ஊடக வட்டாரத்தில் பால்நிலை சமத்துவம்

Posted on October 9, 2013

0


இலங்கையில் மனித உரிமைகள் பற்றி செய்தி அறிக்கையிடல் : ஊடக வட்டாரத்தில் பால்நிலை சமத்துவம்

லங்கையில் மனித உரிமைகள் தொடர்பான செய்தி அறிக்கையிடல் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற செயலமர்வில் துஷியந்தினி கனகசபாதிபதிப்பிள்ளை வழங்கிய “ ஊடக வட்டாரத்தில் பால்நிலை சமத்துவம் ” என்ற கருத்து முன்னிலைப்படுத்தலின் முழு எழுத்து வடிவம்:

ஆபிரிக்க பெண் ஒருவரின் பாடல் ஒன்றை பாடுவதனூடாக எனது கருத்து முன்னிலைப் படுத்தலை ஆரம்பிக்க விழைகின்றேன். அந்தப் பாடல் வருமாறு:

நான் ஒரே வேண்டுகோளையே முன்வைக்கின்றேன்
எனக்கு அந்தத் தேவை இருந்த போதிலும்..
நான் பணம் தேவையென வேண்டவில்லை
நான் இறைச்சி அவசியமென வேண்டவில்லை
நான் வேண்டுதலெல்லாம்
எனது வழியில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைக் கற்களை
நீக்க வேண்டும் என்ற ஒன்று மட்டுமே! – ஆச்சோலி கவிதை தொகுப்பின் லாவினோ பாடல் – ழூ ஒகோட் பீபிட்டிக்

மேற்குறிப்பிட்ட பாடலைப் போன்றே மூன்றாம் மண்டல நாடுகளில் பெண்கள் புறக்கபணிக்கப்பட்டுள்ளனர். உலகில் அதிக சனத்தொகைப் பரம்பலைக் கொண்ட நாடுகளில் இலங்கை 53 ஆவது இடத்தை வகிக்கின்றது. மொத்த சனத்தொகையில் பெண்களாகிய நாம் 54 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம். இலங்கையில் மொத்தமாக 20 மில்லியன் பெண்கள் காணப்படுகின்றனர்.

ஆசிரிய தொழில், வங்கித்துறைசார் தொழில் மற்றும் ஏனைய தொழில் துறைகளுடன் ஒப்பீடு செய்யுமிடத்து ஊடகத்துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் சொற்பமான அளவாகக் காணப்படுகின்றது.

பால்நிலை சமத்துவம் தொடர்பான உலக வரிசைப் படுத்தலில் இலங்கை 88 ஆவது இடத்தை வகிப்பதாக இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, ஊடக சேவையாளர் கூட்டமைப்பு, இலங்கை முஸ்லிம் ஊடகபப் பேரவை, தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியன கூட்டாக வெளியிட்டுள்ள கையேட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பால் நிலை சமத்துவம் தொடர்பான பட்டியலில் மொத்தமாக 177 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. சார்க் பிராந்திய நாடுகளில் இலங்கை பால்நிலைசார் அபிவிருத்தி குறிகாட்டி (Gender related Development Index-ஜீ.டி.ஐ.) களில் சாதகமான பெறுதியை பதிவு செய்துள்ளது.

ஏனைய அண்டை நாடுகளான இந்தியா 128ம் நிலையிலும், பாகிஸ்தான் 136ம் நிலையிலும், பங்களாதேஷ் 140ம் நிலையிலும் காணப்படுவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் செயற்பாடுகளை பொருத்தமட்டில் இலங்கையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைந்தளவில் காணப்படுவதாக குறித்த ஊடக கூட்டமைப்பினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1960ம் ஆண்டு உலகின் முதலாவது பெண் பிரதமராக அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்க தெரிவு செய்யப்பட்ட போதிலும், 4.9 வீதமான பெண்களே இலங்கை பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரே சந்தர்பபத்தில் நாட்டின் முதன்மையான அதிஉயர் பதவிகள் இரண்டையும் பெண்கள் வகித்த முதலாவது ஜனநயாக நாடாக இலங்கை கருதப்படுகின்றது.

ஜனாதிபதியாக திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், பிரதமராக அமரர் திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவும் பதவி வகித்தனர். இவர்கள் இருவருமே ஜனநாயக ரீதியில் நடைபெற்ற தேர்தல்களின் மூலம் தெரிவு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியல் வரலாற்றில் முன்மாதிரியான உயர்பதவிகளை குறித்த இருவரும் வகித்த போதிலும் 10 வீதமான பெண்களே அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்றனர்.

21 வீதமமான பெண்களே இரஜாதந்திர மற்றும் சிரேஸ்ட உயர் பதவிகளை வகிக்கின்றனர் என்பது நோக்கத் தக்கது.

யாழ்ப்பாண குடாநாட்டில் மட்டும் சுமர் 25,000 விதவைப் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு உணவு வழங்குவதற்கும், வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கும் முடியாத நிலையில் அல்லலுறுவதாக அண்மைய ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் இலங்கையில் 22 வீதமான குடும்பங்களில் பெண்களே வீட்டுத் தலைமைப் பொறுப்பை வகிக்கின்றனர்.

நாங்கள் இலங்கையின் பல்வேறு ஊடக அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்களில் அங்கம் வகித்த போதிலும், பெண் ஊடகவியலாளர்கள் என்ற வகையில் எமக்னெ ஓர் தனியான அமைப்பை உருவாக்க வேண்டியதன் உடனடித் தேவையை நாம் உணர்ந்தோம்.

இந்த உந்துதலின் பலனாக சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய மூன்று இனங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பென்தொட்டையில் கூடி “இலங்கை பெண்கள் ஊடக வலையமைப்பு” என்ற ஓர் அமைப்பை உருவாக்கினோம்.

துடிப்பு மிக்க உழைக்கும் பெண் ஊடகவியலாளர்கள் எமது அமைப்பில் அங்கம் வகிக்கின்றனர்.

2008ம் ஆண்டு மே மாதம் “இலங்கை பெண் ஊடகவியலாளர் வலைமைப்பைச் சேர்ந்த நாம் ஓரே கூரையின் கீழ் கூடி “பால்நிலை” குறித்து ஆராய்ந்தோம்.

இந்த சந்திப்பின் போது அமைப்பின் உறுப்பினர்களால் 3 கூட்டு இணைப்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஊடகங்களில் பால்நிலை சமத்துவம் என்ற தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் இந்த செயலமர்வு நடைபெற்றது. பெண் ஊடகவியலாளர்கள் அலுவலகங்களிலும், வெளிக்களங்களிலும் எதிர்நோக்கும் இடர்கள் குறித்து நுனுக்கமாக ஆராயப்பட்டது.

பெண் ஊடகவியலாளர்கள் பொதுவாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து திட்டவரைவொன்று தயாரிக்கப்பட்டது.

நாங்கள் ஐந்து பிரதான பிரச்சினைகளை இனங்கண்டு பின்வருமாறு பட்டியல் படுத்தியுள்ளோம்.

1. ஊடக நிறுவனங்கள் மற்றும் ஒன்றியங்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாகக் காணப்படுகின்றது

எமது இலக்கு: ஊடக அமைப்புக்கள் மற்றும் ஒன்றியங்களில் பெண்களின் காத்திரமான பங்களிப்பை அளவுசார் ரீதியாகவும், தரம்சார் ரீதியாகவும் அதிகரித்தல்

2. பெண் ஊடகவியலாளர்களிடம் பால்நிலை அறிவு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக போதிய விழிப்புணர்வும் பயிற்சியும் காணப்படாமை

எமது இலக்கு: தலைமைத்துவ பயிற்சிகளை வழங்குவதனூடாக பெண் ஊடகவியலாளர்களின் ஆளுமையை விருத்தி செய்தல்

3. பால்நிலை தொடர்பான செய்தி அறிக்கையிடலில் ஒரே மாதிரியான தன்மை காணப்படுதல்

எமது இலக்கு: பால்நிலை தொடர்பான செய்தி அறிக்கையிடலை மேம்படுத்தல்

4. பெண் ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பு

எமது இலக்கு: பெண் ஊடகவியலாளர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்தல்.

5. பாலியல் துன்புறுத்தல்கள்

எமது இலக்கு : பாலியல் துன்புறுத்தல்கள் அற்ற ஓர் தொழில் சூழ்நிலையை உருவாக்குதல்

உலக சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாகும். எனினும், 21 வீதமான பெண்கள் பற்றிய செய்திகளே ஊடகங்களில் வெளியிடப்படுவதாக உலக ஊடக கண்காணிப்பு திட்டம் (Global Media Monitoring Project-ஜீ.எம்.எம்.பீ) 2005ம் ஆண்டு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் அரசாங்கம் போன்ற கடினமான துறைசார் செய்திகளில் மிகக் குறைந்தளவே (14%) பற்றிய செய்திகள் வெளியாகின்றன. பொருளாதாரத் துறையை பொருத்தமட்டில் 20வீதமான செய்திகளே பெண்கள் பற்றிய செய்திகளாக காணப்படுகின்றன.

அநேக சந்தர்ப்பங்களில் பெண்கள் மென்மையான செய்திகளில் அதிகம் விபரிக்கப்படுகின்றனர். கலைத்துறை அல்லது விசேட அதிதிகள் என்ற ரீதியில் 23 வீதமான செய்திகள் வெளியிடப்படுகின்றன.

மரபுகளை மீறிச் சவால்விடக்கூடிய பெண்கள் பற்றிய செய்திகள் வெறும் 3 வீதமே வெளியிடப்படுவதாகவும், 96 வீதமான செய்திகளில் பால்நிலை சமத்துவம் அல்லது முரண்பாடுகள் பற்றி வெளிக்கொணரப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

தமிழ் வார இதழ் ஒன்றில் பத்தி எழுத்தளாராக கடமையாற்றும் பெண் ஊடகவியலாளர் தொடர்பான சம்பவமொன்றை மேற்கோள் காட்டுவது சாலச் சிறந்ததென நான் கருதுகின்றேன்.

குறித்த பெண் ஊடகவியலாளர் அரசியல் நடப்பு விவகாரங்கள் பற்றிய கட்டுரைகளை பத்திரிகையில் வெளியிட்டு வருகின்றார். இந்தப் பெண் பத்தி எழுத்தளரது ஆக்கங்கள் காத்திரமானவை என்பதனை ஏற்றுகொள்ள சக ஆண் ஊடகவியலாளர்கள் மறுதலித்துள்ளனர்.

இலங்கை அரசியல் நடப்பு விவகாரங்கள் தொடர்பில் ஆண் ஊடகவியலாளர்களுக்கு நிகராக செய்தி வெளியிடக்கூடிய வல்லமை குறித்த பெண் ஊடகவியலாளரிடம் காணப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பேச்சாளர்கள் மற்றும் நிபுணர்கள் பட்டியலில் ஆண்களே அதிக ஆதிக்கம் செலுத்துவதாக 2005ம் ஆண்டில் உலக ஊடக கண்காணிப்புத் திட்டம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் [www.whomakesthenews.org] தெரிவிக்கப்பட்டுள்ளது.

86 வீதமான பேச்சாளர் பதவிகளை ஆண்கள் வகிக்கின்றனர் மேலும் சகல நிபுணத்துவ பணிகளிலும் 83 வீதமான ஆண்களே பதவி வகிப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆண்களைவிட (8%) பெண்கள் இரட்டிப்பாக (19%) பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே பெண் ஊடகவியலாளர்கள் என்ற ரீதியில் இலங்கை பெண் ஊடகவியலாளர் வலைமைப்பைச் சேர்ந்த நாம் ஊடகங்களில் பெண்களின் பங்களிப்பு தொடர்பாக முக்கியமான பங்களிப்பை நல்க வேண்டிய இன்றியமையா அவசியப்பாட்டை உணர்ந்தோம்.

ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ஒரே மாதிரியாக பெண்கள் சித்தரிக்கப்படுதனை வாசித்தாலோ, ஒளி,ஒலிபரப்புச் செய்தாலோ அதற்கு எதிராக சகல சந்தர்ப்பங்களிலும் அறிக்கைகளை வெளியிடுவதற்கு நாம் தீhமானித்த்துள்ளோம்.

ஊடகவியலாளர் ஒன்றியங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பெண் ஊடகவியலாளர்களாக காணப்பட வேண்டுமென இலங்கை பால் நிலை சமத்துவம் தொடர்பான ஊடக நிறுவனம் 2006ம் ஆண்டு வெளியிட்ட திட்ட வரைவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் இந்த நிலைமை யதார்த்தத்திற்கு புறம்பானதாகவே காணப்படுகின்றது.

மிக மிக அரிதாகவே பெண் ஊடகப்பேச்சாளர்களை ஊடகங்களில் காணக்கூடிய நிலைமையை நாம் அவதானித்தோம். இதன் விளைவாக பெண் ஊடகப் பேச்சாளர்களைக் கொண்ட ஓர் கையேட்டை வெளியிடும் பணியை நாம் ஆரம்பித்துள்ளோம்.

சொனாலி சமரசிங்க தொடர்பாக குறிப்பிடுவதுற்கு நான் விரும்புகின்றேன். சொனாலி சமசிங்க தி மோர்னிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியர். பால் நிலை சமத்துவம் என்ற தொனிப் பொருளில் 2008 மே மாதம் நடைபெற்ற செயலமர்வில் “நல்ல ஊடகம் பால்நிலை வேறுபாடுகளை அறியாது” என்ற தலைப்பில் தமது கருத்துக்களை முன்னிலைப்படுத்தியிருந்தார்.

சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான அவரது கரிசனைகளுக்காக மிக மோசமான வகையிலான மின் அஞ்சல்கள் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சொனாலி லெட்சுமி சமரசிங்க என்ற பெயரும் சூட்டப்பட்டது. மாற்றுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாத சிலரின் காழ்ப்புணர்ச்சி இதன் மூலம் தெளிவாக புலனாகியது. இந்த தேசத்தில் சிங்களவர் ஒருவர் ஏனைய சமூகங்கள் பற்றி குரல் கொடுத்தால் அவர் மீது தேசத் துரோக முத்திரை குத்தப்படுகிறது. இவ்வாறான ஓர் ஊடக கலாச்சாரத்திலேயே நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை நான் இரண்டாவது உதாரணமாக முன்வைக்க விரும்புகின்றேன். கருணா அம்மானிற்கு இராஜதந்திர கடவுச் சீட்டை அரசாங்கம் வழங்கியமை தொடர்பாக சில கட்டுரைகளை நான் வெளியிட்டேன். அரசாங்க இணைய தளமொன்றில் என்னை மிகக் கடுமையாக விமர்ச்சித்திருந்தனர். பெண் என்ற ரீதியில் எனது தொழில்சார் பயணம் இழிவுபடுத்தப்பட்டது.

எனது தகைமைகள், எனது இயலுமை, எனது சாதனைகள் மிகவும் கேவலமாக விமர்சிக்கப்பட்டன. எனது உள்ளாடைகளைக் கூட இவர்கள் விட்டு வைக்கவில்லை.

இந்த விடயங்கள் பற்றி உங்களது சிந்தனைச் சிறகுகளை விரித்து சிறகடிக்க அவகாசமளிக்கும் வகையில் நான் எனது கருத்துப் பரிமாறலை இத்துடன் முடிவுறுத்திக் கொள்கின்றேன்.

நன்றி

[துஷியந்தினி கனகசபாதிபதிப்பிள்ளை, இலங்கை பெண்கள் ஊடக வலையமைபப்பின் கூட்டு இணைப்பாளர் ]

http://ootru.com/neer/2008/08/post_32.html#more

Advertisements