நூலகம் எரிந்ததற்காக அழுது கொண்டிருக்கும் நாம் புத்தகங்களை வாசிக்க மறந்து விட்டோம்

Posted on February 28, 2014

0


உங்களுக்கு ஒரு வேடிக்கை தெரியுமா? உண்மையில் அது வேடிக்கையல்ல. வேதனையான உண்மை.

நூலகம் எரிந்ததற்காக அழுது கொண்டிருக்கும் நாம் புத்தகங்களை வாசிக்க மறந்து விட்டோம். புத்தகங்களை வாசிக்க மறந்ததால், புத்தகங்களைப் பற்றித் தெரியாது விட்டோம். புத்தகங்களைப் பற்றித் தெரியாமல் இருப்பதால், உலகத்தைப் பற்றியே தெரிய மறந்தோம்.

எனவேதான் எப்போதும் நாங்கள் ஏமாற்றப்படுவோராகவும் தோற்றுக்கொண்டிருப்போராகவும் இருக்கிறோம்.

புத்தகங்களை வாசிக்க மறந்தவர்கள், புதிதாகச் சிந்திக்க முடியாது. புதிதாகச் சிந்திக்க முடியவில்லை என்றால், புதிய வாழ்க்கை கிட்டாது. புதிய வாழ்க்கை கிட்டவில்லை என்றால், புதிய மாற்றங்கள் நிகழாது. புதிய மாற்றங்கள் நிகழவில்லை என்றால் புதிய முன்னேற்றம் ஏற்படாது. புதிய முன்னேற்றம் ஏற்படவில்லையென்றால் புதிய வளர்ச்சி; இல்லை. புதிய வளர்ச்சியைப் பெறாத மக்கள் வரலாற்றிலிருந்து காணாமற் போய்விடுவர்.

ஆகவே பின்தங்கிய சமூகமாக, பிரச்சினைகளிலிருந்து  விடுபட முடியாத மக்கள் கூட்டமாக, உலக ஓட்டத்தை மிஞ்ச முடியாதவர்களாக இன்று ஈழத்தமிழர் நாங்கள் இருக்கிறோம்.

எனவேதான் சிதறிக்கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டமாக இன்றிருக்கிறோம். இது வரலாற்றிலிருந்து அழிந்து போவதற்கு – மறைந்து போவதற்கான அடையாளக்குறியாகும்.

எனவேதான்,நூலகம் எரிந்ததற்காக அழுது கொண்டிருப்பவர்களாகிய நாங்கள் புத்தகங்களை வாசிக்க மறந்தவர்களாக – புத்தகங்களை வாங்குவதற்குப் பின்னிற்பவர்களாக இருக்கிறோம்.

‘நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டவர்கள். பென்னாம் பெரிய பண்பாட்டை உடையவர்கள். வீரர்கள். சூரர்கள்’ என்றெல்லாம் பீற்றிக் கொள்வதற்குப் பதிலாக இன்று பலமாக இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும். எப்படி இருக்க வேண்டும். எப்படிச் செயற்பட வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

அட நாசமறுப்பே!

அதைச் சிந்திப்பதற்கு நாங்கள் நாலு விடயங்களை அறிந்திருக்க வேண்டுமே. அந்த நாலு பத்து விடயங்களை அறிய வேண்டுமானால், நாங்கள் நாலு பத்துப் புத்தகங்களை வாசிக்க வேண்டுமே.

ஆனால், உலகத்திலே தமிழர்களுக்கு இப்பொழுது கடினமான காரியமாக இருப்பது வாசிப்புத்தான்.

வாசிப்பைத் தவிர அவர்களை நீங்கள் வேறு எதைச் செய்யச் சொன்னாலும் அதைத் தாராளமாகச் செய்வார்கள்.

உயிரைக் கொடுக்கச் சொன்னாலும் சட்டென்று உடனடியாகவே அதைக் கொடுத்து விடுவார்கள்.

ஆனால், மறந்தும் நீங்கள் அவர்களைப் பார்த்து ‘வாசியுங்கள், ஒரு புத்தகமாவது வாங்கிப் படியுங்கள்’ என்றால்… அவ்வளவுதான். முடியாது, முடியவே முடியாது.

அதற்குப் பதிலாக அவர்கள் உயிரையே விட்டுவிடுவார்கள்.

வாசிப்பை ஊக்கப்படுத்துவதற்கோ, அறிமுகப்படுத்துவதற்கோ ஆசிரியர்களும் இன்றில்லை. பல்கலைக்கழகமும் தயாரில்லை. பெற்றோரும் ஆர்வமெடுப்பதில்லை. தாங்களாகத் தேடிப் படிக்கும் விருப்பத்தை இளையவர்களும் கொண்டிருப்பதில்லை. இளையவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களிடமும் இந்தப் பழக்கம் அருகி விட்டது.

‘வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்’ என்று சொன்ன காந்தியைத் தூக்கி எல்லோரும் குப்பைக் கூடைக்குள் போட்டு விட்டார்கள்.

‘ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன’ என்ற மாவோ இப்பொழுது தமிழர்களிடம் அகப்பட்டால் மின்கம்பத்தில் கட்டிச் சுடப்படுவார்.

‘அறிவே இன்றைய உலகத்தின் ஆயுதம். இது அறிவின் யுகம்’ என்யெல்லாம் யாராவது சொல்வதாக இருந்தால், தயவு செய்து உங்கள் தலையை மறைத்துக் கொள்ளுங்கள்.

நம்ம ஆட்களுக்கு இந்த மாதிரி  விசயமெல்லாம் பிடிக்காது. அவர்கள் அழுது வடியும் தொலைக்காட்சிகளில் பாலூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டுக்கொரு தடவை வரும் நூலக எரிப்பு நாளை நினைவூட்டிக்கொண்டால் போதும். நாங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களாகி விடுவோம். அறிவாளிகளாக காட்டியும் கொள்வோம்.

ஏனென்றால், நூலக எரிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் அல்லவா!

http://thenee.com/html/280214-5.html

Advertisements