாம், அடிமை விலங்கொடித்த சம்மட்டிகளாகவும், கடப்பாறைகளாகவும் ஊடகங்கள் இருந்திருக்கின்றன.

சில நிறுவனங்களும், பிரமுகர்கள் மற்றும் பிரபலங்களும் தாம் சார்ந்த எதிர்மறையான செய்திகள் இருட்டடிப்பு (மறைப்பு) செய்யப்பட்டு, தம் சுயமரியாதை தொடர்பில் நல்ல செய்திகளே விரிவாக வெளிவர வேண்டும், தம் நிலை தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் கட்டியெழுப்பப்படுதல் வேண்டும் எனும் நோக்கத்தில், செய்தியாளர்களுக்கு அறுசுவை விருந்துகள், பரிசுகள், அன்பளிப்புகள் வழங்கி மகிழ்விக்கும், கௌரவிக்கும் கபடத்தனத்தை கடைப்பிடிப்பதுண்டு. நல்ல ஊடகவியலாளர்கள் இலஞ்சங்களை ஏற்றுக் கொள்வதில்லை. அற்ப சலுகைகளுக்கு விலை போவதில்லை. அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகளினதோ இன்றேல், பலம் பொருந்திய சக்திகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவோ ஒரு ஊடகவியலாளன் செயல்படுதல் தகாது.

* நடப்பவைகளை கண்காணித்து மக்களுக்கு தெளிவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தல்.
* அரச தலைவர்கள், அரச அரசசார்பற்ற நிறுவனங்கள், சில் சமூக அமைப்புகளின் செயல்பாடுகளை அவதானித்தல்.
* மக்களுக்கான அபிவிருத்தி, மக்களுக்கான பணி என்கிற போர்வையில் மக்களையும், சமுகத்தையும் அழிக்க – சிதைக்க முயலுகின்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி விழிப்பூட்டல் – வலுவூட்டல்.
* மக்களை அபிவிருத்தி இலக்கோடு வழி நடத்திச்செல்லல். (அனைத்து மக்களையும் அபிவிருத்தியின் செயல்பாட்டாளராக்குதல், அவர்களது அபிவிருத்தித்தேவைகளை பூர்த்தி செய்ய பங்களித்தல்.)

“நடப்பவற்றில் புதுமையானவையும் வழமைக்கு மாறானவையும் செய்திகளாகின்றன.” நிலைமாறும் இந்த உலகில் நினைவழியாத்தடையங்கலாக நிலையாக(வரலாறாக) செய்திகளைப்பதித்து விட்டு, காலம் எமை விரைவாக கடந்து செல்கிறது. இந்த கால வேகத்துக்கேற்ப ஈடுகொடுத்து பயணிக்க மிகச்சிறந்ததொரு வழி ஊடகத்துறையன்றி வேறொன்றில்லை. இருந்த போதிலும்,

* இன முன்னேற்றத்தில் துடிப்பு.
* நடப்புப் பிரச்சனைகளில் அக்கறை.
* எதிர்கால தேசம் குறித்த பரந்த சிந்தனை.
* மக்களை ஒன்றிணைத்துத் திட்டமிடல், அவர்களின் அத்தியாவசியத்தை உணர்ந்து செயல்படுதல்.

இவற்றையே நோக்கமாகக்கொண்டு செயலாற்றும் ஊடகத்துறைக்கான வாய்ப்புகள் இலங்கையில் குறைவடைந்து வருகின்றமை கவலைக்குரியதே.

 

http://www.tamilcnnlk.com/archives/277357.html

Advertisements