ஒரு ஊடகவியலாளன் பற்றி…..

Posted on December 27, 2013

0


ஒரு ஊடகத்தை ஆரம்பிப்பதாக இருந்தால் பெருந்தொகைப் பணத்தை முதலிட்டு பலத்த சிரமங்களின் மத்தியில்தான் ஆரம்பிக்க முடியும் என்ற நிலை இன்று இலத்திரனில் ஊடகத்தின் மிக பிந்திய வரவான இணைத்தள ஊடகம் அறிமுகம் செய்யப்பட்டதன் மூலம் தலைகீழாக மாற்றப்பட்டிருக்கிறது. இணைய ஊடக பரப்பிற்குள் நிராஜ் டேவிட் தனது படைப்புக்களை வெளிக்கொண்டுவருவதற்காக ஆரம்பித்திருக்கும் முயற்சிதான் இது.

தன்னுடைய படைப்புக்களை வெளியிடுவதற்கு என நிராஜ் டேவிட் எடுத்திருக்கும் முயற்சியை ஒரு புதிய பரிணாமமாகவே நான் பார்க்கிறேன். இன்று இணையத்தளம் என்றவுடன் எமக்கு முதலில் தெரிவது செய்தி இணையத்தளங்கள்தான். அவைதான் இன்று மலிந்து கிடக்கின்றன.  அறிவியல்சார் விடயங்களை தாங்கிவரும் இணையத்தளங்கள் மிகக்குறைவே. நிராஜ் டேவிட் தன்னுடைய படைப்புக்களை தொடர்ச்சியாக வெளியிட இருக்கும் இந்த முயற்சியானது தமிழ் இணைப்பரப்பில் மலிந்து கிடக்கும் செய்தி ஊடகம் என்கின்ற வட்டத்தையும் கடந்து அறிவியல்சார் ஊடகப்பரப்பிலேயே அதனை அடக்க முடியும்.

இந்த முயற்சி என்பது கூட இலகுவான விடயமும் அல்ல. துறைசார் கல்வி அறிவு, பட்டறிவு, அனுபவம், ஆகியவற்றின் ஊடாகவே இதில் வெற்றி பெற முடியும். அந்த ஆற்றலும் அறிவும் நிராஜ் டேவிட் அவர்களுக்கு உண்டு என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

நிராஜ் டேவிட் என்ற பெயர் இன்று தமிழ் ஊடகப்பரப்பில் முக்கியமாக ஈழத்திலும், புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலும் ஏன் தமிழகத்திலும் கூட நன்கு அறியப்பட்ட பெயர்.

ஊடகத்துறையில் இருக்கும் ஆர்வம் எழுத்துறை ஆர்வம் காரணமாக சிலர் ஊடகத்துறைக்குள் பிரவேசிக்கின்றனர். சிலர் ஊடகத்துறைசார் கல்விஅறிவைப் பெற்று இத்துறையில் பிரவேசிக்கின்றனர். 1980களின் முன் ஊடகத்துறையில் பிரவேசித்தவர்களில் 99வீதமானவர்கள் அத்துறையில் இருந்த ஆர்வம் காரணமாக இணைந்து கொண்டனர். அப்படி இணைந்து கொண்ட சிலர் ஊடகத்துறையில் மேற்பட்டபடிப்பை முடித்து அத்துறையில் ஆழமாக கால் பதித்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் சிவகுருநாதன், சிவநேசசெல்வன் போன்றவர்கள்.

நிராஜ் டேவிட் இன்று ஒரு ஊடகவியலாளராக அறியப்பட்டாலும் ஆரம்பத்தில் இலத்திரனியல் பொறியில் துறையில் பட்டப்படிப்பை முடித்துக்கொண்டு அந்தத்துறையில் பணியாற்றிக்கொண்டிருந்த பொழுது ஊடகத்துறையில் இருந்த ஆர்வம் காரணமாக தனது 21ஆவது வயதில் (1990களில்) யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் மட்டக்களப்பு செய்தியாளராக ஊடகத்துறைக்குள் கால் வைத்தார். அதன் பின்னர் தினபதி, தினகரன், The Weekend Exptess, சுடர்ஒளி,  இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தானபம் போன்ற உள்ளுர் ஊடகங்களுக்கு மட்டக்களப்பு செய்தியாளராகவும், சரிநிகர், தினக்குரல், சுடர் ஒளி, கனடா உலகத் தமிழர், பரிஸ் ஈழநாடு போன்றவற்றின் பத்தியாளராகவும் பணியாற்றினார்.
உதயன், தினகரன் என பல தினசரி பத்திரிகைகளுக்கு பிராந்திய செய்தியாளராக இருந்தாலும் நிராஜ் டேவிட்டை புடம்போட்டு காட்டியது சரிநிகர், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த அவரது கட்டுரைகள் தான். யார் இந்த நிராஜ் டேவிட் என பலரையும் திரும்பி பார்க்க வைத்த எழுத்துக்கள் அவை.

1990களின் பின் இலங்கையில் மட்டக்களப்பு ஊடகத்துறை பரப்பு முக்கியத்துவம் பெற்றிருந்தது. இலங்கையின் தமிழ் பிராந்தியங்களில் முக்கிய புள்ளியாக அமைந்திருந்த யாழ் குடாநாடு வெளிஉலக தொடர்புகள் துண்டிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட போது இலங்கையின் தமிழ் பிராந்தியங்களின் மற்றொரு பகுதியான மட்டக்களப்பு பிராந்தியம் ஊடகத்துறையில் புதிய பரிமாணத்தை பெற்றுக்;கொண்டது.
இலங்கையின் தமிழ் ஊடகத்துறையை மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளில் உருப்பெற்ற தமிழ் வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகளையும் மட்டக்களப்பு ஊடகவியலாளர்களே ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலம். அந்த தமிழ் ஊடக கடற்பரப்பில் பெரும் முதலைகளாக மட்டக்களப்பிலிருந்து செயற்பட்ட ஊடகவியலாளர் இருந்தார்கள். அத்தகைய போட்டி நிறைந்த ஊடகப்பரப்பில் எதிர்நீச்சல் அடித்து வெற்றி பெறுவது என்பது இலகுவான காரியம் அல்ல. ஆனால் நிராஜ் டேவிட் அதில் வெற்றி பெற்றார்.

அந்த வெற்றிக்கு சரிநிகர், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்த அவரது வித்தியாசமான எழுத்துக்கள் தான் காரணம். எல்லோரும் அரசியல் பிரச்சினைகளையும் போர் செய்திகளையும் எழுதிக்கொண்டிருக்க நிராஜ் டேவிட் அந்த பக்கம் போகாமல் வேறு ஒரு திசையில் தன் பயணத்தை திரும்பினார். அந்த நேரத்தில் அரசியல் மற்றும் போர் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசித்து சலிப்படைந்து போன வாசகர்களை திரும்பிப் பார்க்க வைத்தன நிராஜ் டேவிட் எழுத்துக்கள்.

நாளாந்த சமூகப்பிரச்சினைகளை அவர் வெளிக்கொண்டுவந்தார். முக்கியமாக சமூகத்தில் பெண்கள் பிரச்சினை, சமூகச் சீரழிவுகள், குழந்தைத்தொழிலாளர் பிரச்சனை போன்ற சமூகப்பிரச்சினைகளை புலனாய்வு தகவல்கள் மூலம் அவர் வெளிக்கொண்டு வந்த விதம் பலராலும் வியந்து பேசப்பட்டது.
தினக்குரல் வாரமஞ்சரி ஆசிரியராக இருக்கும் என்னுடைய நண்பர் பாரதியை ஒரு முறை நான் சந்தித்த போது அவர் கூறிய விடயம் இன்னும் ஞாபத்தில் இருக்கிறது. நாங்கள் இருக்கும் போது எதற்காக மட்டக்களப்பிலிருந்து புதிதாக ஒருவரை தினக்குரலுக்குள் கொண்டுவருகிறீர்கள் என சில சிரேஷ்ட உடகவியாளர்கள்; எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஆனால் நிராஜ் இப்போது எழுதும் விடயங்களை ஏன் இவர்களால் எழுத முடியாமல் போனது. ஒரு வெற்றிடம் இருந்ததால்தான் நிராஜின் வரவு அவசியமானது என அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன் என பாரதி கூறியிருந்தார்.
உண்மைதான் பலராலும் கவனிக்கப்படாது இருந்த சமூகப்பிரச்சினைகளை மிக நுணுக்கமாக வெளிக்கொண்டு வந்ததன் மூலம் மட்டக்களப்பு ஊடகப்பரப்பில் நிராஜ் டேவிட் என்ற பெயர் பிரபல்யம் பெற்றது.
நிராஜ் டேவிட்டின் ஊடகப்பயணத்தின்பொழுது ஆபத்தான பெரும் நெருப்புக்களையும் அவர் கடந்து வந்தார். 1990களின் பின் கப்டன் முனாஸ் என்ற பெயரை கேட்டால் மட்டக்களப்பே நடுங்கும் நிலை காணப்பட்டது. அந்த முனாஸ் என்ற முஸ்லீம் பெயரில் சிறிலங்கா இராணுவ புலனாய்வு பிரிவில் இருந்து கொண்டு மட்டக்களப்பு மக்களை நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கும் இந்த நபர் யார்? அவர் ஒரு முஸ்லீமா அல்லது முஸ்லீம் பெயருக்குள் மறைந்து கொண்டு இக்கொலைகளை புரிகிறாரா என்று விலாவாரியாக எழுதிய கட்டுரை மட்டக்களப்பில் பெரும் பரப்பையும் பல உண்மைகளையும் வெளிக்கொண்டுவந்தது. அதனால் நிராஜ் டேவிட் உயிராபத்தையும் எதிர்நோக்கியிருந்தார் என்பதை நான் அறிவேன்.
தேடல், துணிச்சல், ஆற்றல், அறிவு, இவை சிறந்த ஊடகவியலாளனுக்கு இருக்கும் சிறப்பு அம்சங்கள். இவை அனைத்தும் நிராஜ் டேவிட்டிடம் இருந்ததை அவரது கட்டுரைகள் வெளிப்படுத்தி நின்றன.

இலத்திரனியல் பொறியில் துறையில் பட்டப்படிப்பை முடித்திருந்த போதிலும் அவர் பின்னர் சுவீடன் கல்மார் பல்கலைக்கழகத்தில் ஊடகதுறை பட்டப்படிப்பை முடித்துக்கொண்டார்.

அத்தோடு உளவியல், மனித உரிமைகள் போன்ற துறைகளில் அவர் மேற்கொண்ட  கற்கைகளும் ஊடகத்துறையில் உச்சத்தை நோக்கிய அவரது பயணத்திற்கு மிகுந்த உதவியாக இருந்தது.

நிராஜ் டேவிட் அவர்களிடம் எனக்கு பிடித்த ஒரு விடயம். ஒரு விடயத்தை எடுத்துக்கொண்டால் அதை நுனி புல் மேய்வது போல இருந்து விடாது ஆழமாக ஆராய்ந்து எழுதும் அந்த ஆற்றல்.

இந்தியாவின் துரோகங்கள் பற்றி தமிழ் அலை பத்திரிகையில் நிராஜ் டேவிட் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்த விடயத்தை விரிவாக தொடராக பரிஸ் ஈழநாடு பத்திரிகைக்கு எழுதுமாறு நான் அவரிடம் கேட்டிருந்தேன். 2002ஆண்டு காலப்பகுதியில் அத்தொடரை நிராஜ் எழுத ஆரம்பித்தார். 10ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த விடயங்கள் பற்றி அவர் இன்றும் எழுதிவருவதற்கு அவரின் ஆழமான தேடல்கள்தான் காரணம்.

இன்றைய செய்திகள், நாளைய வரலாறாகிறது. அந்த வரலாறு சரியாக பதியப்பட வேண்டும். இல்லையெனில் பிழையான வரலாறு பதியப்பட்டு விடும். நிராஜ் டேவிட் இன்று எழுதி வரும் அவரின் தொடர்கட்டுரைகள் அனைத்தும் நாளைய வரலாறுகளாகும்.
அவை சரியாக பதியப்பட வேண்டும், பேணப்பட வேண்டும்,

நிராஜ் டேவிட் ஆரம்பித்திருக்கும் இந்த முயற்சி இன்று படித்து விட்டு நாளை மறந்து போகும் செய்திகள் அல்ல.
இந்த தேடல்கள், ஆய்வுகள், அனைத்தும் எதிர்காலச் சந்ததியினருக்கும் ஈழவிவகாரத்தில் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கும் மிகப்பெரிய பொக்கிஷமாக இருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

ஒரு குழந்தை தவழ்ந்து, எழுந்து நடந்து ஓடி விளையாடி, சாதனைகளை படைத்து நிற்கின்ற போது ஒரு தந்தைக்கு இருக்கும் பூரிப்பையும் வெளியில் சொல்ல முடியாத அகமகிழ்ச்சியையும் நிராஜின் வளர்ச்சியில் சாதனைகளில் நான் காண்கிறேன்.
வாழ்த்துக்கள்
அன்புடன்


இரா.துரைரத்தினம்
சிரேஷ்ட ஊடகவியலாளர்

Advertisements