நக்கீரர்களும் நக்குபவர்களும் – நையாண்டிப் புலவர்

Posted on May 30, 2013

0


நக்கீரர் என்ற ஒரு புரதான ஊடகவியலாளரை அனைவருக்கும் தெரிந்திருக்கும். ‘ நெற்றிக்கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே !! என்று அந்தச் சிவபெருமானுக்கே சவால் விடுத்த ஆள். ஊடகவியலாளர்கள் மீது ஏவப்படும் காண்டுமிராண்டித்தனமான வன்முறையை வெளிப்படு;த்திய ஆள் எங்கட சிவ பெருமான். தான் சொன்ன கருத்துச் சரி என்று கூற வைக்க முயன்றும் தோற்றுப் போனதால் அந்த நக்கீரனையே பொசுக்கியவர். பின்னர் தான் திருவிளையாடல் செய்ததாகச் சமாளித்து நக்கீரரை உயிர்ப்பித்த வரலாறு உலகறியும்.

அந்தக் காலத்தில் ஊடகவியலாளர்களாக பெரும்பாலும் புலவர்களே இருந்துள்ளார்கள். நாட்டின் நிலமையை மன்னனுக்கு  நயமாக எடுத்துக்கூறுவதில் அவர்களுக்கு நிகர் அவர்களேதான். இதே போல் மக்களுக்கும்; அரசன் நிலைமையை  சரியான முறையில் பாடல்கள் மூலம் எடுத்துக் கூறியுள்ளனர். அந்தக் கால ஊடகவியலாளர்களின் திறமை பற்றி ஏராளமான நகைச்சுவை, சொற்சுவைப் பாடல்கள் இருக்கின்றன.

அந்தக் காலத்தில் தனி நபர்களாக இருந்து செய்திகள் சொன்ன ஊடகவியல் தற்போது நிறுவனங்களாக வளர்ச்சி அடைந்து ஒரு ஜனநாயக நாட்டின் முக்கிய தூணாக வளர்ந்துள்ளது. ஊடகங்கள் நினைத்தால் ஒரு அரசாங்கத்தையே  தலைகுப்புற விழ வைக்கும் நிலைக்குக் கொண்டுவரலாம் என்பது தற்போதய நிலை.

தற்போதய உலக அரங்கில் ஊடகங்கள் பொதுவாக அச்சு ஊடகங்கள், இலத்திரனியல் ஊடகங்கள் என  இரு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. மக்களுக்கு செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் மிக முக்கிய பங்காற்றுவது தற்போது இலத்திரனியல் ஊடகங்களே ஆகும். அதிலும் இணையத்தள  ஊடகங்களின் பங்கு தற்போது முக்கிய இடத்தை அடைந்துள்ளது. இனி வருங்காலம் அச்சு ஊடகங்களின் பெறுமதி அற்றுப் போகத் தொடங்கும் நிலைக்கு அச்சு ஊடங்களான பத்திரிகைகள், சஞ்சிகைகள் தள்ளப்பட்டுள்ளன.

இலங்கை ஊடகங்களின் நிலை

இலங்கையில் உள்ள ஊடகங்கள் பொதுவாக நடுநிலையான செய்திகளை வெளியிடுகின்றனவா என்பது சந்தேகமே. இலங்கையில் உள்ள ஒவ்வொரு ஊடக நிறுவனங்களும் ஏதோ ஒரு கட்சியைச் சார்ந்தோ அல்லது ஒரு பலமான அமைப்பைச் சார்ந்தோ தொழிற்பட்டுக்கொண்டு இருக்கின்றன. அந்த ஊடகங்களின் அடித்தளம் பலமான ஒரு அமைப்பின் முதுகிலேயே கட்டப்பட்டுள்ளது. அந்த ஊடகம் கட்டப்பட்டிருக்கும் அடித்தளத்தின் முதுகு எங்கு செல்கின்றதோ அங்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இந்த ஊடகங்களுக்கு அமைந்துள்ளது.

சிங்களவர்கள், தமிழர்கள் ஆகிய இனங்களுக்கிடையேயான பிரச்சனைகள் ஊடகங்களால் சரியான முறையில் நடுநிலையாக கூற முடியாது போனதால் இலட்சக்கணக்கான உயிர்களையும் பொருட்சேதத்தையம் கொண்டு வந்தது. சிங்கள, தமிழ், முஸ்லீம்களுக்கிடேயே ஏற்பட்ட மனக் கசப்புக்களை நீக்குவதற்கு ஊடகங்கள் சரியான முறையில் தொழிற்படவில்லை.

தேசிய இனங்களைச் சார்ந்து நிற்கின்ற ஊடகங்கள் தாம் சார்ந்து நிற்கும் இனங்களின் தலைமைகளால் விடப்படும் தவறுகளையும் அத் தலைமை மற்றும் அந்த இனம் ஏனைய இனங்கள் மேல் செலுத்தும் தவறுதலான ஆளுமைகளையும் சுட்டிக்காட்ட முற்பட்டிருந்தால் இலங்கை இன்று இன்னொரு சிங்கப்பூராக மாறியிருக்கும்.

இலங்கைத் தமிழ் ஊடகங்களின் இன்றைய நிலை

இலங்கையில் தமிழ் ஊடகங்களை  முதன்மையாக அரச ஊடகம், தனியார் ஊடகமாக இரு வகையாகப் பிரிக்கலாம்.

அரசாங்க ஊடகமாக இருக்கும் ஊடகங்கள் பெரும்பாலும அரசுசார்பான செய்திகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன. இவ் ஊடகங்கள் தமிழர்களுக்கு எதிராக அரசாங்கத்தால்  மேற்கொள்ளப்படும் எந்தவொரு முறையற்ற செயலையும் தட்டிக் கேட்க மாட்டாது என்பது வெளிப்படை உண்மை.

தமிழ் மக்களிடத்திலே பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளது தனியார் ஊடகங்களே.. ஏனெனில் தமிழர்களின் மத்தியில் அரச ஊடகங்கள் செய்த செய்வினைச் செயல்களினால் பெரும் செல்வாக்கை இழந்து நம்பிக்கையற்ற செய்திகளைத் தருவதாக அவர்களின் மனதில் பதிந்து விட்டது. இதனால் அரச ஊடகங்களின் செய்திகள் தமிழ் மக்கள் மத்தியில் இனி வரும் காலமும் எடுபடமாட்டது என்பது உண்மை.

தமிழர்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் தனியார் தமிழ் ஊடகங்களின் உண்மை நிலை என்ன????

இவர்கள் சரியான முறையில் தமிழ்மக்களுக்கு தாம் அறிந்த செய்திகளைச் சொல்கின்றார்களா??

தம்மால் பெறப்பட்ட செய்தியை இவர்கள் முழுவதுமாக வெளிப்படுத்துகின்றார்களா,,,??

தமிழ்த் தேசியம் எனக் கூறித் திரிபவர்களில் உண்மையான செயற்பாட்டாளர்கள் யார்? பதவிக்காக செயற்படுபவர்கள் யார்?? என்பதை எல்லாம் இவர்கள் அறிந்திருந்தும் அதனை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார்களா??

தமிழ் ஊடகங்களின் கட்டுப்பாட்டாளர்களாக இருக்கும் விளம்பர நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களுக்கு இவர்கள் அடிபணிந்து அவர்களால் விடப்படும் சமூக, பொருளாதாரத் தவறுகளை சுட்டிக்காட்டாது நிற்கின்றார்களா??

தமிழ் மக்களின் ஜனநாகமுறையை எவ்வாறு சரியான முறையில் பெறலாம் என்பதை சுட்டிக் காட்டாது அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்கு ஏற்ப இவை தொழிற்படுகின்றனவா???

தமக்கு ஆதரவாக நிற்கும் அரசியல்வாதியின் வால்பிடிகளாக இவ் ஊடகங்கள் இருக்கின்றனவா??

இவ்வாறு ஏராளமான கேள்விகள் தமிழ் ஊடகங்களை நோக்கி கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

நையாண்டிப் புலவர்

நியுஜப்னா இணையத்தள குழுவின் குறிப்பு

எந்த ஒரு தமிழ்க் கட்சியோ அல்லது அமைப்பையோ சாராது  தமிழ்ச் சமூகத்தில் அக்கறை உள்ளவர்களால் இந்த இணையத்தளம் நடாத்தப்படுகின்றது. நாள் ஒன்றிற்கு சராசரியா இரண்டு லட்சம் வாசகர்களின் பார்வையை இந்த இணையத்தளம் கொண்டுள்ளது. இது அரசாங்கத்தரப்பால் இயக்கப்படுகின்றதா?? அல்லது தமிழ்தேசியத்தில் அக்கறை உள்ளவர்களால் இயக்கப்படுகின்றதா??? யாருடைய பொறுப்பில் இது இருக்கின்றது என்பதை எல்லாம் ஏனைய தமிழ் ஊடகங்கள் அலசி ஆராய்ந்தலும் கிடைக்கக் கூடிய தகவல் பூச்சியமாகவே இருக்கும்.

இந்த இணையத்தளத்தினை ஆபாச இணையத்தளம் அல்லது ஊடகதர்மம் இல்லாத இணையத்தளம் என தங்கள் கை சுட்டுவிரலைச்  சுட்டிக் காட்டுவர்களுக்கு  மீதமுள்ள விரல்கள் தங்களைச் சுட்டி நிற்பதை அவதானிக்க வேண்டும்.

இந்த இணையத்தளம் ஊடகவியலாளர்களுக்காகவோ அல்லது அவர்களின் தர்மத்திற்காகவோ ஆரம்பிக்கப்படவில்லை. இது தமிழ் மக்களுக்கு ஒளிவுமறைவில்லாத தகவல்களை வழங்கவே ஆரம்பிக்கப்பட்;டதாகும்.  எங்களுக்குக் கிடைக்கும் செய்திகளை நாம் நிச்சயம் எந்தவித மாறுதல்களும் இல்லாது எமது வாசகர்களுக்குக் கொடுப்பதற்கு தயங்கமாட்டோம்.
இந்த இணையத்தளத்தை குறை கூறுபவர்கள் நிச்சயம் சமூகத்தவறுகள் செய்பவர்களாகவோ அல்லது வளர்ச்சியைப் பொறுக்க முடியாத ஒரு ஊடகத்தைச் சார்ந்தவராகவோ தொழிற்படுவார்கள் என்பதை வாசகர்களாகிய நீங்களே அறிந்து கொள்ளலாம். 

நியுஜப்னா இணையத்தள குழு

http://www.newjaffna.com/fullview.php?id=MTYxMTQ=

 

Advertisements