அச்சுவலைச் சந்திப்பு 01

Posted on February 3, 2011

0


 சந்திப்புஅச்சுவலைச் சந்திப்பானது நவம்பர் மாதம் 2ஆம் திகதி மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணங்களால் மாலை 4.06 மணிக்கு ஆரம்பமானது. இருக்கிறம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் அருளானந்தம் சஞ்சீத் “மன்னிக்கவேண்டும்” என ஆரம்பித்து தனது அறிமுக உரையினை நிகழ்த்தி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார். அதனைத்தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த பதிவர்கள் தம்மை அறிமுகம்செய்துகொண்டனர்.

 பின்னர் உரையாற்றிய வைத்தியர், பதிவர் எம்.கே. முருகானந்தன் “வலைப்பதிவுகளை சுதந்திரமான ஊடகங்கள் என்றுகூட குறிப்பிடலாம். ஆனால் முழுமையான சுதந்திரத்துடன் அவற்றை வெளியிட முடியுமா என்பதில் கவனம்கொள்ள வேண்டும். உலகம் முழுவதிலுமுள்ள இணையவாசகர்கள் எமது வலைத்தளங்களை பார்வையிடுகிறார்கள். சில கட்டுப்பாடுகளை பேணுவது பல சந்தர்ப்பங்களில் அவசியமாகிறது. எனக்கு ஆரம்பகாலங்களில் வலைப்பதிவு குறித்த போதிய அறிவு இல்லை. ஏன் இப்போதும் கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வலைப்பதிவுகளை வாசகரிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு திரட்டிகள் பிரதான இடம் வகிக்கின்றன. அவற்றில் தமிழ்மணம், யாழ்தேவி, தமிழ்வெளி போன்ற வலைத்திரட்டிகளை புதிய பதிவர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். என்னைப்பொறுத்தவரை ஏனைய பொழுதுபோக்கு அமிசங்களைவிட வலைப்பதிவுகளில் எழுதுவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஒரு பதிவை எழுதிவிட்டு என்ன பின்னூட்டம் வருகிறது என அடிக்கடி பார்த்த முதற்கால அனுபவங்களை இப்போதும் மறக்க முடியாது. பின்னூட்டங்கள் தான் எம்மை மேலும் மேலும் எழுதத் தூண்டுகின்றன. நான் வைத்தியத் துறையை சேர்ந்தவன். எனக்கு தொழில்நுட்ப அறிவு குறைவு. ஆனாலும் என்னுடைய சொந்த அனுபவங்களை, வைத்தியம் குறித்தான தகவல்களை எமது மக்களுக்கு கொடுப்பதில் நான் பெரிதும் மகிழ்வடைகிறேன். என்னிடம் பல்வேறு விதமான நோய்களையுடைய, குறைபாடுகளையுடைய நோயாளிகள் வருகின்றனர். அவர்களின் பெயர் குறிப்பிடாமல் அவர்களின் தவறுகள், பிரதிபலன்கள், வைத்திய முறைகள் ஆகியன பற்றி பதிவிட்டு வருகிறேன். இனிவரும் காலங்களிலும் நல்ல காத்திரமான பதிவுகளை வழங்கமுடியும் என எதிர்பார்க்கிறேன். இந்தச் சந்திப்பினூடாக பலரை நான் சந்திக்கக்கூடியதாக இருந்தது. அதனால் மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்தும் நல்ல பதிவுகளை வழங்குமாறு கூறி விடைபெறுகிறேன்.

திருமதி சாந்தி சச்சிதானந்தம் (நிர்வாக ஆசிரியர்- இருக்கிறம்)

இணைய உலகைப் பொறுத்தமட்டில் வலைத்தளங்கள் பிரதான இடத்தை வகிக்கின்றன. உலகம் எங்கிலும் பரந்துவாழும் எமது மக்களிடையே எமது கருத்தினை சுதந்திரமாக கொண்டுசெல்லக்கூடியளவுக்கு வலைத்தளங்கள் இருப்பதையிட்டு நான் மகிழ்வடைகிறேன். எனினும் எனக்கு இதில் தனிப்பட்ட ரீதியில் உள்ள கருத்துதான் பெண்களின் பங்களிப்பு என்பது. இங்கு எத்தனை பெண் வலைப்பதிவாளர்கள் வந்திருக்கிறார்கள்? குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய சிலர் தான் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களுடன் ஒப்பிடுகையில் இணையத்தளங்களில் பெண்களின் வருகையும், பங்களிப்பும் குறைவாகவே இருக்கிறது.

விழுதுகள் – ஆற்றல் மேம்பாட்டு மையத்தினூடாகவும் அகவிழி சஞ்சிகையினூடாகவும் எம்மால் இயன்ற பல்வேறு விழிப்புணர்வூட்டல் நிகழ்வுகளை செய்துவருகிறோம். பெண்களும் ஜனநாயக நீரோட்டத்தில் இணையவேண்டும். எத்தனையோ பெண் சாதனையாளர்கள் போல வளரவேண்டும். நல்ல சிந்தனைகள், சமூகம்சார் அனுபவங்கள் போன்றன காத்திரமான ஆக்கங்களை எழுதுவதற்கு வழிவகுக்கின்றன. பெண் எழுத்தாளர்கள் இவற்றை கருத்திற்கொள்ள வேண்டும். இங்கு வருகைதந்துள்ளவர்கள் எல்லோரும் ஏதோ ஒருவகையில் எழுத்தாளர்கள் தான். ஆகையால் சரியான கருத்துருவாக்கத்துடன் கூடிய பெண்களின் தனித்துவத்தினை பேணக்கூடிய பெண் எழுத்தாளர்களை வளர்க்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

 இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோஷனன் – முகாமையாளர் வெற்றி எப்.எம்

இருக்கிறம் நிர்வாகத்தினர், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கும் வலைப்பதிவாளர்களுக்கும் இடையில் எற்படுத்திய சந்திப்பு வரவேற்கத்தக்கது. ஊடகங்கள் எனும்பொழுது பல்வேறு சிந்தனை நோக்கு கொண்ட, பல்வேறு வயதெல்லைகொண்ட, வித்தியாசமான நேயர்கள், வாசகர்கள் இருப்பதால் நடுநிலைமையுடன் நடந்துகொள்ளவேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதுதான் கடமையும்கூட என்று சொல்லலாம். ஆனால் வலைப் பதிவுகளைப் பொறுத்தவரை ஊடகம் என்ற நடுநிலைமைக்கு அப்பால் எமது சொந்த கருத்துக்கள் இதுதான் என்பதை சுயமாக சொல்லக்கூடிய நிலை இருக்கிறது.இதனை பலரும் தவறாக நினைப்பதானது அதில் சரியான தெளிவினைக் கொண்டிருப்பதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறான சந்திப்புகள் நம் மத்தியில் மிக அவசியமாகும். நமது சமூகம், நமது மொழி, நமது கலாசாரம் ஆகியவற்றை எம்மால் முடிந்தளவு காத்திரமாக பேணுவதில் வலைப்பதிவாளர்களுக்கும் பங்குண்டு என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

என்.வித்தியாதரன் – பிரதம ஆசிரியர் – சுடர் ஒளி, உதயன்

நான் ஆரம்பகாலங்களிலிருந்தே வலைப்பதிவுகளை வாசித்துவருகிறேன். குறிப்பாக நமது நாட்டு பதிவர்கள் எவ்வாறு பதிவிடுகிறார்கள், அவர்கள் ஒருவிடயத்தை எந்த நோக்கில் கையாளுகிறார்கள் என்பதை உற்றுக் கவனித்திருக்கிறேன்.இனிவரும் காலங்களில் எமது பதிவர்களின் நல்ல படைப்புகளை எனது பத்திரிகையிலும் பிரசுரிக்க தீர்மானித்துள்ளேன். ஆனாலும் ஒருவிடயத்தை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். இதை எனது வேண்டுகோளாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். தயவுசெய்து தமிழை கொல்லாதீர்கள். தமிழ்க் கொலையாளி என்ற பட்டத்தை வாங்கிக்கொள்ளாதீர்கள். வலைப்பதிவு என்ற பெயரில் பலரும் இன்று அதனை செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒரு வசனம் எழுதும்போது எங்கே “ஒரு” போட வேண்டும் எங்கே “ஓர்”போட வேண்டும் என்பதை இங்கு எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? அதேபோன்று இரு,ஈர் என்ற பதங்கள் இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்? பதற்றம் என்கிறோம். பதட்டம் என்கிறோம். எது சரியானது? பதறு என்ற வினையடியிலிருந்து வருகின்ற சொல்லாதலால் பதற்றம் என்பதே சரி. சைக்கிளில் வந்த நபர், துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றார். என்பதில் உள்ள தவறென்ன?சைக்கிள் என்பதை விடுவோம். அது நாம் ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்திவரும் சொல். வந்த என்பது அஃறிணையை குறிப்பது. இன்று இலங்கையிலுள்ள பல பத்திரிகைகள் இவ்வாறான தவறுகளை சுமந்துதான் வெளிவருகின்றன. ஏன் எமது பத்திரிகையிலும் இடம்பெறுவதை ஏற்றுக்கொள்கிறேன். அங்கு நான்தான் பத்திரிகை ஆசிரியர், எழுத்தாளர், செய்தியாளர்,ஒப்புநோக்காளர் என எல்லாம். சில வேளைகளில் பக்கத்தை வடிவமைப்பதும் நான்தான். செய்திப் பத்திரிகைகளில் எழுதுவதற்கும், சஞ்சிகைகளில் எழுதுவதற்கும், இணையத்தளங்களில் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அதனை நாங்கள் நன்றாக கற்றுக்கொள்ள வேண்டும். தமிழை வளர்க்கிறோம் என்றுகூறி கண்டதையும் எழுதி மொழிக்குற்றம் செய்யாதீர்கள்.

 இதுதான் நம்மை வாழவைத்துக்கொண்டிருக்கும் மொழி. (வந்தார் பிரபாகரன்! என்று தலைப்பிட்ட கதை, இந்திய ஊடக அனுபவங்கள் குறித்து வித்தியாதரன் பேசிய விடயங்களை தனிப்பதிவாக தருகிறேன்)

இளையதம்பி தயானந்தா – ஆசிரியர் – இருக்கிறம்

நான் இல்லாதபோதும் கூட அச்சுவலைச் சந்திப்பு நன்றாக நடந்துகொண்டிருக்கிறது. பதிவர்கள், ஊடகவியலாளர்கள் நான் நினைத்ததற்கும் அதிகமானோர் வந்திருக்கிறார்கள்.

இது வெறும் சந்திப்புதான்.

எமது விழுமியங்களையும் மொழியையும் காக்கவேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இன்றைய உலகம் இணையத்தின் பங்களிப்போடு தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் இணையத்தையும் ஊடகத்தையும் இணைக்கவேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டது.

நாம் எழுதுகிறோம் என்பது முக்கியமில்லை. என்ன எழுதுகிறோம்? எதற்காக எழுதுகிறோம்? நாம் எழுதுவதானால் ஏற்படும் அனுகூலங்கள் என்ன என்பது பற்றி சிந்தித்து எழுதுபவர்களை நான் குறைவாகவே காண்கிறேன். ஆகையால் நமது மொழிசார்ந்த அக்கறையாளர்கள் என்ற வகையில் இதற்குத் தீர்வு காணும் அடிப்படையாக இந்த சந்திப்பினை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

இனியும் நாங்கள் சந்திப்போம். இருக்கிறம் எப்போதும் உங்களுக்காக இருக்கிறது.

இந்திய சஞ்சிகைகளின் ஆதிக்கம் மேலோங்கியிருந்த காலத்தில் பல சவால்களுடன் இந்தப் பெயர்கொண்டு ஆரம்பித்தோம். பத்திரிகைகளையும் இந்திய சஞ்சிகைகளையும் பார்த்துப்பழகிய நம்மவர்களை ஓர் ஈழத்துச் சஞ்சிகை எவ்வாறு கவரவேண்டும்? எவ்வாறான தகவல்களை உள்ளடக்கலாம் என பல மாதங்களாக திட்டமிட்டோம். ஏன் இன்னும்கூட அது நடக்கிறது.

தமிழனாக இருந்து தமிழனுக்காக சஞ்சிகை நடாத்துவதன் சிரமங்களை நான் நிறையவே அனுபவித்திருக்கிறேன். ஆனாலும் நாம் உழைக்கப் பிறந்தவர்கள். ஏதோ ஒருவகையில் இந்தத் துறைக்குள் ஈர்க்கப்பட்டு இன்றுவரை அதற்காக பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.

எழுத்தாளர்கள், படைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நமது சமுதயாம், மொழிக்காக பாடுபடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மீண்டும் பேசிய விடயங்கள் :

முன் அட்டை, இந்திய சினிமா போன்ற விடயங்களை சந்தைப்படுத்தலுக்காக கையாள வேண்டிய கட்டாயம் உண்டு. வருமானத்தினூடாகத்தான் இதனை நடாத்திச்செல்ல முடியும்.

மொழி வழக்கைப் பற்றி நான் குறிப்பிட்டாக வேண்டும். சில எழுத்துப்பிழைகள், தவறுகள் இருக்கின்றன என்பதற்கான நாம் மொழிப்பற்றற்றவர்கள் என்ற நிலைப்பாடு கொள்ளலாகாது.

நமக்கென உரிய மொழிச்சொற்கள் வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை மொழிப்பயன்பாட்டோடு பாதுகாக்க முதுசரம் சஞ்சிகையை வெளியிட நினைத்தோம்.

இனிவரும் காலம் பல நல்ல முயற்சிகளுக்கு வழிசமைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.

நடராஜா குருபரன் – ஊடகவியலாளர்

காலத்தின் சோதனையால் நாம் இன்று பிரிந்துநிற்கிறோமே தவிர மனதால் ஒன்றுபட்டிருக்கிறோம். உங்களை எல்லாம் நேரில் சந்திக்கவில்லையே என்ற ஆதங்கத்தை இருக்கிறம் போக்கியிருக்கிறது. தயானந்தா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னுடன் ஊடகங்களில் பணியாற்றிய நிறைய நண்பர்களை, எனக்குத் தலைமைப் பொறுப்பு வகித்தவர்களை இன்று பார்க்கிறேன்.

தயா அண்ணா கூறியதுபோல எதைவேண்டுமானாலும் எழுதலாம் என்றில்லாமல் நன்றாக சிந்தித்து, அது பொழுதுபோக்கு அமிசமாயினும் சரி, நடைமுறைவிடயங்களாயினும் சரி காத்திரமாக வழங்கப்படல் வேண்டும்.

குறிப்பாக பால்நிலை சமத்துவத்தை நாம் பேணவேண்டும். பல வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் இழிநிலை வார்த்தைப் பிரயோகங்களை நான் பார்த்துவருகிறேன். இது நமது சமுதாயத்தை மேலும் கீழ்தரத்துக்கு தள்ளும் செயலாகும்.

நாம் ஏன் இன்று இவ்வாறிருக்கிறோம்? நமக்கான களம் என்ன? என்றெல்லாம் சிந்திப்பவர்கள் இவ்வாறு எழுதுவதில்லை.

குறிப்பாக ஊடக தர்மம் குறித்து சிந்திப்பவர்கள் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இதனை ஒரு குறையாக நினைத்துக்கொள்ள வேண்டாம். செம்மைப்படுத்தலின் அவசியம் காலத்தின் தேவை என்பதாலேயே நான் இதைக் குறிப்பிடுகிறேன்.

ஒரு விடயத்தை எழுதும்போது அதனால் மற்றொரு சமூகமோ, வர்க்கமோ, மொழியோ அல்லது இதர விடயங்களோ பாதிக்கப்படக்கூடாது. அதனால் நாம் எழுதுவதன் காத்திரத்தன்மையை இழந்துவிடுகிறோம்.

ஒரு தளத்தில் வருவதை அவ்வாறே பிரதிபண்ணி தமது இணைங்களிலும் வலைத்தளங்களிலும் பதிந்துவிடுபவர்கள் இருக்கிறார்கள். நான் எழுதும் பல கட்டுரைகள் பெயர்கூட குறிப்பிடப்படாமல் பல தளங்களில் பார்த்திருக்கிறேன்.

இவ்வாறானவற்றைத் தவிர்த்து தரமான தகவல்களை நாங்கள் வழங்க முன்வரவேண்டும். தமிழால் சாதனை படைப்பதற்கு நிறைய இருக்கிறது. அந்த சாதனை படைப்பதற்கான வழியை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த சந்திப்பு அதற்கான ஏற்பாடாக அமையட்டும்.

எழில்வேந்தன் – ஊடகவியலாளர்

இணையத்தளங்களில் நாம் எழுதும் விடயங்கள் குறித்து இங்கு பல்வேறு கருத்துகள் பரிமாறப்பட்டன. தமிழில் விடப்படுகின்ற தவறுகள் பற்றி வித்தியாதரன் நன்றாக எடுத்துக்கூறினார்.

இவ்வாறான பிழைகளைத் தவிர்த்து முறையாக எழுதவேண்டியது நமது கடமையாகும்.

நான் ஒரு விடயத்தை இங்கு முன்வைக்க விரும்புகிறேன்.
நமது கலாசாரம், நமது மொழி என பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தியச் சொற்கள், இந்திய படங்களை ஏன் நாம் நம்பியிருக்க வேண்டும். இருக்கிறம் சஞ்சிகையில் தற்போது அவ்வாறான போக்கு காணப்படுகிறது. எனக்குத் தந்த சஞ்சிகையில் கூட இந்திய சினிமாவுக்கே அட்டைப்படத்துடன் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறீர்கள்.

இதற்கான விளக்கத்தை நான் இருக்கிறம் நிர்வாகத்தினரிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

…………………………………………………………..
முகுந்தன் (வலைப்பதிவரல்லாமல் ஆர்வத்தின் காரணமாக வந்தவர்), சட்டத்தரணி மர்சூம், அறிவிப்பாளர் முகுந்தன், பிரதீப், ஒளிபரப்பாளர் முஷாரப் என ஒரு பட்டாளமே அங்கு தமது கருத்துக்களை முன்வைத்தது.
அனைவரினதும் பேச்சுக் குறிப்புகள் என்னிடம் இருக்கின்றன.

எனினும் அது இருக்கிறம் சஞ்சிகையின் வளர்ச்சிகான விமர்சனங்கள் என்பதால் நான் இங்கு எழுதவில்லை.
http://puthiyamalayagam.blogspot.com/2009/11/02.html

Advertisements