ஊடகங்களும் விளம்பரங்களும்: பரிணாமம் பெறாத விளம்பரங்கள்

Posted on October 3, 2012

0


 இரா. மகாதேவன்

ஓர் உயிரி புவியின் தகவமைப்புக்கு ஏற்ப தன்னைப் படிப்படியாக மாற்றிக் கொள்வதை பரிணாமம் என்றும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் உடனடி விளைவுகளை திடீர் மாற்றம் என்றும், தனக்கு ஒத்துவராத ஒரு சூழலை எதிர்த்து நிற்பது அல்லது அதை தனக்கு ஏற்றவாறு மாற்ற நடைபெறும் சிரமமிகு போராட்டம் புரட்சி என்றும் அறியப்படுகின்றன.

ஆனால், அன்றைய காலம் தொட்டு இன்று வரை எந்தச் சூழ்நிலையிலும் பரிணாம வளர்ச்சி பெறாமல் இருப்பவை அரசு, அரசியல் சார்ந்த, தனிநபர்களின் ஊடக விளம்பரங்கள்தான்.

குறிப்பாக, அச்சு ஊடகமான நாளிதழ்களில் அண்மைக் காலமாக வெளியாகும் விளம்பரங்கள் எண்ணிலடங்காதவை. இவற்றால் விளம்பரங்களை அளிப்பவர்களோடு, ஊடகங்களும் பயனடைகின்றன. ஆனால், இந்த விளம்பர இடங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்றால் இல்லை.உதாரணமாக, ஒரு திட்டத்தைத் தொடக்கிவைப்பதற்கான விளம்பரம் வெளியாவதாக வைத்துக்கொள்வோம். அது மத்திய அரசு விளம்பரமாக இருந்தால் பிரதமர், அந்தத் துறைக்கான மத்திய அமைச்சர், இணை அமைச்சர் படங்கள் இவற்றோடு, திட்டம் தொடங்கப்படும் இடம், நேரம், தொடக்கிவைப்பவர் ஆகியோரின் பெயர்களோடு அந்த விளம்பரம் வெளியாகிறது. இதே நிலைதான் மாநில அரசின் விளம்பரத்திலும் உள்ளது.

ஆனால், இதற்குப் பதிலாக இந்த விவரங்களை நான்கில் ஒரு பங்காகச் சுருக்கிவிட்டு, வரையறுக்கப்பட்ட மீதமுள்ள இடத்தில் இந்தத் திட்டம் எந்த நிதியில் செயல்படுத்தப்படுகிறது. திட்ட ஒதுக்கீடு எவ்வளவு, இதில் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு எவ்வளவு, வெளிநாட்டு முதலீடு என்றால், எந்த நாட்டிடம் இருந்து கடனாக அல்லது மானியமாக எவ்வளவு பெறப்பட்டுள்ளது. எத்தனை ஆண்டுகளில் அந்தக் கடன் அடைக்கப்பட வேண்டும். அதற்கான வட்டி எவ்வளவு, மக்களின் பங்களிப்பு இந்தத் திட்டத்தில் உண்டா? அவ்வாறென்றால், அவர்களிடமிருந்து எந்த வகையில் இந்த நிதி திரட்டப்பட உள்ளது? இந்தத் திட்டம் உத்தேசமாக எவ்வளவு காலத்தில் செயல்படுத்தப்படும்? இதில் நேரடியாக, மறைமுகமாகப் பயன்பெறுவோர் எவ்வளவு பேர் போன்ற விவரங்களை வெளியிடுவதுதான் பயனுள்ளதாக இருக்க முடியும்.

இதுபோன்ற விவரங்கள் பொதுமக்களுக்கு மட்டுமன்றி, அரசுகளுக்கும் மிகப் பயனுள்ளதாக அமையும். உதாரணமாக, அரசியல் கட்சி, தனியார் அமைப்புகளின் பேரணி, கோஷ்டி மோதல், பந்த், ஜாதி மத மோதல்கள், தீவிரவாதச் செயல்கள் போன்றவற்றின்போது, பொதுமக்களுக்கான அரசு நிறுவனங்கள், திட்டச் செயல்பாடுகள் சேதப்படுத்தப்படும்போது, அதனால் ஏற்பட்ட இழப்பு எத்தகையது, இதனால், அரசுக்கு, மக்களுக்கு ஏற்படும் சுமை, பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, மீண்டும் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆகும் காலம் போன்றவற்றை அரசு சொல்லாமலே மக்களுக்குத் தெரிந்துவிடும். இதன்மூலம், அரசு உடைமைகளைக் காப்பதில் தங்களுக்கு உள்ள பங்கை மக்கள் உணர நேரிடும்.

அடுத்ததாக, விளம்பரத் தட்டிகள். இவை ஒரு காலத்தில் சுவர் விளம்பரங்களாகத் தொடங்கி, பிறகு வண்ணக் காகிதங்களில் அச்சிடப்பட்ட பெரிய போஸ்டர்களாகவும், பிறகு தட்டி ஓவியங்களாகவும், இப்போது டிஜிட்டல் பேனர்களாகவும் உருமாறியிருக்கின்றன. இவை அந்தத் தொழில்சார்ந்த வளர்ச்சியாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவற்றின் பயன்பாடும் அன்றுதொட்டு, இன்றுவரை மாறவில்லை.

பொதுமக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், திட்டங்களை வகுப்பதற்கும், செயல்படுத்துவதற்கும், அவற்றைத் தொடக்கிவைத்து செயல்பாட்டை கண்காணிக்கவும் கடமைப்பட்டவர்கள். அந்தப் பணிகளை அவர்கள் செய்ய வரும்போதுகூட நாம் பெரும் பொருள் செலவில் அவர்களை வரவேற்பது அவசியமா? நாகரிகம் கருதி செய்யப்படுவதாக வைத்துக் கொண்டாலும், அதிலும் சில நடைமுறைகளைப் பின்பற்றலாமே?

உதாரணமாக, இந்தப் பதாகைகளில் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு இந்த வரவேற்புச் செய்தியைக் கூறிவிட்டு, நாம் வரையறுத்த மீதமுள்ள இடத்தில் உள்ளூர் பகுதியில் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களில் உள்ள குறைபாடுகள், கோரிக்கை விடுக்கப்பட்டு செயல்படுத்தப்படாத திட்டங்கள், நீண்ட காலத் திட்டங்களைத் தொடங்கத் தேவையான யோசனைகள் போன்றவற்றை நாகரிகமாக, வருகை தருவோரின் மனம் புண்படாதபடி தெரிவிக்க முடியும்.

மேலும், நம் நாட்டுக்கு அல்லது மாநிலத்துக்கு வருகை தரும் ஒருவரை நமக்குப் பிடிக்கவில்லையென்றால், அதை வெளிக்காட்ட அவருக்கு கறுப்புக்கொடி காட்டும் கலாசாரத்தை விடுத்து, வருகை தரும் நபருக்கு தெரிந்த மொழியில், அவரின் செயல்பாடுகள் நம்மை எந்தவிதத்தில் பாதித்திருக்கிறது, அதனால் நமக்கு ஏற்பட்ட இழப்பு என்ன, இந்த நிலையில் எங்கள் நாட்டிற்கு வருகைதரும் உங்களை எங்களால் அகமும், முகமும் மலர வரவேற்கமுடியாததற்கு எங்கள் அமைப்பு சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். உங்களின் செயல்பாடுகள் எங்களைப் புண்படுத்தாத வகையில் வருங்காலத்தில் அமையும் என நம்புகிறோம் என அச்சு ஊடக விளம்பரங்கள் வாயிலாகவோ அல்லது அரசின் அனுமதி பெற்று விருந்தினரின் பார்வையில் படுமாறு விளம்பரப் பதாகையாகவோ வைக்கலாம். “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்றுதானே நாம் உலகினருக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இதை நாம் மட்டும் மீறுவது எங்ஙனம்.

பரிணாமம் என்பது புதுமை படைப்பதோ, புரட்சி செய்வதோ அல்ல. அது வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப கொஞ்சம்கொஞ்சமாக நம்மை நாமே செதுக்கிக் கொள்வது போன்றது. இனியாவது விளம்பரங்கள் பரிணாம வளர்ச்சி பெற, நடைபெறவுள்ள விழாக்கள் வழிகாட்டட்டும்.

நன்றி: தினமணி –  24.09.2010

Advertisements